Home » ஆபீஸ் – 86
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 86

86 அறைகள்

அட்டையில் வந்த சிக்கல் அவனுக்கு அறிவுஜீவிகளின் அடிப்படை பற்றிய மிகப்பெரிய பாடத்தைப் பூடகமாய் போதித்தது. நமக்கு நடக்கிற அசம்பாவிதம், நடப்பதற்கு முன் யாரும் எச்சரிக்கமாட்டார்கள். மிதமிஞ்சிய படிப்பு காரணமாய் அறிவாளிகளாக இருக்கும் அவர்களுக்கும் அநேகமாய் நம்மைப் போலவே அதைப் பற்றித் தெரிந்திருக்காது அல்லது அதைப்பற்றி  யோசித்துக்கூட இருக்கமாட்டார்கள். ஆனால், அது நடந்தபின் என்ன செய்வதென்று நாம் கையைப் பிசைந்துகொண்டு நிற்கையில், அதை அப்படிச் செய்திருக்கக் கூடாது இதை நீ இப்படிச் செய்திருக்கலாம் என்று சொல்வதில் அவர்கள் விற்பன்னர்கள்; நம் மீது இருக்கிற அக்கறையைக் காட்டிலும் நம்மிடம் தங்களை நிறுவிக்கொள்வதிலேயே அவர்களுக்கு அதிக அக்கறை.

எல்லாவற்றையும் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டு திரிகிற அவனது இயல்பு காரணமாய் அட்டையை ஸ்கிரீன் ப்ரிண்ட் பண்ணி அதை லேமினேட் செய்வதைப் பற்றியும் சொல்லியிருந்தான். அதைப் பற்றி அப்போது ஒருவர்கூட ஒன்றும் சொல்லவில்லை.  ஆனால், அவனுக்கு இயல்பாகவே இருக்கிற ஓட்டைவாய் காரணமாக அட்டையில் நேர்ந்த அசம்பாவிதத்தையும் ஊரெல்லாம் சொன்னான். கேட்டவர்களெல்லாம் அச்சச்சோ என்றார்கள். அச்சு சம்பந்தமாக ஏதோ கொஞ்சம் தெரிந்தவர்கள் எல்லாம், ஸ்கிரீன் பிரிண்ட்டிங்குக்கு லேமினேஷன் எதுக்கு. அப்படியே விட்டாலே நல்லா இருக்குமே என்றார்கள். அதை முன்னாடியே சொல்லியிருக்க வேண்டியதுதானே என்று கேட்டிருக்கலாம். ஆனால் அதற்கு ஒரு கேள்வி வரும். இலக்கிய அறிவுஜீவிகளுக்கு எதற்கு பதில் தெரிகிறதோ இல்லையோ, எல்லாவற்றுக்கும் அவர்களிடம் கேள்வி இருந்தது. லேமினேஷன்  ஸ்கீரீன் பிரிண்ட்டிங்கோட பியூட்டியையே கெடுத்துடுமே என்றார்கள். எல்லாம் இப்போது சொல்லுங்கள் என்று உள்ளூர பொருமிக்கொண்டான்.

பரவாயில்லை அவ்வளவு சுருக்கங்கள் இல்லை, பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தம்மைத்தாமே தேற்றிக்கொண்டு நடேஷும் ரவியும் பொறுக்கி எடுத்த சில புத்தகங்களின் மேலும் கீழுமான வெளி முனைகள் லேசாக இரட்டை நாக்குபோல பிரிந்தன. கக்கூஸில் வந்து விழுந்த நாக்குப் பூச்சியையே துடப்பக் குச்சியை வைத்து ஆப்பரேஷன் பண்ணி வளர்ந்தவனான அவனால் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியுமா. பிரிந்த முனைகளை நெருடிப் பார்க்க, அடிபட்ட காயத்தின் காய்ந்த பொறுக்கு போல அவை பிய்த்துக்கொண்டன. ஸ்கிரீன் பிரிண்ட்டிங் பிசுக்பிசுக்கென ஒட்டுகிறதே என அழுத்தி அட்டையோடு லேமினேஷன் பிளாஸ்டிக்கை நீவி விட்டால் – தர்க்க ரீதியாக ஒட்டிக்கொள்ள வேண்டிய அது மாட்டேன் என்று அடம்பிடித்துத் தனியாய் நின்றது. சனியன் வேண்டவே வேண்டாம் என்று மொத்தத்தையும் பிய்த்துப் போட்டால் காய்ந்த சிராய்ப்பின் அடியில் இருக்கும் காயாத ரணம் போல, கையிலேயே தொடமுடியாத அளவுக்கு அட்டை பிசுக் பிசுக்கெனக் கண்றாவியாய் ஒட்டியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!