Home » அமெரிக்காவில் கொலு
உலகம் திருவிழா

அமெரிக்காவில் கொலு

கொலு ஒரு க்ளோபல் திருவிழா ஆகிவிட்டது. அமெரிக்காவில் நவராத்திரியும் தசராவும் இந்த ஆண்டு ஜோராகக் களைகட்டியது. மாநில ஆளுநர் முதல் பைடன் வரை வாழ்த்து சொன்னார்கள்.   நியுஜெர்சி ஆளுநர் மாளிகையில் அடுத்த வருடம் கொலு வைத்துவிடுவார்கள் போலத்தான் தெரிகிறது.

அக்டோபர் வந்தாலே, அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்குத் திருவிழாக் களை வந்துவிடும். தசராக் கொண்டாட்டம் ஒன்பது தொடர் இரவுகள் என்பது ஒன்பது வார இறுதிகளாகி, மிகப் பெரிய அரங்குகளை வாடகைக்கு எடுத்து கர்பாவும் தாண்டியாவும் ஆரம்பமாகி விடும். இசையும் உணவும், ஆட்டமும் வண்ண வண்ண உடைகளுமாக இந்தத் திருவிழாவிற்குச் சென்று வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் திரும்புவோர் உண்டு. பாலிவுட்டில் இருந்து வரும் இசைக்கலைஞர்களும் பாடகர்களும் விழாவைச் சிறப்பித்து இராவணன் தகனம் வரை நடக்கும். அமெரிக்காவில் பிறந்து வளரும் இளைஞர்களுக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் இக்கொண்டாட்டங்கள் மிகப் பிடித்தமானவை. நிறையக் கடைகளும், கலைப்பொருட்களும் ஒருபுறம். உடல்நலப் பரிசோதனை முகாம்கள் மறுபுறம். தீபாவளிக் கொண்டாட்டம் ஆரம்பமாவது இங்கேதான். அமெரிக்கர்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நன்றி நவிலல் விடுமுறையில் ஆரம்பிப்பது போல.

ஆனால், இங்கே தமிழர்கள் கொண்டாடும் நவராத்திரியே வேறு. ஆட்டமும் துள்ளலிசையும் இல்லாமல், ஒரு சமயவழிபாடு வழியாக, பெரும்பாலும் இறைவழிபாட்டின் நீட்சியாகவே தொடர்கிறது.

தங்கள் குடும்ப வழக்கப்படி, விடாமல் செய்யவேண்டும் என முனைப்புடன் சிலர். இதுவும் நண்பர்களை எல்லாம் பார்க்க, கூடி உரையாட ஒரு வழி எனச் சிலர். ஆர்வமாக இப்போது நிறைய வீடுகளில் பொம்மைக்கொலு நவராத்திரியும் களைகட்டியிருக்கிறது.

உயரம் பார்த்துப் பெட்டிகளை அடுக்கி அல்லது படிகட்ட உதவும் பானிஸ்டர் கட்டைகளை வைத்து இடையே மரப்பலகைகள் வைத்தோ கஷ்டப்படாமல், மடித்து விரிக்க எளிதாக 5 படி, 7 படி என வாகாக கொலுப்படிகளும் இணையத்திலேயே வாங்க முடிகிறது. இந்தியா சென்று வரும் போதெல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கி, உடையாமல் வந்து சேரவேண்டுமே என்று கவலைப்பட்டு கொண்டு வந்த பொம்மைகள் அன்றி, இங்கேயே பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த வருடம் அஷ்டலஷ்மி செட், திவ்ய தேசங்களின் தாயார் செட்டும் புது வரவு என ஒரு சிகாகோ தோழி சொன்னார்.

பொட்டு வைத்துக்கொண்டு வெளியே வரும் பெண்களைச் சுட்டுக் கொண்டிருந்த டாட்பஸ்டர் காலம் மாறி, ‘இப்ப உங்க நவராத்திரி சீசனா?’ என்று கேட்கும் அளவுக்கு அமெரிக்கர்களும் தேறிவிட்டார்கள்.

இந்தியக் காய்கறிக் கடைகளிலும் வெற்றிலை, மாவிலைத் தோரணம் முதல் அனைத்தும் கிடைக்கிறது. இன்னும் கொஞ்சகாலம் போனால் அன்றன்றைய நிவேதனத்துக்குத் தேவையான பாயசம், சுண்டல் முதலியவைகூட நவராத்திரி செட்டாக உறைய வைத்த நிலையில் கிடைக்கலாம்.

அட்டைப்பெட்டியில் அடைத்துக் குளிரூட்டப்பட்ட மல்லிகை முல்லைப் பூச்சரங்களும் கிடைக்கிறது. நாள், நட்சத்திரம், நவராத்திரி நாள் சேலைக்கான நிறம் எல்லாம் பார்த்து தெரிய இணையம் இருக்கவே இருக்கிறது.

நவராத்திரி வாரங்களில் அலுவலகமும் உண்டு என்பதால், அவரவர் வசதிக்கேற்ப நண்பர்களை அழைக்கிறார்கள். பெரும்பாலும், குடும்பம் முழுவதுமே சென்று ஒரு சோஷியல் கெட் டு கெதராக மாறிவிடுகிறபடியால், சுண்டல் மட்டும் என்பது போல் அல்லாமல், முழுச் சாப்பாடே கொடுக்கப்படுகிறது. நீண்ட நேரம் இருந்து உரையாடிக் களித்து மகிழும் குடும்பங்கள், நவராத்திரிக் கொலு அழைப்பை இன்னொரு கொண்டாட்டமாக்கி, அரசியல் முதல் அப்போதைய சமூகப் பிரச்சினைகளைப் பேசி, உணவு உண்டு, தொலைக்காட்சி பார்த்துப் பேசி மகிழ இது நல்ல வடிகாலாகிறது.

பாரம்பரியப் பொம்மைகளுடன் ஆரம்பித்தாலும் இப்போதெல்லாம் இங்கேயும் ஒரு கருப்பொருள் (theme) சார்ந்து கொலு அமைத்து அசத்துகிறார்கள். சிலர் நிலவறையை இதற்காகவே பயன்படுத்துவதால் இடப்பிரச்சினையும் இல்லை.
என் அலுவலக சகா ஒருத்தியின் வீட்டில் இந்த முறை குரு/ஆசிரியர் என்ற கருப்பொருளில் ஆதாரக் கொலுவைச் சார்ந்து பல சின்னச் சின்னக் குறுங்கதைகளை பொம்மைகளாலும், அதை விவரித்து எழுதி வைத்திருந்தாள். இது கொலுவிற்கு வரும் அமெரிக்க நண்பர்களுக்குப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். சிலர் வீட்டில் அமெரிக்க நண்பர்களையும் அழைப்பது உண்டு.

நான் முன்பொருமுறை, (கொலு வைத்த காலத்தில்) தேவியர் எப்படி மூன்றுவிதத் துறைகளை எடுத்துக்கொண்டு செவ்வனே பணிபுரிகிறார்கள் என பணிகளைப் பங்குபிரிக்கும் உத்தியைப் பற்றி என் ஆப்பிரிக்க, அமெரிக்கத் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, கிறித்துவ மதத்திலும் கார்டியன் ஏஞ்சல்கள் பலர் சின்னச் சின்ன துறைகளைக் கையாள்வதாகத் தெரிய வந்தது. தொலைந்து போன பொருளை தேடித்தரும் படிக்காசு அம்மன் போல அங்கேயும் அதற்காக ஒரு கார்டியன் ஏஞ்சல் உண்டு.

தென்னாப்பிரிக்காவிலும் பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வதுண்டு. இதேபோல யாம்கிப்பூர் முன், யூதர்களும் கன்னிப்பெண்களை அழைத்து அவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கும் வழக்கமும், செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் விரதம் இருப்பதும் உண்டு.

இன்னொரு தோழியின் சிகாகோ வீட்டில் தினமும் சுண்டல் செய்து நிவேதனம் செய்வது  உண்டென்றாலும், பலரது வீட்டில் வேலைக்கும் சென்று இதையெல்லாம் திட்டமிட்டுச் செய்வது கடினம் என்பதால், அம்மனுக்கும் பொம்மைகளுக்கும் பாலும் பழங்களும் மட்டும். விருந்தினர் வருகைதரும் நாட்களில் மட்டும் பலவகை உணவுகள் செய்யப்படும்.

மடிசார் கட்டிக்கொள்ளும் வழக்கம் பலரிடம் இல்லை. ஆனால், பலவகை மாநிலத்தில் இருந்து வந்த நெசவுத்தொழிலின் நேர்த்தியைக் காட்டும் வண்ணம் சேலைகள் அணிந்து தோழிகள் வீட்டிற்குச் செல்வது உண்டு.

எல்லாக் கொண்டாட்டங்களும் வார இறுதியில்தான். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு தோழியின் அழைப்பை ஏற்று அங்கே செல்வதானாலும் நீண்ட தொலைவு காரில் செல்ல வேண்டியிருப்பது ஒரு சின்னச் சங்கடம்.

குழந்தைகளுக்கு பள்ளியில் நிறைய வீட்டுவேலைகள், தேர்வு. விளையாட்டுக்காக வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால் நேரத்திற்கு வந்து விளக்கேற்றி நிவேதனம் செய்வதும் கடினம். அதிக பணிச்சுமை இருக்கும் நாட்களிலும் கூட, மதக்காரணங்களுக்காக விடுமுறை எடுக்கலாம் என்றாலும்கூட பலர் அதை விரும்புவதில்லை.

பதின்மவயதில் உள்ள குழந்தைகள் பலர் பொம்மைகளைக் காண்பதில் அதிக ஆர்வமோ, சுண்டல் பெறுவதில் ஈடுபாடோ முன்போலக் காண்பிப்பது இல்லை. எல்லாமும் எல்லா நேரமும் எப்போதும் கிடைக்க வசதி இருப்பதாலும், ஊரைவிட்டுத் தனியாக நாம் ஒரு பண்டிகையைக் கொண்டாடுவதில் உள்ள சின்ன அசவுகரியத்தாலும் அந்தப் பரபரப்பும், விழாவுக்கான குதூகலமும் இல்லை.

வந்தவர்களுக்குக் கொடுக்க வசதிக்கேற்றார்போல டாலர் கடையிலோ வால்மார்ட் அல்லது இந்தியாவின் கலைப்பொருட்கள் விற்கும் கடையிலோ வாங்கி, கொடுப்பது உண்டு. குழந்தைகளுக்கும் பரிசுப்பொதி உண்டு. முன்பெல்லாம் பிளாஸ்டிக் வெற்றிலை அல்லது குங்குமம் இந்தியாவில் இருந்து வாங்கிவந்து வைத்திருப்பார்கள், அதைக்கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது நல்ல வெற்றிலை இங்கேயே கிடைகிறது.

சரஸ்வதி பூஜை. விடுமுறை இல்லாவிடில், அலுவலகம் சென்று இன்று படிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது. அதே போல பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமலும் இருக்க முடியாது. எனவே அன்றைய வகுப்பிற்குத் தேவைப்படாத புத்தகங்களை எடுத்து பூஜையில் வைத்து அவசர அவசரமாகக் காலைப் பேருந்து வருவதற்குள் எல்லாம் முடித்து ஓட வேண்டும். விடுமுறை நாளில் வந்தால், ஆலயங்களில் ஒலிபெருக்கியில் ஒருவர் சொல்ல மற்றக் குழந்தைகள் சரஸ்வதியை ஆராதிப்பதைக் காணலாம்.

விஜயதசமி என்பதை இந்தியர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதே பலருக்குக் குழப்பம். ஆயுத பூஜையாக சிலரும், இராவணனை இராமர் வதம் செய்த நாளாகப் பலரும், மகிஷனை வதம் செய்த நாளாகவும் கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு குழப்பமாக அன்று புதியதாய் எதையும் கற்கத் தொடங்குதல் நலம் என அவரவர் இசைப்பள்ளிக்கோ நடனப்பள்ளிக்கோ குருதட்சணையுடன் செல்ல உகந்த நாள். நாமே குழப்பத்தில் இருந்தால், அமெரிக்கர்களின் குழப்பத்தைச் சொல்லவா வேண்டும்?

பண்டிகைக் கொண்டாட்டங்கள், பாரம்பரியத்தைக் காக்கின்றனவோ இல்லையோ, சமூக உறவுகளைக் கடல் கடந்தும் மேம்படுத்த உதவுகின்றன. சாதி இன பேதம் இல்லாமல் எல்லாரும் கொலு வைத்துக் கொண்டாடி மகிழ்வதை இங்கே பார்க்கும்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

நியூ ஜெர்சியிலிருந்து: பத்மா அர்விந்த்
padma.arvind@gmail.com

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!