“வாராரு வாராரு அழகரு வாராரு” என்ற தேவாவின் திரைப்பாடலும், வைகைக் கரையின் முழங்கால் மட்ட நீரில் இளைஞர்கள் நடனமாடும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸும்தான் இப்போதெல்லாம் சித்திரைத் திருவிழா என்றதும் நினைவில் வருகிறது. இன்ஸ்டாகிராம் காலத்திற்கு முன்பே மதுரையும் அழகரும் பரிச்சயம் என்பதால் வேறு என்னவெல்லாம் நினைவில் இருக்கிறது எனச் சிறிது யோசித்துப் பார்க்கலாம்.
நாற்பதாண்டுகளுக்கு முன்பு சித்திரைத் திருவிழா என்பது மிக எளிமையாக நடக்கும். தொட்டில் ராட்டினத்தில் சுற்றுவதே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அதிகபட்ச விருப்பமாக இருக்கும். ராட்டினத்தில் ஒரு தொட்டிக்கு இருவர் எனப் பொறுமையாக ஏற்றி, அனைத்துத் தொட்டிகளும் நிறைந்தவுடன் சுற்றத் தொடங்குவார்கள். சீக்கிரம் அனைத்துத் தொட்டிகளுக்கும் ஆள் வந்துவிட வேண்டுமெனப் பிரார்த்தித்தபடி மேல் தொட்டியில் குச்சி மிட்டாய் சப்பிக்கொண்டு ஒரு கூட்டம் உட்கார்ந்திருக்கும்.
திருவிழாவையொட்டி தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடக்கும். மின்சாரத்தில் சுற்றும் ராட்சத ராட்டினமும், பெரிய அளவிலான அப்பளமும் அப்போதே பிரபலம். ராட்சத ராட்டினத்திற்குக் கட்டணம் அதிகம். கடன் வாங்கி வந்தாவது அதில் ஏறிச் சுற்றுவோர் பலருண்டு.
Add Comment