Home » டாக்டர் பிராடியின் அறிக்கை
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

டாக்டர் பிராடியின் அறிக்கை

ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹெஸ்
ஆங்கில மொழிபெயர்ப்பு: ஆசிரியருடன் இணைந்து நார்மன் தாமஸ் டி ஜியோவேனி
தமிழில்: ஆர். சிவகுமார்


என்னுடைய நெருங்கிய நண்பர் பால் கெய்ன்ஸ் எனக்காகத் தேடிப் பிடித்துத் தந்த லேன் என்பவருடைய “அரேபிய இரவுகளின் கேளிக்கைகள்’’ (லண்டன், 1839) என்ற புத்தகத்தின் ஒரு தொகுதியின் பக்கங்களுக்கிடையே, நான் கீழே படியெடுத்துத் தரப்போகும் கையெழுத்துப் பிரதியை நாங்கள் கண்டுபிடித்தோம். தெளிவான கையெழுத்து – இந்தக் கலையை நாம் மறக்க தட்டச்சுப் பொறிகள் நமக்கு தற்போது உதவி வருகின்றன – கிட்டத்தட்ட அந்தப் புத்தகம் வெளிவந்த காலத்திலேயே அப்பிரதி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. லேனின் படைப்பு மிக விரிவான விளக்கக் குறிப்புகள் நிறைந்தது என்பது எல்லோர்க்கும் தெரிந்ததுதான். எனக்குக் கிடைத்த பிரதியின் பக்க ஓரங்களில் குறிப்புரைகள், கேள்விக்குறிகள், கையெழுத்துப் பிரதியில் காணப்படும் அதே கையெழுத்தில் அவ்வப்போது எழுதப்பட்ட பாடத்திருத்தங்கள் ஆகியவை நிறைய உள்ளன. முகமதியர்களின் பழக்க வழக்கங்களைவிட ஷெஹரஸாத்தின் அற்புதக்கதைகள், குறிப்புரைகள் எழுதியவரை குறைவாகவே ஈர்த்திருக்கின்றன என்று நாம் யூகிக்கலாம். கையெழுத்துப் பிரதியின் கடைசிப் பக்கத்தின் அடியில் இறையியலில் சிறப்புப் பட்டம் பெற்ற டேவிட் ப்ராடியின் நேர்த்தியான கையெழுத்து உள்ளது. அவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு சமயப் பரப்பாளர்; அபர்தீனில் பிறந்தவர்; முதலில் ஆப்பிரிக்காவின் மையப்பகுதியில் சமயப்பணி ஆற்றியவர். போர்ச்சுகீசிய மொழி அறிவு இருந்ததால் பிறகு பிரேசிலின் சில உள்பகுதிகளில் பணியாற்றியவர் என்பவை போன்ற சில செய்திகளைத் தவிர அவரைப்பற்றி என்னால் வேறு எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர் இறந்த இடமும் தேதியும் எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் அவருடைய கையெழுத்துப்பிரதி அச்சுக்குத் தரப்படவே இல்லை.

பின்வருவது சற்றே தனித்தன்மையற்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அவருடைய அறிக்கையின் மூலப்பிரதிக்கு மாறுபடாத நகல். பக்க ஓரங்களில் அசிரத்தையாக குறிக்கப்பட்டுள்ள இரண்டு மூன்று விவிலிய சிறு பகுதிகள், யாஹூக்கள் எனப்படும் விலங்குநிலை மனிதர்களின் பாலியல் நடவடிக்கைகள் குறித்த காமம் நிறைந்த ஒரு பத்தி – இதை நம்முடைய பண்பாடுடைய திருச்சபையாளர் விவேகத்துடன் லத்தீனில் எழுதியுள்ளார் – ஆகியவை மட்டுமே விடப்பட்டுள்ளன. முதல் பக்கத்தைக் காணவில்லை.

…குரங்கு மனிதர்களால் சூழப்பட்டுத் தாக்கப்படும் பகுதியில் “ம்ல்க்’’ இனக் குழுவினர் வசிக்கிறார்கள். இவர்களை நான் யாஹூக்கள் என்று பெயரிட்டு அழைக்கிறேன்; காரணம், அவர்களுடைய விலங்கியல்பு என்னுடைய வாசகர்களுக்கு ஞாபகம் வரும் என்பதாலும் அவர்களுடைய கரடுமுரடான மொழியில் உயிரெழுத்துகள் முற்றிலுமாக இல்லை என்பதால் சரியான எழுத்துப் பெயர்ப்பு சாத்தியமில்லை என்பதாலுமே. தென்கோடியில் முட்புதரில் வசிக்கும் “ன்ர்’’ குழுவையும் உள்ளிட்டு இந்த இனக்குழுவின் எண்ணிக்கை எழுநூறைத் தாண்டாது என்று நான் நம்புகிறேன். நான் குறிப்பிடும் பூஜ்யம் வெறும் யூகம்தான், ஏனென்றால் அரசன், அரசி மற்றும் பில்லி சூனிய மந்திரவாதிகள் தவிர்த்து ஏனைய யாஹூக்கள் நிலையான வசிப்பிடத்தில் தூங்காமல் இரவு நேரத்தில் எங்கிருக்கிறார்களோ அங்கேயே தூங்குகிறார்கள். சதுப்பு நில ஜுரமும் குரங்கு மனிதர்களின் தொடர் தாக்குதல்களும் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைக்கின்றன. ஒரு சில நபர்களுக்கே பெயர்கள் இருக்கின்றன. ஒருவரிடம் மற்றவர் பேசவேண்டுமானால் ஒரு சிறு கைப்பிடியளவு மண்ணை எறிந்து கொள்வது அவர்களுடைய வழக்கம். ஒரு நண்பனுடைய கவனத்தை ஈர்க்க தரையில் விழுந்து புழுதியில் புரளும் யாஹூக்களையும் நான் பார்த்திருக்கிறேன். தாழ்ந்த முன் நெற்றிகள், அவர்களுடைய கறுப்பு நிறத்தைக் குறைத்துக் காட்டும் ஒரு விசித்திர செம்புநிறக் கலவை ஆகியவை தவிர்த்து லைபீரியக் கடற்கரையைச் சேர்ந்த, அதிகம் கடலில் பயணிக்கும் கறுப்பு நிற “க்ரூ’’ இனத்தவர்களிடம் இருந்து உடல் தோற்றத்தில் அவர்கள் பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை. பழங்கள், கிழங்குத் தண்டுகள், சிறு ஊர்வன ஆகியவற்றை உணவாகக் கொள்கிறார்கள். பூனைகள் மற்றும் வௌவால்களின் பாலைக் குடிக்கிறார்கள். கைகளாலேயே மீன் பிடிக்கிறார்கள். சாப்பிடும்போது ஒன்று தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது கண்களை மூடிக்கொள்கிறார்கள். இயல் நலத்தையும், இன்ப நுகர்வையும் வெறுப்பதாகக் காட்டிக் கொண்ட பழங்கால கிரேக்கக் கொள்கையாளர்களான சினிக்குகளைப் போலவே அவர்களுடைய மற்ற எல்லா உடல் சார்ந்த வழக்கங்களும் பொதுக் காட்சிகளாகவே நிகழ்ந்தன… பில்லி சூனிய மந்திரவாதிகளும் அரச குடும்பத்தினரும் இறக்கும்போது அவர்களுடைய அறிவு தங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுடைய பிண உடல்களை யாஹூக்கள் வெறியுடன் தின்கின்றனர். இந்தக் கொடிய பழக்கத்திற்காக நான் அவர்களைக் கண்டித்தபோது அவர்கள் தங்களுடைய உதடுகளையும் வயிறுகளையும் தொட்டுக் காண்பித்தனர். இதன் மூலம் இறந்தவர்கள் சாப்பிடத் தகுதியானவர்கள் என்றோ,  – இந்த விளக்கம் வலிந்து சொல்லப்படுவதாகத் தோன்றலாம் – நாம் சாப்பிடும் எல்லாமே நாளடைவில் மனிதச் சதைகளாவே மாறிவிடும் என்று நான் புரிந்து கொள்ள வேண்டுமென்றோ அவர்கள் உணர்த்த முயன்றிருக்கலாம். சேகரித்து வைத்துள்ள கற்கள்,வசியச்சொற்கள், மந்திர உச்சாடனங்கள் ஆகியவற்றை அவர்கள் யுத்தங்களில் பயன்படுத்துகிறார்கள். ஆடை உடுத்துதல், பச்சை குத்திக் கொள்ளுதல் ஆகியவை அவர்கள் அறியாத கலைகளாக இருந்ததால் அவர்கள் அம்மணமாகவே திரிந்தனர்.

தெளிந்த நீரூற்றுகளும் நிழல் தரும் மரங்களும் பரந்த புல்லும் நிரம்பிய மேடான சமவெளி அருகிலேயே இருந்தாலும் சுற்றியிருந்த சேற்றுப் பகுதிகளிலேயே மொய்த்திருக்க அவர்கள் விரும்புவது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். வெப்பத்தின் கடுமையிலும் உடல் நலத்திற்குத் தீங்கானதிலும் அவர்கள் சுகம் காண்பதைப்போலத் தோன்றுகிறது. அந்த மேட்டுச் சமவெளியின் நெட்டுக்குத்தான சரிவுப் பகுதிகள் குரங்கு மனிதர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள இயற்கை அரணாக எளிதில் பயன்பட்டிருக்கமுடியும். இதேமாதிரியான சூழலில் ஸ்காட்லாந்தின் ஆதி இனக்குழுக்கள் மலைகளின் உச்சிகளில் காப்பரண்களைக் கட்டிக் கொண்டார்கள்; இந்த எளிய உத்தியைப் பின்பற்றும்படி பில்லிசூன்ய மந்திரவாதிகளை அறிவுறுத்தினேன்; ஆனால் என் வார்த்தைகளுக்குப் பலன் இல்லை. இருந்தாலும் மேட்டுப்பகுதியில் ஒரு குடில் கட்டிக்கொள்ள அவர்கள் என்னை அனுமதித்தனர். அங்கு இரவுக் காற்று குளுமையாக உள்ளது.

வரம்பற்ற அதிகாரம் கொண்ட அரசனால் இந்த இனக்குழுவினர் ஆளப்படுகிறார்கள். அரசனைத் தேர்ந்தெடுத்து அவனை பிரமாணம் எடுக்கவைக்கும் பில்லிசூன்ய மந்திரவாதிகளே உண்மையான ஆட்சியாளர்கள் என்பது என்னுடைய யூகம். இந்தக் கூட்டத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஆணும் துன்பம் தரும் ஒரு சோதனைக்கு ஆட்படுத்தப்படுகிறான். அவன் குறிப்பிட்ட சில மச்சங்களை உடையவனாக இருந்தால் – அவை எவ்வகையான மச்சங்கள் என்று எனக்குச் சொல்லப்படவில்லை – அவனை யாஹூக்களின் அரசனாக உயர்த்துகிறார்கள். பௌதிக உலகம் அவனை அறிவின் பாதைகளிலிருந்து இட்டுச் செல்லக்கூடாது என்பதற்காக அதே இடத்தில் அவன் காயடிக்கப்படுகிறான், அவன் கண்கள் தீய்க்கப்படுகின்றன, அவன் கை கால்கள் துண்டிக்கப்படுகின்றன. அதன்பிறகு காப்பரண் (“க்ஸ்ர்’’) என்று அழைக்கப்படுகிற அடிநிலைக்குகையில் அவன் சிறை வைக்கப்படுகிறான். நான்கு பில்லி சூன்ய மந்திரவாதிகளுக்கும் அவனுக்குப் பணிவிடை செய்து சாணத்தால் அவனுக்கு அபிக்ஷேகம் செய்யும் இரண்டு அடிமைப் பெண்களுக்கும் மட்டுமே அங்கு நுழைய அனுமதி உண்டு. போர் நேரிட்டால் மந்திரவாதிகள் அவனை இந்தக் குகையிலிருந்து வெளியே கொண்டு வந்து, அந்த இனக்குழுவினர்க்கு வீரம் உண்டாக்கும் வகையில், ஒரு கொடியையோ, மந்திரச் சக்கரத்தையோ காண்பிப்பதைப்போல, யுத்தகளத்திற்கு அவனைத் தோள்களில் தூக்கிச் செல்கிறார்கள். அந்த மாதிரி சமயங்களில், குரங்கு மனிதர்களால் சரமாரியாக வீசப்படும் கற்களால் தாக்கப்பட்டு உடனே அவன் இறக்கிறான்.

இன்னொரு காப்பரணில் அரசி வாழ்கிறாள்; அரசனைப் பார்ப்பதற்கு அவளுக்கு அனுமதியில்லை. நான் அங்கு தங்கியிருந்தபோது இந்தப் பெண்மணி என்னை அன்புடன் வரவேற்றாள். சிரித்தமுகத்துடனும் இளமையாகவும் அவளுடைய இனம் அனுமதிக்கும் அளவுக்கு நளினமாகவும் இருந்தாள். உலோகத்தாலும் தந்தத்தாலும் ஆன கை வளைகளும் பற்களால் ஆன கழுத்தணிகளும் அவளுடைய ஆடையற்ற உடலை அலங்கரித்தன. அவள் என்னைக் கூர்ந்து ஆய்ந்தாள், மோப்பம் பிடித்தாள், பிறகு ஒரு விரலால் என்னைத் தொட்டாள். இறுதியில் அவளுடைய பரிவாரத்தின் முன்னிலையில் தன்னை எனக்கு மனமார ஒப்புக் கொடுத்தாள். என்னுடைய ஆடையின் துணியும் என்னுடைய ஒழுக்கவியலும் அந்த கௌரவத்தை ஏற்றுக்கொள்ளத் தடை விதித்தன. மந்திரவாதிகளுக்கும் அடிமை வேட்டைக்காரர்களுக்கும் அவளுடைய ராஜ்யத்தின் வழியே பயணிக்கும் வணிகக் குழுக்களின் உரிமையாளர்களான முஸ்லீம்களுக்கும் மட்டுமே அவள் அந்த கௌரவத்தை வழக்கமாகத் தருகிறாள். இரண்டு அல்லது மூன்று முறை அவள் ஒரு தங்க ஊசியை என் சதையில் குத்தினாள். அப்படிக் குத்தப்படுவது அரச நேசத்தின் அறிகுறி என்பதால், பெரும்பான்மையான யாஹூக்கள் அரசியே குத்தியதுபோல தங்கள் உடல்களில் தாங்களே குத்திக்கொண்டார்கள். நான் ஏற்கனவே விவரித்த அவளுடைய ஆபரணங்கள் வேறு தேசங்களிலிருந்து வந்தவை. ஒரு எளிமையான பொருளைக்கூட வடிவமைக்கத் தெரியாத யாஹூக்கள் அவ்வகை ஆபரணங்களை இயற்கையானவை என்று கருதுகிறார்கள். நான் என்னுடைய குடிலைக் கட்டும்போது பார்த்திருந்தும் அதற்கு உதவி செய்திருந்தும் கூட அவர்களுக்கு என் குடில் ஒரு மரம்தான். வேறு நிறைய உடமைகளுக்கிடையே ஒரு கைக்கடிகாரம், கார்க்கால் செய்யப்பட்ட ஒரு தலைக்கவசம், மாலுமிகளின் திசைகாட்டி ஒன்று, ஒரு பைபிள் ஆகியவற்றையும் நான் வைத்திருந்தேன். யாஹூக்கள் அவற்றை உற்றுப்பார்த்து, கைகளில் தூக்கி எடை பார்த்து, நான் அவற்றை எங்கு கண்டுபிடித்தேன் என்று தெரிந்துகொள்ள விரும்பினார்கள். அவர்கள் அடிக்கடி என்னுடைய குறுவாளின் கைப்பிடியைத் தொடாமல் அதன் வெட்டுவாய்ப் பகுதியைத் தொட்டே வாங்கிப் பார்த்தார்கள். சந்தேகமில்லாமல் அவர்கள் அதை அவர்களின் வழியிலேயே பார்த்தார்கள். அவர்கள் எந்த அளவிற்கு ஒரு நாற்காலியை உணரமுடியும் என்று நான் ஆச்சரியப்பட்டேன். சில அறைகள் கொண்ட ஒரு வீடு அவர்களுக்கு ஒரு வலைப்பின்னலாகத்தான் குழப்பும். ஒரு வேளை, பூனையின் பாணியில் அவர்கள் அவ்வீட்டிற்குள் தங்கள் வழியைக் கண்டுபிடிக்கலாம். ஆனாலும் பூனை வீட்டைக் கற்பனையில் பார்ப்பதில்லை. அப்போது சிவப்பாக இருந்த என் தாடி அவர்களுக்கு அதிசயத்தின் ஓர் ஆதாரம். வெளிப்படையான விருப்பத்துடன் அவர்கள் அதை நீவி விடுவார்கள். பச்சையான, ஊசிப்போன இறைச்சியையும் துர்நாற்றமுள்ள பொருள்களையும் சாப்பிடும்போது அனுபவிக்கும் சுகத்தைத் தவிர யாஹூக்களுக்கு வேறு துன்பத்தையோ இன்பத்தையோ உணரும் சுரணை கிடையாது. கற்பனை என்பது கொஞ்சமும் இல்லாததே அவர்களைக் கொடூரத்திற்கு இட்டுச் செல்கிறது.

அரசியைப் பற்றியும் அரசனைப் பற்றியும் சொல்லிவிட்டேன். இப்போது பில்லிசூன்ய மந்திரவாதிகளைப் பற்றிச் சொல்கிறேன். அவர்கள் நான்கு பேர் என்று ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். நான்கு தான் அவர்களுடைய எண் கணிதத்தின் இறுதி எல்லை. அவர்கள் இப்படித்தான் விரல்விட்டு எண்ணுகிறார்கள். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு,பல. பெருவிரலில் முடிவின்மை தொடங்குகிறது. தென் அமெரிக்கக் கண்டத்தின் ப்யூனஸ் அய்ரஸ்க்குப் பக்கத்தில் சுற்றித்திரியும் இந்திய இனக்குழுக்கிடையேயும் இதேதான் நடக்கிறது என்று எனக்குத் தெரியவருகிறது. யாஹூக்களுக்குத் தெரிந்த அதிகபட்ச எண்ணே நான்குதான் என்ற போதிலும் அவர்களுடன் வியாபாரம் செய்யும் அரேபியர்கள் அவர்களை மோசடி செய்வதில்லை. ஏனென்றால் பண்டமாற்றில் ஒவ்வொன்றையும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று பங்கீடு செய்து பிரித்து வைக்கவேண்டும். அவற்றை ஒவ்வொரு வியாபாரியும் தனக்குப் பக்கத்தில் அடுக்கி வைப்பான். இவ்வகை வணிக நடவடிக்கைகள் சிக்கலானவையாக இருந்தாலும் அவர்கள் அவற்றில் தவறோ, ஏமாற்றுதலோ நடக்க அனுமதிப்பதில்லை. யாஹூக்களின் நாட்டிலேயே என்னுடைய ஆர்வத்தைத் தூண்டியவர்கள் பில்லிசூன்ய மந்திரவாதிகள் மட்டும்தான். யார் விரும்பினாலும் அவர்களை எறும்புகளாகவோ, கடலாமைகளாகவோ மாற்றிவிடும் சக்தி அவர்களுக்கு இருப்பதாக யாஹூக்கள் நம்புகிறார்கள். என்னுடைய அவநம்பிக்கையைக் கண்டுபிடித்துவிட்ட ஒருவன் ஓர் எறும்புப்புற்றை எனக்குச் சுட்டிக் காட்டினான். அது ஏதோ ஒரு நிரூபணம்போல.

யாஹூக்களின் ஞாபகம் குறைபாடுடையது, இன்னும் சொல்லப்போனால் அது இல்லாத ஒன்று என்றே கருதலாம். சிறுத்தைப் புலிகளின் படையெடுப்பால் நிகழ்ந்த பேரழிவைப் பற்றி அவர்கள் ஒரு கனவை விவரிக்கிறார்கள். ஆனால் அந்த சம்பவத்தைப் பார்த்தது அவர்களா அல்லது அவர்களுடைய  தந்தையரா என்பது அவர்களுக்குத் தெரியாது. அல்லது அவர்கள் ஒரு கனவை விவரிக்கிறார்களா என்பதும் அவர்களுக்குத் தெரியாது. பில்லி சூன்ய மந்திரவாதிகளிடம் ஞாபகத்திற்கான அறிகுறிகள் ஓரளவுக்குத் தென்படுகின்றன. அன்று காலையோ முந்தைய மாலையோ நடந்தவற்றை மாலையில் அவர்களால் நினைவுகூர முடிகிறது. முன்னறியும் திறமும் அவர்களுக்கு வாய்த்துள்ளது. பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு நடக்கப்போவதை அவர்களால் நம்பிக்கையுடன் சொல்ல முடிகிறது. உதாரணமாக, “ஒரு ஈ என் புறங்கழுத்தை உராய்ந்து செல்லும்’’ என்றோ, “இன்னும் ஒரு கண­த்தில் நாம் ஒரு பறவையின் பாடலைக் கேட்கப் போகிறோம்’’என்றோ அவர்கள் சொல்வார்கள். நூற்றுக்கணக் கான முறை இந்த சுவாரஸ்யமான திறமைக்கு நான் சாட்சியாக இருந்துள்ளேன். அதைப்பற்றி விரிவாக சிந்தித்தும் இருக்கிறேன். கடவுளின் தீர்க்கதரிசனத்தில், அவருடைய முடிவின்மையில் நுணுக்கத்தின் மேல் நுணுக்கமாக இறந்தகாலம்,நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை ஏற்கனவே இருப்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் வரம்பில்லாமல் பின்னோக்கிப் பார்க்க இயலும் மனிதர்கள் இம்மியளவுகூட முன்னோக்கிப் பார்க்க அனுமதிக்கப்படாதது என்னைக் குழப்புகிறது. நான்கு வயதுகூட நிரம்பாதபோது நான் பார்த்த, உயர்ந்த நான்கு பாய்மரங்களைக் கொண்ட நார்வே நாட்டுக் கப்பலை என்னால் தெளிவாக நினைவுகூர முடியும்போது நடக்க இருப்பதை மனிதனால் உய்த்துணர முடிவதைக் கண்டு நான் ஏன் திகைப்படைய வேண்டும்? தத்துவார்த்த மனதுக்கு ஞாபகம் என்பது முன்னுணர்தலைப் போல ஓர் அதிசயம்தான். நமக்கு நினைவில் இருந்தாலும்கூட எபிரேயர்கள் செங்கடலைக் கடந்ததைவிட நாளை காலைப்பொழுது நமக்கு அருகில் உள்ளது.

இந்த இனக்குழுவினர் தலை உயர்த்தி நட்சத்திரங்களைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை பில்லிசூன்ய மந்திரவாதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மந்திரவாதிக்கும் ஒரு சீடன் உண்டு. அவனுக்கு மரபுவழி வரும் ரகசிய அறிவை போதிக்கிறார்கள். மந்திரவாதியின் இறப்பிற்குப்பின் அவனுடைய இடத்தை சீடன் பெறுகிறான். இவ்வகையில் அவர்கள் எப்போதும் நான்கு பேர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நான்கு, மந்திரகுணங்கள் உடைய எண். ஏனென்றால் ஒரு யாஹூவின் மனம் அதிகபட்சம் சென்றடையக்கூடியது அதுதான். அவர்களுடைய முறையில் சுவர்க்கம்,  நரகம் குறித்த கோட்பாடுகளைத் தெரிவிக்கிறார்கள். இரண்டுமே பூமிக்குக் கீழே உள்ளன. உலர்ந்தும் வெளிச்சம் நிரம்பியதாகவும் இருக்கும் நரகம்-நோயாளிகள், முதியவர்கள், கொடுமைக்கு ஆளானவர்கள், குரங்குமனிதர்கள், அராபியர்கள், சிறுத்தைப் புலிகள் ஆகியோர்களுக்குப் புகலிடம் அளித்துக் காக்கிறது. சேறு நிரம்பியதாகவும் மேகம் சூழ்ந்ததாகவும் வர்ணிக்கப்படும் சொர்க்கம் – அரசன், அரசி, மந்திரவாதிகள், பூமியில் மகிழ்ச்சியாகவும் இரக்கமற்றும் ரத்தவெறி கொண்டவர்களாகவும் இருந்த நபர்கள் ஆகியோரின் வாழிடம். “சாணம்’’ என்ற பெயர் கொண்ட ஒரு கடவுளையும் அவர்கள் வணங்குகிறார்கள். அரசனுடைய உருவத்தோற்றத்திலேயே இக்கடவுளை அவர்கள் வரித்திருக்கவேண்டும். அது ஒரு பார்வையற்ற, சிதைக்கப்பட்ட, குட்டையாக்கப்பட்ட, வரம்பற்ற அதிகாரங்களை அனுபவிக்கும் உயிர். ஓர் எறும்பாகவோ ஒரு பாம்பாகவோ வடிவமெடுப்பதற்குப் பழக்கப்பட்டிருந்தது அக்கடவுள்.

மேற்சொன்னவற்றைத் தெரிந்துகொண்டபிறகு, அவர்களிடையே நீண்டகாலம் தங்கியிருந்தும் ஒரே ஒரு யாஹூவைக் கூட நான் மதமாற்றம் செய்ய முயலாதது யாருக்கும் ஆச்சரியம் அளிக்கக் கூடாது. தந்தைமை என்ற கருத்தாக்கம் அவர்களுக்கு இல்லாததால் “நம்முடைய பிதா’’ என்ற வார்த்தைகள் அவர்களைக் குழப்புகின்றன. நீண்ட காலத்திற்கு முந்தையதாக உள்ளதால் சாத்தியமில்லாமல் போய்விடும் ஒரு காரணத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும். பல மாதங்களுக்கு முன்பாக நடந்த ஒரு செயல் ஒரு குழந்தையின் பிறப்புக்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் எல்லாப் பெண்களும் உடலின்ப வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். எல்லோரும் அம்மாக்களும் அல்லர்.

யாஹூ மொழி சிக்கலானது. எனக்குத் தெரிந்த எந்த மொழியின் சாயலும் அதற்குக் கிடையாது. சொல் வகைகள் பற்றிக்கூட நாம் பேச முடியாது. ஏனென்றால் வகைகளே அதில் இல்லை. ஒவ்வொரு ஓரசைச்சொல்லும் ஒரு பொதுக் கருத்தோடு பொருந்திப் போகிறது. அக்கருத்தின் குறிப்பிட்ட அர்த்தம் சூழ்நிலையையும் அச்சொல்லோடு இணைந்துவரும் முகச்சுளிப்பையும் பொறுத்தது. உதாரணமாக “ன்ர்ஸ்’’ என்ற வார்த்தை, கலைதல் அல்லது புள்ளிகள் என்பவற்றை உணர்த்தும். நட்சத்திரங்கள் நிரம்பிய ஆகாயம், சிறுத்தைப்புலி, பறவைக்கூட்டம், பெரியம்மை, சிதறித் தெளித்த ஏதோ ஒன்று, பரவும் செயல், போரில் தோற்று ஓடுதல் ஆகியவற்றுக்கு அச்சொல்லைப் பயன்படுத்தலாம். “ஹ்ர்ல்’’ என்றால் நெருக்கமான அல்லது அடர்த்தியான என்று அர்த்தம். இனக்குழு, அடிமரம், கல், கற்குவியல்,கற்களைக் குவிக்கும் செயல், நான்கு மந்திரவாதிகளின் கூட்டம், உடலுறவு, காடு போன்றவற்றையும் அச்சொல் குறிக்கும். வேறு முறையில் உச்சரித்தாலோ, வேறுவகை முகச்சுளிப்பு இணைந்து வந்தாலோ, ஒவ்வொரு சொல்லும் நேர்எதிரான அர்த்தத்தைத் தந்துவிடும். நாம் அளவுக்கு மீறி மலைப்படைய வேண்டாம். நம்முடைய மொழியிலேகூட “பிளத்தல்’’ என்ற வினைச்சொல் “இரண்டு துண்டாக்குதல்’’ “ஒட்டிக் கொள்ளுதல்’’ என்ற இருவகை அர்த்தங்களையும் கொண்டுள்ளது. அதேசமயம், யாஹூக்கள் மொழியில் வாக்கியங்கள் கிடையாது. சிறு சொற்றொடர்கள்கூட கிடையாது என்பதையும் சொல்லியாக வேண்டும். அரூபங்களை உணர்த்தும் அறிவுத்திறன் அவர்களுடைய மொழிக்கு இருப்பதால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. எவ்வளவு பின்தங்கியிருந்த போதிலும் யாஹூக்களின் இனம் நாகரீக முதிர்ச்சி அற்றது என்று சொல்ல முடியாது. சீரழிந்துபோன ஒன்று என்று வேண்டுமானால் சொல்லலாம். சமவெளியின் குன்றுகளிலுள்ள கல்வெட்டுக்கள் இந்த யூகத்தை உறுதிப்படுத்துகின்றன. நான் கண்டுபிடித்த இக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் நம் முன்னோர்கள் செதுக்கியுள்ள மந்திர வரிவடிவங்களிலிருந்து மாறுபட்டிருக்கவில்லை. அவற்றைப் புரிந்து கொள்ள இந்த இனக்குழுவுக்குத் திறமையில்லை. இவர்கள் எழுத்து மொழியை மறந்து போய் பேச்சுவழக்கை மட்டும் கைக்கொண்டுள்ளதுபோல ஆகிவிட்டது.

பயிற்றுவிக்கப்பட்ட பூனைகளை சண்டையிடச் செய்வது, தூக்குத் தண்டனைகள் ஆகியவை இந்த மக்களுக்கு பொழுதுபோக்குகள். அரசியின் கற்புக்கு பங்கம் விளைவிக்க முயன்றவன் என்றோ, மற்றொருவன் பார்க்க உணவு உண்டான் என்றோ ஒருவன் மீது குற்றம் சுமத்தப்படும். சாட்சிகளின் விளக்கமோ, குற்றம் சுமத்தப்பட்டவனின் ஒப்புதல் வாக்கு மூலமோ இல்லாமல் அரசன் அவனை குற்றவாளிதான் என்று தீர்ப்பு சொல்லிவிடுவான். தண்டனை விதிக்கப்பட்டவன் அனுபவிக்கும் சித்ரவதைகளை நான் சிரமப்பட்டுதான் மறக்க வேண்டும். பிறகு அவனைக் கல்லால் அடித்துக் கொல்வார்கள். முதல் கல்லையும் கடைசிக் கல்லையும் – இது வழக்கமாக தேவைப்படாது – அவன்மீது எறியும் சிறப்புரிமை அரசிக்கு உண்டு. அவளுடைய திறமையையும் அங்கங்களின் அழகையும் பாராட்டி கூட்டம் உன்மத்தமாகி அவள்மீது ரோஜாக்களையும் முடை நாற்றம் வீசும் பொருட்களையும் வீசி ஆர்ப்பரிக்கும். ஒரு வார்த்தையும் பேசாமல் அரசி சிரிப்பாள்.

கவிஞர்களைக் கண்டுபிடிப்பது அவர்களின் இன்னுமொரு வழக்கம். பெரும்பாலும் புதிர் நிறைந்த ஏழெட்டு வார்த்தைகள் ஒருவன் மனதில் தோன்றலாம். பில்லிசூன்ய மந்திரவாதிகளும் பொதுமக்களும் சுற்றி நிற்க நடுவிலிருக்கும் அவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த வார்த்தைகளைக் கத்திச் சொல்வான். கவிதை அவர்களை கிளர்ச்சியடையச் செய்யாவிட்டால் எதுவும் நடக்காது. ஆனால் அக்கவிஞனின் வார்த்தைகள் அவர்களை ஊடுருவி பரவசம் அடையவைத்தால், ஒரு புனித திகிலின் ஆட்சிக்கு உட்பட்டு ஒரு வார்த்தையும் பேசாமல் அனைவரும் அவனைவிட்டு நீங்குவார்கள். புனித ஆவி அவனைத் தீண்டிவிட்டதை உணர்ந்து யாரும், அவனுடைய அம்மா கூட, அவனிடம் பேசவோ, அவனைப் பார்க்கவோ மாட்டார்கள். அவன் இனிமேல் மனிதன் இல்லை, கடவுள். யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றுவிட அனுமதி கிடைத்துவிடுகிறது.

யாஹூக்களின் பகுதிக்கு நான் எப்படி வந்தேன் என்று நான் ஏற்கனவே விவரித்துள்ளேன். அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டதையும் நான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையும் அதை அவர்கள் ஒரு மந்திர இடி முழக்கமாகக் கருதியதையும் நினைவுபடுத்திப் பார்க்கலாம். அந்தத் தவறை பேணி வளர்ப்பதற்காக அதன் பிறகு நான் ஆயுதமின்றி சுற்றிவர முயன்றேன். வசந்தகாலத்தில் ஒரு காலைநேரத்தில் திடீரென்று குரங்கு மனிதர்கள் எங்கள்மீது படையெடுத்தார்கள். மேட்டு நிலத்திலிருந்து கீழ்நோக்கி கையில் துப்பாக்கியுடன் நான் ஓடினேன். அவர்களில் இரண்டு விலங்குகளைக் கொன்றேன். மீதிப்பேர் திகைத்துப்போய் ஓடிவிட்டார்கள். துப்பாக்கிச்சூடு பார்வையில் படவில்லை. வாழ்க்கையில் முதன்முதலாக நான் ஆரவாரத்துடன் பாராட்டப்பட்டேன். அதன் பிறகுதான் அரசி என்னை வரவேற்றாள் என்று நினைக்கிறேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல யாஹூக்களின் ஞாபக சக்தி நம்பமுடியாத ஒன்றாக இருப்பதால் அன்று பிற்பகலே நான் தப்பித்து ஓடிவிட்டேன். அதன்பிறகு காட்டில் நிகழ்ந்த என்னுடைய சாகசங்கள் குறிப்பிடத்தக்கவை அல்ல. நாளடைவில் கறுப்பு மனிதர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தேன். அவர்களுக்கு உழவும் விதைக்கவும் வழிபாடு செய்யவும் தெரிந்திருந்தது. அவர்களோடு போர்ச்சுக்கீசிய மொழியில் என்னால் உரையாடமுடிந்தது. ஃபாதர் பெர்னாண்டஸ் என்ற ஒரு ரோம சமயப் பரப்பாளர் அவருடைய குடிலில் என்னைத் தங்கவைத்து, என்னுடைய கடும் பயணத்தைத் தொடரும் வரையில் கவனித்துக் கொண்டார். எவ்வித போலித்தனமும் – இல்லாமல் உணவுக் கவளங்களை, அவர் திறந்த வாய்க்குள் போட்டுக் கொள்வது எனக்கு ஆரம்பத்தில் அசூசையாக இருந்தது. நான் இன்னும் என் வாயைக் கையால் மூடிக்கொண்டோ, கண்களை வேறுபுறம் திருப்பிக்கொண்டோதான் சாப்பிட்டேன். சில நாட்களில் நான் என்னை மாற்றிக் கொண்டேன். இறையியல் தொடர்பான எங்கள் விவாதங்களை என்னால் மகிழ்ச்சியுடன் நினைவுகூர முடிகிறது. ஆனாலும் யேசுவின் உண்மை விசுவாசத்திற்கு அவரை என்னால் மாற்றமுடியவில்லை.

கிளாஸ்கோவில் இருந்துகொண்டு நான் இந்த அறிக்கையை இப்போது எழுதுகிறேன். யாஹூக்களுடன் தங்கியிருந்ததைப் பற்றி சொல்லியிருக்கிறேன்; ஆனால் அந்த அனுபவத்தின் சாரமான பயங்கரத்தைப் பற்றிப் பேசவில்லை. அது முற்றாக என்னைவிட்டு நீங்கவில்லை. இன்னும் என் கனவுகளில் அது வருகிறது. சில சமயங்களில் தெருவில் அவர்கள் இப்போதுகூட என்னைச் சூழ்ந்துகொள்வதாக நான் உணர்கிறேன். யாஹூக்கள் காட்டுமிராண்டிகள் என்பதும் பூமியிலேயே அதிக காட்டுமிராண்டித்தனம் நிரம்பியவர்கள் என்பதும் எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களுக்குக் கழுவாய் தரும் சில அம்சங்களைப் புறக்கணிப்பது நியாயமாகாது. அவர்களுக்கென்று சொந்த அமைப்புகள் உள்ளன. அவர்கள் ஓர் அரசனை துய்த்து மகிழ்கிறார்கள். அரூப கருத்தாக்கங்களைச் சார்ந்துள்ள ஒரு மொழியைப் பயன்படுத்துகிறார்கள். யூதர்களைப்போலவும் கிரேக்கர்களைப்போலவும் கவிதையின் இறைத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். உடலின் இறப்புக்குப் பின்னும் ஆன்மா வாழ்கிறது என்ற யூக உணர்வு அவர்களிடம் உள்ளது. தண்டனைகள், வெகுமானங்கள் ஆகியவை பற்றிய உண்மையை விடாப்பிடியாகப் பின்பற்றுகிறார்கள். நம்முடைய பல வரம்பு மீறல்களையும் தாண்டி நாம் நாகரீகத்தின்மீது அக்கறை கொண்டிருக்கும் அளவுக்கே அவர்களும் அவர்கள் முறையில் அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள் படையில் சேர்ந்துகொண்டு குரங்கு மனிதர்களுக்கு எதிராகப் போரிட்டது குறித்து எனக்கு வருத்தம் கிடையாது. அவர்களுடைய ஆன்மாக்களைக் காக்கும் கடமை நமக்கு உள்ளது. அது அன்றி இந்த அறிக்கை முன் வைப்பவற்றை நம் மாட்சிமை தாங்கிய மகாராணியாரின் அரசு புறக்கணித்துவிடக்கூடாது என்பதும் எனது உணர்ச்சிபூர்வ கோரிக்கை.

*(*ஜானதன் ஸ்விஃப்ட் (1667-1754) என்ற ஐரிஷ் – ஆங்கில எழுத்தாளர் எழுதிய “கலிவரின் பயணங்கள்’’ (1726) என்ற புனைகதையில் வரும் மனித உருவ விலங்குகளின் பெயர்.)

(உன்னதம் 2001)


 ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹெஸ் (1899-1986)

சிறுகதை ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். உலக இலக்கியத்தின் சாரம் இறங்கிய படைப்பு மனம் கொண்ட சர்வதேச எழுத்தாளர். அர்ஜென்டினாவின் தலைநகரான ப்யூனஸ் அய்ரஸில் வழக்கறிஞர் ஒருவரின் மகனாகப் பிறந்த இவருடைய வம்சாவளியில் ஆங்கில ரத்தம் இருந்திருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆங்கிலப் பரிச்சயம் உண்டு. சிறு வயதிலேயே ஷேக்ஸ்பியர் படித்திருக்கிறார்.

ஒன்பது வயதில் ஆஸ்கர் வைல்டின்  The Happy Prince கதையை ஸ்பானிஷில் மொழிபெயர்த்தாராம். 1914-இல் ஜெனீவாவுக்குக் குடும்பம் இடம்பெயர்ந்தது. அங்கேயே கல்லூரிப் படிப்பும். ஸ்பெயின் உள்ளிட்டு சில ஐரோப்பிய நகரங்களில் வசித்துவிட்டு 1921-இல் தாய்நாட்டுக்குத் திரும்பியது குடும்பம். ஜெர்மன் மொழியிலேயே தத்துவம் படித்தார். அப்பாவின் மரபணுவில் இருந்த பார்வைக் குறைபாடு போர்ஹெஸையும் பாதித்ததால் ஐம்பத்தாறு வயதில் பார்வையை முழுக்க இழந்தார். தேசிய நூலகத்தின் இயக்குநராக இருந்த காலத்தில் இது நிகழ்ந்தது. ‘‘ஓர் அற்புத முரண்நகையாகக் கடவுள் தன் ஒற்றை செயல்பாங்கில் எனக்குப் புத்தகங்களையும் இரவையும் ஒருசேரக் கொடுத்தார்’’ என்று போர்ஹெஸ் இதை வர்ணிக்கிறார். கம்யூனிசத்தையும் ஃபாசிஸத்தையும் சமதூரத்தில் வைத்து வெறுத்தவர். கதைக்குள் கதை, கட்டுரையும் கதையும் கலந்த புனைவு, நிஜத்தையும் விசித்திரத்தையும் இணைத்து மாய எதார்த்தமாக்கல் என்பவை அவர் கதை சொல்லும் பாணிகள். ஆங்கில மொழிபெயர்ப்புகளால் 1960களில் உலகக் கவனம் பெற்றார். முக்கிய நூல்கள் Ficciones, A Universal History of Infamy, The Aleph and other Stories, Labyrinths, The Book of Sand.. காஃப்கா, ஆந்த்ர ழீட், விட்மன், வர்ஜீனியா வுல்ஃப் போன்றோரின் எழுத்து­களை ஸ்பானிஷில் மொழிபெயர்த்தார். ஜெனீவாவிலியே இறந்துபோனார். போர்ஹெஸ் தமிழில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளார்.


புனைவு என்னும் புதிர் – உலகச் சிறுகதைகள் 21

விமலாதித்த மாமல்லன்

பின்னலாகக் கதை சொல்வதில் தனித்து நிற்பவர் போர்ஹே.

கதைகளில் எதிர்பாராத திருப்பங்களை வைப்பவர்களே, படிப்பவனைப் பைத்தியமாக அடித்து, பெரும் வாசகப் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நட்சத்திர எழுத்தாளர்களாக ஜொலிக்கிறார்கள். ஆனால், கதையையே வாசகக் கற்பனைக்கு எட்டாத வகையில் எழுதுபவரான போர்ஹேவை என்னவென்று சொல்வது; எங்கே கொண்டு வைப்பது.

பொதுவாக எந்த எழுத்தாளரையும் இவர் இப்படித்தான் எழுதுவார், இவர் கதை இப்படித்தான் போகும் என்று,தொடர்ந்த வாசிப்பில் அனுமானித்துவிடமுடியும். கணிக்கவே முடியாதபடி இருக்கும் என்பதே இவரது அடையாளம் என்கிற வகைக்குள் வேண்டுமானால் நம் வசதிக்காக போர்ஹேவை வைத்துக்கொள்ளலாம்.

தொடங்கியதற்குத் தொடர்பே இல்லாதபடி, கிளை விட்டுக் கிளை தாவி சம்பந்தமே இல்லாத இடத்தில் கொண்டுபோய் நம்மை விட்டுவிடுவார். படித்து முடித்தபின் கொஞ்சம் யோசித்தால், ஒரு வார்த்தை கூட வீணாக எழுதப்பட்டதாக இல்லாமல் கதைக்குள் இருக்கும் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதை உணரமுடியும்.

இவர் கதைகள், ஒரே நேரத்தில், தொடக்கமும் முடிவுமற்ற முந்நூற்று அறுபது பாகையிலும் சுற்றப்பட்டிருக்கும் பின்னமற்ற முழு உருண்டையாகத் தோற்றமளிக்கும் நூல்கண்டைப் போலவும் தலைகால் புரியாத அளவுக்கு ஆயிரம் சிக்கல்களுடன் பிரிந்துகிடக்கிற, ஆரம்ப இறுதி நுனிகளற்ற, விடுவிக்க வழியேயில்லாத நூல் குவியலைப் போலவும் தோற்றமளிக்கின்றன.

கொஞ்சம் பயிற்சியும் இலக்கிய வாசகர்களுக்கே உரிய, நிறுத்திப் படிக்கிற நிதானமும் கைவரப்பெற்றால் என்ன செய்துவைத்திருக்கிறது இந்தக் கதை சொல்லும் கடவுள் என்று புல்லரித்துப்போய் போர்ஹேவின் பரமபக்தநாக ஆகிவிடுவோம்.

துரதிருஷ்டவசமாக நம் ஊரில் போர்ஹே என புல்லரிக்கும் கும்பல்  மொத்தமும் புலியாகிவிட ஆசைப்பட்டு, சாமியாடியபடி சூடுபோட்டுக்கொண்ட குழப்படிப் பூனைகளாகவே இருக்கின்றன.

இந்தக் கதையும் போர்ஹேவுக்குக் கைவந்த கண்கட்டி வித்தையுடன்தான் தொடங்குகிறது. நூல்கண்டின் முனை மேலாகத்தானே இருக்கும் என்று நம்மைத் தடவ விடுவதற்காகவே,

‘என்னுடைய நெருங்கிய நண்பர் பால் கெய்ன்ஸ் எனக்காகத் தேடிப் பிடித்துத் தந்த லேன் என்பவருடைய “அரேபிய இரவுகளின் கேளிக்கைகள்’’ (லண்டன், 1839) என்ற புத்தகத்தின் ஒரு தொகுதியின் பக்கங்களுக்கிடையே, நான் கீழே படியெடுத்துத் தரப்போகும் கையெழுத்துப் பிரதியை நாங்கள் கண்டுபிடித்தோம்.’

என்று ஆரம்பிக்கிறார்.

போர்ஹேவைப் படிக்க, வழக்கமான வாசிப்புப் பழக்கத்தையே கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். பொதுவாக எல்லோருடைய கதைகளிலும் ஆரம்ப வார்த்தையில்தான் கதை தொடங்கும் என்றால், இந்தக் கதையின் தொடக்க வாக்கியத்தின் இறுதியில் வருகிற ‘கையெழுத்துப் பிரதி’ என்கிற சொற்களிதான் இருக்கிறது நூலின் முனை. அதற்கு முன்னால் இருக்கிற அனைத்தும் கண்கட்டி வித்தை.

உண்மையான ஆரம்பத்தை ஒளித்துவைப்பதைப்போல என்னென்ன செய்கிறார். ‘நெருங்கிய நண்பர்’ – அவருக்கு பால் கெய்ன்ஸ் என்று ஒரு பெயர் வேறு – அவர் தேடிப்பிடித்து தந்த புத்தகமோ வேறொருவருடையது. கொசுறாக, ‘லண்டன், 1939’ என்கிற அதன் பதிப்பு ஆண்டு வேறு என்று இப்படி, ‘மையக் கதை’க்குத் தேவையே இல்லாத தகவல்களைப் போக்குக் காட்டலாய், பீடிகையாகப் போட்டுவைக்கிறார்.

அத்தியாவசியமான தகவலைச் சொன்னாலே வாசகனுக்குப் போரடிக்கும் என்று தவிர்க்கிற எழுத்துலகில் இவரோ, அனாவசியமான தகவல்களை அனாயாசமாகத் தெளித்துவைக்கிறார். ஆனால், இவைதான் நிஜத்தில் நடந்ததைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி, தேர்ந்த இலக்கிய வாசகனைக் கிறங்கடிக்கின்றன.

தலைப்பாக இருக்கும் ‘டாக்டர் பிராடியின் அறிக்கை’தான் கதை – ஆனால், கதைக்குள்ளேயே போகாமல், அறிக்கை எப்படி எழுதப்பட்டு இருந்தது என்று நுணுக்கமாக விவரித்துச் சொல்லிக்கொண்டே போகிறார். அறிக்கையின் உண்மைத்தன்மைக்கு, அதை உண்மையில் நடந்ததாக நம்பவைக்க, அது எழுதப்பட்டிருக்கும் விதம், கையெழுத்து, பக்கவாட்டுக் குறிப்புகள் உட்பட அவ்வளவையும் விவரித்துவிட்டு, அந்த அறிக்கையை எழுதியவரின் பெயரைக் கடைசியில் சொல்கிறார்.

2000 வார்த்தைகள் கொண்ட கதையின் பத்தில் ஒரு பங்கை, இதற்கே எடுத்துக்கொள்கிறார். இது போரடிப்பதற்கு பதிலாக, இவ்வளவு அமர்க்களமாகச் சொல்லப்படும் அந்த அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கப்போகிறது என்று,ஆர்வத்தைத் தூண்டுவதாக ஆகிவிடுகிறது.

பெரும்பாலும் நீண்ட பீடிகை, சொல்லப்போகிற விஷயத்தின் கனத்தைக் குறைத்து, எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டு, கதையைப் படித்து முடித்ததும் இதற்குத்தான் இவ்வளவு படுத்தலா. இதில் அப்படியென்ன பெரிதாக இருக்கிறது என்று வாசகனை எதிர்மறை மனநிலைக்குத் தள்ளிவிடும். ஆனால், போர்ஹேவோ அடுத்தடுத்து அதிசயங்களையும் நூதனங்களையும் அடுக்கிக்கொண்டே போகிறவர் என்பதால் அவர் காட்டுகிற, முற்றிலும் எதிர்பார்க்காத யாஹூக்கள் என்கிற விலங்கையொத்த மனிதர்களின் உலகத்திற்குள் அகல விரிந்த கண்களுடன் நாம் அலையத் தொடங்கிவிடுகிறோம்.

அது, மகாராணியின் அரசுக்கு சமர்ப்பிக்கும் அறிக்கை என்பதால், அந்த வடிவத்தை அப்படியே பிராடியின் மொழியில் கடைப்பிடிக்கிறார் போர்ஹே. முதலில், பொதுவாக அந்த மக்களைப் பற்றிய அறிமுகம், அவர்களின் வாழ்முறை, அடுத்து யாஹூக்களின் அரசன், அரசி, பில்லி சூனியக்காரர்கள் என்று வினோதமான அவர்களது வாழ்முறையை, வரிசைக்கிரமமாக பதிவுசெய்து, அரசுக்கு அனுப்பிவைக்கும் பாணியில், நிஜத்தில் கண்டதைப்போல யாஹூக்களின் உலகையே கற்பனையாகக் கட்டி எழுப்புகிறார்.

கதை யாஹூக்களுக்கிடையில் இருக்கும்போது, அது ஒரு புத்தகத்தில் இருந்து விழுந்த தாளில், கையால் எழுதப்பட்டிருக்கும் அறிக்கை என்பது எத்தனைப் பேருக்கு நினைவில் இருந்தது என்று எண்ணிப்பார்த்தால், போர்ஹே எவ்வளவு பெரிய எழுத்து மந்திரவாதி என்பது புலப்படும்.

எல்லாம் சரி. கதை, செய்தி கருத்து என்று எதையும் சொல்லாமல் சும்மா வினோதமான மனிதர்களைக் கண்டதை விவரிப்பதோடு முடிந்துவிடுகிறதே என்று தோன்றினால், தொடக்கத்தில் சொன்னதைப் போல, வழக்கமான வாசிப்பிலிருந்து விடுபட்டு வெளியில் வாருங்கள், புரியும் என்றுதான் சொல்லவேண்டும்.

டாக்டர் பிராடியின் அறிக்கையின் பெரும்பகுதி யாஹூக்களைப் பற்றியதாகவே இருந்தாலும் அதன் அடிப்படையே, மதமாற்றத்தைப் பற்றியதுதான் என்பதை,

‘அவர்களுடைய ஆன்மாக்களைக் காக்கும் கடமை நமக்கு உள்ளது. அது அன்றி இந்த அறிக்கை முன் வைப்பவற்றை நம் மாட்சிமை தாங்கிய மகாராணியாரின் அரசு புறக்கணித்துவிடக்கூடாது என்பதும் எனது உணர்ச்சிபூர்வ கோரிக்கை.’

என்று தெளிவாகக் கூறிவிடுகிறது. இது குறித்து இன்னும் வெளிப்படையாகச் சொல்லும் இடம் என்று இதற்கு முன் வருகிற,

‘நாளடைவில் கறுப்பு மனிதர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தேன்.’ என்று தொடங்குகிற பகுதியைச் சொல்லவேண்டும். அது இப்படி முடிகிறது:

‘இறையியல் தொடர்பான எங்கள் விவாதங்களை என்னால் மகிழ்ச்சியுடன் நினைவுகூர முடிகிறது. ஆனாலும் யேசுவின் உண்மை விசுவாசத்திற்கு அவரை என்னால் மாற்றமுடியவில்லை’.

இதற்கும் முன்பாக, அநியாய நக்கலுக்கு உதாரணமாக, அறிக்கை ஆரம்பிக்கும் முன், அறிக்கை பற்றிய விவரிப்பு முடிகிறபோது வெட்டப்பட்ட பகுதிகளைச் சொல்கிற இடத்தைக் கூறலாம்.

‘யாஹூக்கள் எனப்படும் விலங்குநிலை மனிதர்களின் பாலியல் நடவடிக்கைகள் குறித்த காமம் நிறைந்த ஒரு பத்தி – இதை நம்முடைய பண்பாடுடைய திருச்சபையாளர் விவேகத்துடன் லத்தீனில் எழுதியுள்ளார் – ஆகியவை மட்டுமே விடப்பட்டுள்ளன.’

அதற்கும் முன்பாக புண்படுவதையே முழுநேர வேலையாக வைத்துக்கொண்டு காத்திருப்பவர்களுக்கென்று வெளிப்படையாகவே வருகிறது:

‘மேற்சொன்னவற்றைத் தெரிந்துகொண்டபிறகு, அவர்களிடையே நீண்டகாலம் தங்கியிருந்தும் ஒரே ஒரு யாஹூவைக் கூட நான் மதமாற்றம் செய்ய முயலாதது யாருக்கும் ஆச்சரியம் அளிக்கக் கூடாது.’

இதற்கும் ஒரு படி மேலே போய் நேரிடையாகவே,

‘தந்தைமை என்ற கருத்தாக்கம் அவர்களுக்கு இல்லாததால் “நம்முடைய பிதா’’ என்ற வார்த்தைகள் அவர்களைக் குழப்புகின்றன.’

என்றும், இதைத் தொடர்ந்து, அனைவரிடத்திலும் சகிப்புத்தன்மை அருகிப்போன  இன்றைய காலகட்டத்தில் அப்பட்டமான அவதூறாகவே கருதி எரித்துவிடக் கொதித்தெழும்படியாக, புனிதத்தைத் தூக்கித் தூர வைத்து,

‘பல மாதங்களுக்கு முன்பாக நடந்த ஒரு செயல் ஒரு குழந்தையின் பிறப்புக்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் எல்லாப் பெண்களும் உடலின்ப வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். எல்லோரும் அம்மாக்களும் அல்லர்.’

என்று சொல்லிப் புன்னகைக்க வைக்கிறார்.

சீரியஸாகச் சொல்வதைப்போல கிண்டலடிக்கிற இதைப்போன்ற இடங்கள்போக நேரடியாகவே நையாண்டி செய்கிற இடங்களும் இருக்கின்றன.

அரசனாகத் தேர்ந்தெடுக்கப்படுபவன் பாவம் காயடிக்கப்படுவது முதல், கண் தீய்க்கப்படுவது, சாணத்தால் அபிஷேகம் செய்யப்படுவது இறுதியாகக் கல்லால் அடித்துக் கொல்லப்படுவது என்று எவ்வளவு அனுபவிக்கவேண்டியிருக்கிறது. இவ்வளவுக்கும் காரணம், அவனுக்கு இருக்கிற மச்சங்கள் என்பதுதான் நக்கலின் உச்சம் என்று எண்ணினால்,

கிளர்ச்சி ஏற்படுத்துகிற கவிஞனைப் பற்றி கூறியிருப்பது அதற்கும் மேலே இருக்கிறது.

“அவன் இனிமேல் மனிதன் இல்லை, கடவுள். யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றுவிட அனுமதி கிடைத்துவிடுகிறது.’

யாஹூக்கள், எண்ணிக்கையில் 700க்கும் குறைவானவர்களாக இருந்தார்கள் என்று போகிற போக்கில் வரும் தகவலை,இந்த இறுதியுடன் இணைத்துப் பார்த்தால், இவ்வளவு குறைந்த கூட்டத்தைக்கூட விட்டுவைக்காமல் உயிரைப் பணயம் வைத்து மதத்திற்காக, மதமாற்றத்திற்காக,  அலைந்து திரிகிற மகாராணியின் பிரஜையான டாக்டர் பிராடி போன்றவர்களின் வாழ்வின் வியர்த்தமும் அபத்தமும் குறித்த பகடியாகவும் இது புரிபடும். இதைப் பார்க்க, குரங்கு மனிதர்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டு கொடூரமாக வாழும் யாஹூக்கள் எவ்வளவோ மேல் என்கிற விமர்சனமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

‘நம்முடைய பல வரம்பு மீறல்களையும் தாண்டி நாம் நாகரீகத்தின்மீது அக்கறை கொண்டிருக்கும் அளவுக்கே அவர்களும் அவர்கள் முறையில் அக்கறை கொண்டுள்ளனர்.’

நாகரிகம், நன்மை செய்கிறோம், முன்னேற்றுகிறோம் என்பதன் பெயரால் ஒரு மனிதக்கூட்டத்தின் வாழ்முறையை இன்னொரு மனிதக்கூட்டம் அழித்து, அதைத் தன்வயமாக்கிக்கொள்வது கடவுளின் மதத்தின் பெயரால் நடக்கிறது என்பதால் மட்டும் சரியாகிவிடுமா என்ற கேள்வியை போர்ஹே வார்த்தைகளில் எழுப்பவில்லை, படிப்பவன் மனத்தில் எழ வைக்கிறார். மகாராணியாரின் நாகரிகப்பட்ட மனிதக் குரங்குக் கூட்டம் எப்பொது யாஹூக்களைத் தாக்கப்போகிறதோ என்று கதையைத் தாண்டி பயம் நம் மனதைக் கவ்வுகிறது. அந்த அறிக்கையின் நகலைத்தான் நாம் படித்துக்கொண்டு இருக்கிறோம்; அதன் அசல் மகாராணியை அடையாமல் நல்லவேளையாக போர்ஹேவிடமே பத்திரமாகத் தங்கிவிட்டது என்பதை நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.

எதையும் சாராமல் இருக்கத் தெரியாத நமக்கு – கம்யூனிசத்தையும் ஃபாசிஸத்தையும் சமதூரத்தில் வைத்து வெறுத்தவர் போர்ஹே, என்கிற தகவல் – அது எப்படி சாத்தியம் என்று, அவர் கதைகளைப் போலவே வினோதமாகப்படுமானால் வியப்பில்லை.

போற்றலுக்கோ தூற்றலுக்கோ கவலைப்படாமல், தமக்குப் பட்டதைச் சொல்லிச் செல்கிற எல்லா உண்மைக் கலைஞர்களையும்போல போர்ஹேவும் முற்போக்காளர்தான் – மனித வாழ்வை கலையால் முன்னெடுத்துப் போனவரைவிட பெரிய முற்போக்காளன் வேறு யாராக இருந்துவிடமுடியும்.

***

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!