Home » உயிருக்கு நேர் – 37
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 37

சுவாமி சித்பவானந்தர்
37 சுவாமி சித்பவானந்தர்  (11.03.1898 – 16.11.1985)
அவரது பணி ஆன்மீகத்தில்தான். துறவி வாழ்வை மிக இள வயதிலேயே விரும்பி ஏற்றுக் கொண்டவர். பெயர் சொன்னால் போதும், அவரது புகழ் எத்தனை பெரிது என்று தெரியக்கூடிய ஒரு மனிதர்தான். ஆனால் அவரது பணி துறவு ஒன்றில் மட்டும் நின்றுவிடவில்லை. கல்விப்பணி, எழுத்துப் பணி, பேச்சுப்பணி, சமுதாயச் சீர்திருத்தப் பணி என்று பல வகைகளில் விரிவுபெற்ற வாழ்வு அவருடையது. ஒரு நிறுவனத்தை, தனது மத்திய வயது தொடங்கும் போது கட்டமைத்து உருவாக்கித் தனது வாழ்வு இறுதிக்குள் அதனை ஒரு மாபெரும் நிறுவனமாக நிலை நிறுத்தியவர். அந்த நிறுவனத்தை அவர் உருவாக்க நினைத்த போது அவரது மடியில் ஒரு ரூபாய் கூட இல்லை; அதுவரை அவரது வாழ்வில் செய்திருந்த சமூகப் பணிகள்தான் அவருக்குப் பின் கட்டியம் கூறி நின்றிருந்தன.  அவையே அவர் சென்ற இடமெல்லாம், அவருக்கும் முன்னால் சென்று அவர் சாதிக்க நினைத்த அனைத்தையும் சாதித்துக் காட்டின. சாதி ஏற்றத் தாழ்வுகள், பெண்கள் பின்னடைவு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைக்கக் கல்வி ஒன்றே வழி என்ற தீர்மானத்தில் தொடங்கப்பெற்ற பல கல்வி நிலையங்கள், ஆன்மீகம் என்பது உடலும் மனமும் சீர்மை பெற்ற வாழ்வை வாழ்ந்திருப்பதே என்ற நோக்கிலான அந்தர் யோகம் என்ற வாழ்வுப் பயிற்சியை அறிமுகப்படுத்தியது என்று அவரது தொண்டுகள் பரந்து விரிந்தவை.
தமிழர் சமயமுறைகளில், பெண் துறவிகள் வரலாம், அவர்களுக்கு என்று தனியான மடங்கள், நிறுவனங்கள் இருக்கலாம் என்று திட்டம் செய்து, சாரதா சமிதி என்ற பெயரில் பெண் துறவியர்களுக்கான நிறுவனங்களையும் தொடங்கி வைத்தவர். திருவாசகம் நூலுக்கான அவரது விளக்கவுரை, இன்று வரை அதற்கு அமைந்திருக்கின்ற விளக்க உரைகளில் மிகச் சிறந்ததும் அருமையானதுமான ஒன்று. போலவே வடமொழி நூலான கீதைக்கும் தமிழில் அவரது உரையைப் போன்ற ஒரு சீரிய உரை ஒன்று இன்று வரை அமையவில்லை.

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!