16 புதியதோர் உலகம்
எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான்.
அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு மலங்க மலங்க பார்த்தான். வெளியில் கும்மிருட்டாக இருந்தது. இவனைத் தவிரப் படுத்திருந்த அவ்வளவு பெரிய கூடமும் எழுந்து நின்றுகொண்டிருந்தது. எல்லோரும் குளித்து முடித்துத் தலை துவட்டியபடியும் உடையணிந்துகொண்டும் தூக்கத்தின் சாயல்கூட இல்லாமல் இருந்தார்கள். பெரும்பாலான படுக்கைகள் சுருட்டப்பட்டு மூட்டை மூட்டைகளாக வரிசையாக இருந்தன.
‘ச்சல் ச்சல் ச்சல் ரே‘ என அத்துலின் குரல் எங்கோ கேட்டது. அறுபத்துமூவர் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோல அமர்ந்திருந்த இவனைச் சுற்றி எங்குப் பார்த்தாலும் கால்கள்.
Add Comment