14 இருளும் குளிரும்
கடைக்காரர் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்த வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டான். பின்னால் சுஜாதா அமர டிவிஎஸ் 50 ஓட ஆரம்பித்தது. இதற்கு முன்பாக முதல்முறை ஓட்டியபோதும் வசந்தகுமார் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்துதான் ஓட்டியிருந்தான். வழியில் வண்டி நின்றுவிட்டால் என்னாவது, இவள் எதிரில் ஸ்டார்ட் பண்ண முடியாமல் அவமானப்படவேண்டி வருமே என்று உள்ளூர உதறலெடுத்தது. இதற்குள் டவுன் முடிந்து இருமருங்கும் மரங்களும் புதர்களுமாகக் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாலை நீண்டுகிடந்தது.
ஜெயகாந்தனையே BSA SLRல் டபுள்ஸ் அடித்திருந்ததால் தன் சைக்கிளில் டபுள்ஸ் அடிப்பது தண்ணிபட்ட பாடாக ஆகிவிட்டிருந்தது. அதனால், டிவிஎஸ் 50யில் பேலன்ஸ் பிரச்சனைப் பெரிதாக வரவில்லை. திடுப்பென வண்டி நின்றுவிட்டால் என்ன செய்வது. மெட்ராஸாக இருந்தால் வண்டியோடு நிற்பதைப்பார்த்து என்ன என்றாவது கேட்க யாராவது இருப்பார்கள். அதுவும் கூட ஒரு பெண் வேறு நிற்கிறது என்றால் பஞ்சரா பெட்ரோல் இல்லையா எனத் தாமாகவே நிறைய எம்ஜிஆர்கள் வருவார்கள். ஆண் வண்டியோடு இருக்க, பக்கத்தில் பெண் நின்றால், கணவன் மனைவியேதான் என முடிவுகட்டி, சரிபண்ணிக்கொடுத்தால் அவள் தன்னோடு வந்துவிடுவாள் என்பதைப்போல உதவ வந்துவிடுவார்கள். போய்க்கொண்டிருப்பதோ அத்துவானக் காடு. தலையில் காய்ந்த சுள்ளிகளைச் சுமந்துகொண்டு போகிறவர்களைத் தவிர ஆள் நடமாட்டமே இல்லை. அப்படிப் போகிறவர்களும் எப்போதாவதுதான் தட்டுப்பட்டார்கள். சைக்கிள் கூட இல்லாமல் நடந்து போகிறவர்களிடம் அதிகபட்சம் வண்டியைத் தள்ளிவிடத்தான் கேட்கமுடியும். அதில் விழுந்துவாரி அசிங்கப்படவே வாய்ப்பதிகம்.
சூரியன் மறைந்து செந்தீற்றல்களும் மங்கி தேசலான வெளிச்சம் மட்டுமே இருக்கையில், ‘இங்கேயெல்லாம் ஜனங்கள் எப்படி. பயமில்லையே‘ என்று கேட்டாள் சுஜாதா.
Add Comment