இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இதுவரை நான்கு போர்கள் நடந்திருக்கின்றன. போராகப் பரிமாணம் எடுக்காமல் அநேகமாக ஒவ்வொரு நாளுமே எல்லைப் பகுதிகளில் உரசல்களும் மோதல்களும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் அத்துமீறி எல்லையில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவதாக நாம் சொல்வோம். இதையேதான் இந்தியா மீதான குற்றச்சாட்டாக பாகிஸ்தான் அரசும் மீடியாவும் அங்கே சொல்லும்.
உண்மையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அத்துமீறுபவர் யார் என்பது அங்கே களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மட்டுமே தெரியும்.
இரு நாடுகளும் சுதந்தரம் அடைந்த நாளாக இது இருந்து வருகிறது என்பது இரு நாட்டு மக்களுக்கும் தெரியும். ஆயினும் எப்போதும் உள்ள எல்லைப் பதற்றத்தை எப்போதும் அரசியலுக்குப் பயன்படுத்துவதை இரு நாட்டுத் தலைவர்களும் எப்போதும் செய்துகொண்டேதான் இருப்பார்கள்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிற போர் ஆயத்த நிலை ஏற்பாடுகளை உலகம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது. சம்பவம் நடந்த உடனேயே பிரதமர் வெளியிட்ட தீவிரவாதிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பில் இருந்த சூடு, ஒரு முழு நீளப் போருக்கான அறைகூவல் விரைவில் வரும் என்பதையே சுட்டிக்காட்டியது. சிந்து நதி ஒப்பந்தத் தடை, இரு நாட்டு வர்த்தகத் தடை, விமானப் போக்குவரத்துத் தடை, விசா தடை, பாகிஸ்தானியர் வெளியேற்ற நடவடிக்கைகள் போன்ற அடுத்தடுத்த செயல்பாடுகள் அதை உறுதி செய்தன.
Add Comment