Home » ஒரு மணி நேரத்தின் கதை
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

ஒரு மணி நேரத்தின் கதை

கெய்ட் ஷோப்பின்  (Kate Chopin)
தமிழில்: ஆர். சிவகுமார்


திருமதி மேலட் ஒரு இதய நோயாளி என்பதால் அவளுடைய கணவனின் இறப்புச் செய்தியை அவளிடம் எவ்வளவு மென்மையாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு மென்மையாகச் சொல்ல பெருமுயற்சி எடுக்கப்பட்டது.

அவளுடைய சகோதரியான ஜோஸஃபின்தான் அந்தச் செய்தியை உடைந்த வாக்கியங்களாலும் மறைமுகக் குறிப்புகளாலும் அவளிடம் பாதி மறைத்துச் சொன்னாள். அவளுடைய கணவனின் நண்பனான ரிச்சர்ட்ஸும் அவள் பக்கத்தில் இருந்தான். ரயில் விபத்து பற்றிய தகவல் பத்திரிகை அலுவலகத்துக்கு வந்தபோது அவன் அங்கே இருந்தான்; விபத்தில் இறந்தவர்களின் பட்டியலில் ப்ரன்ட்லி மேலட்டின் பெயர் முதலில் இருந்தது. இரண்டாவது தந்தி மூலம் அந்தத் தகவலை உறுதி செய்துகொண்ட பிறகுதான் ரிச்சர்ட்ஸ் அங்கு வந்தான்; அஜாக்கிரதையாகவும் நயமின்றியும் யாராவது அந்தத் துயரச்செய்தியை அவளிடம் சொல்லிவிடுவதைத் தடுப்பதற்காக அவன் விரைந்து வந்திருந்தான். செயல் மறந்த இயலாமையுடன் அந்தச் செய்தியின் உட்பொருளை பெண்கள் பலர் ஏற்றுக்கொண்டதைப்போல அவள் கேட்டுக் கொள்ளவில்லை. திடீரென்று, மூர்க்கமான மனநிலையுடன் அவளுடைய சகோதரியின் கைகளில் விழுந்து அழுதாள். துக்கத்தின் புயல் ஓய்ந்தவுடன் அவளுடைய அறைக்குத் தனியாகச் சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து வர யாரையும் அவள் அனுமதிக்கவில்லை.

திறந்திருந்த ஜன்னலைப் பார்த்தபடி அந்த அறையில் சௌகரியமான ஒரு பெரிய நாற்காலி இருந்தது. அவளுடைய உடலைவிட்டு நீங்காது வருத்தி ஆன்மாவுக்குள் நுழைவதைப் போல இருந்த உடற்சோர்வு துயரத்தில் ஆழ்த்த அவள் அந்த நாற்காலியில் அமிழ்ந்து உட்கார்ந்தாள்.

புது வசந்தக் காற்றால் உச்சிகள் அலைவுறும் மரங்களை அவளுடைய வீட்டின் முன்னாலிருந்த பரந்த சதுக்கத்தில் அவளால் பார்க்க முடிந்தது. மழையின் சுகந்தம் காற்றில் இருந்தது. கீழே தெருவில் ஒரு சில்லறை வியாபாரி தன்னுடைய பொருள்களைக் கூவி விற்றுக் கொண்டிருந்தான். தொலைவில் யாரோ பாடிக்கொண்டிருந்த ஒரு பாட்டின் ஸ்வரங்கள் மங்கலாகக் கேட்டன; தாழ்வாரத்தில் எண்ணற்ற குருவிகள் காச்மூச்சென்று கத்திக்கொண்டிருந்தன.

மேற்கு பார்த்த ஜன்னல்வழியே, இணைந்தும் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்காக அமைந்தும் இருந்த மேகங்களின் ஊடாக நீலவானம் அங்கும் இங்குமாக பாத்திகளாகத் தோற்றமளித்தது.

இருக்கையின் குஷன்மீது தலையைச் சாய்த்தபடி அசைவின்றி உட்கார்ந்திருந்தாள்; அழுதுகொண்டே தேம்புவதைப் போல அவ்வப்போது ஒரு விம்மல் மேலெழுந்து அவளுடைய தொண்டைக்கு வந்து அவளை உலுக்கியது.

இளம் பெண்ணான அவளுடைய முகம் அழகும் சாந்தமும் கொண்டிருந்தது; அதன் கோடுகள் அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சி நிலையையும் ஒருவகை வலிமையையும்கூட குறிப்பிட்டுக் காட்டின. ஆனால் இப்போது தூரத்திலிருந்த ஒரு நீலவானத் துண்டத்தின்மீது பதிந்திருந்த அவளுடைய கண்களில் உணர்வு மழுங்கிய  வெற்றுப்பார்வை இருந்தது. அது சிந்தனைவயப்பட்ட பார்வை இல்லை; புத்திசாலித்தனமான ஒரு எண்ணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததை அது சுட்டிக்காட்டியது.

ஏதோ ஒன்று அவளிடம் வந்துகொண்டிருந்தது; அவளும் அதற்காக பயத்துடன் காத்துக்கொண்டிருந்தாள். என்ன அது? அவளுக்குத் தெரியவில்லை. அது மிக நுட்பமானது; பெயரிட முடியாதது. ஆனால் வானத்திலிருந்து ஊர்ந்து வெளியேறி காற்றில் நிரம்பியிருந்த ஒலிகள், வாசனைகள், வண்ணங்களின் ஊடாக வந்து அவளை அடையும் அதை அவளால் உணர முடிந்தது.

இப்போது அவளுடைய மார்பு ஆவேசத்துடன் விம்மியெழுந்து அடங்கியது. அவளை ஆட்கொள்ள அவளை நோக்கி வரும் அதை அவள்  அடையாளம் காணத் தொடங்கியிருந்தாள். அவளுடைய இரண்டு வெண்ணிற மெலிந்த கைகளுக்கு வலிமையில்லாமலிருந்ததைப் போலவே அவளுடைய சக்தியற்ற மனதால் அதைத் துரத்தக் கடும் முயற்சி மேற்கொண்டிருந்தாள்.

தன்னை மறந்திருந்த ஒரு கணத்தில் அவள் முணுமுணுத்த சின்ன வார்த்தை ஒன்று லேசாகப் பிரிந்திருந்த உதடுகளிலிருந்து தப்பித்து வெளியேறியது. அடங்கிய குரலில் அவள் அதைத் திரும்பத் திரும்ப சொன்னாள்: “விடுதலையாகி, விடுதலையாகி, விடுதலையாகி.’’ வெறுமையான பார்வையும் அதைத் தொடர்ந்த பீதி கலந்த நோக்கும் கண்களைவிட்டு அகன்றன. கண்கள் தெளிவாகவும் பிரகாசமாகவும் இருந்தன. அவளுடைய நாடித்துடிப்பு அதிகரித்தது. ஓடும் ரத்தம் வெதுவெதுப்பாகி உடலின் ஒவ்வொரு அங்குலத்திலும் நின்று ஆசுவாசம் கொண்டது.

அவளைக் கைக்கொண்டிருந்தது குரூரமான மகிழ்ச்சியா, இல்லையா என்று கேட்டுக்கொள்ள அவள் காத்திருக்கவில்லை. தெளிவான, பரவசமான ஒரு புலன் உணர்வு அந்த யோசனையை அற்பமானது என்று அவளைப் புறக்கணிக்கவைத்தது.

மரணத்தின் காரணமாக மடங்கிப்போன, கருணையும் மென்மையும் கொண்ட அந்தக் கைகளையும் எப்போதும் நேசத்துடன் அவளைப் பார்த்துவந்த, இறந்து வெளிறிப்போய் நிலைகொண்ட அந்த முகத்தையும் பார்க்கும்போது தான் மீண்டும் அழுவோம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், அந்தத் துயர கணத்திற்குப் பிறகு வர இருக்கிற, தனக்கு மட்டும் சொந்தமாக இருக்கப்போகிற பல வருடங்களின் தொடர்ச்சியை அவள் பார்த்தாள். கைகளை விரித்துப் பரப்பி அதை வரவேற்றாள்.

வரப்போகும் அந்த வருடங்களில் அவள் யாருக்காகவும் வாழ வேண்டியதில்லை; தனக்காகவே அவள் வாழப்போகிறாள். கண்மூடித்தனமான வற்புறுத்தலால் அவளுடைய விருப்பத்தை வளைத்துவிடும் சக்திவாய்ந்த ஆசைகொண்ட வேறொரு மனம் இருக்கப் போவதில்லை; சக உயிரினத்தின்மீது தன்னுடைய தனிப்பட்ட ஆசையைச் சுமத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்று ஆண்களும் பெண்களும் நம்புவதற்குக் காரணமாக இருப்பது அந்த வற்புறுத்தல்தான். அந்தச் செயலின் நோக்கம் அன்பு நிறைந்ததா, குரூரமானதா என்பது ஒரு பொருட்டில்லாமல் நிச்சயம் அது ஒரு குற்றமே என்பதை அந்தக் குறுகிய கணத்தில் உண்டான ஞான வெளிச்சத்தில் அவளால் பார்க்கமுடிந்தது.

இருந்தும் அவனை சில சமயங்களில் அவள் நேசித்திருக்கிறாள். பெரும்பாலும் அவனை அவள் நேசித்ததில்லை. ஆனால் அது ஒரு விஷயமே இல்லை. தன் இருப்பின் மிக வலிமையான உணர்ச்சியாக அவள் திடீரென்று கண்டுகொண்ட தன்னுரிமைக்கு முன்னால் தீர்க்கப்படாத புதிரான காதலுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

“விடுதலையாகி, உடலும் ஆன்மாவும் விடுலையாகி,’’ என்று அவள் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

மூடியிருந்த கதவுக்கு முன்னால் முழங்காலிட்டு உட்கார்ந்திருந்த ஜோசஃபின் சாவி துவாரத்தில் தன்னுடைய உதடுகளைப் பொருத்தி தன்னை உள்ளே விடுமாறு மன்றாடிக்கொண்டிருந்தாள். “லூசி கதவைத் திற! கெஞ்சிக் கேட்கிறேன்; கதவைத்திற. உனக்கு ஏதும் தீங்கு நேர்ந்து விடப்போகிறது. லூசி, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? தயவு செய்து கதவைத்திற.’’

“போய்விடு. எனக்கு எதுவும் தீங்கு நேராது.’’ உண்மையில், திறந்திருந்த அந்த ஜன்னல்வழியாக அவள் அமுதத்தைக் குடித்துக் கொண்டிருந்தாள். அவள் முன்னால் உள்ள நாட்களின் ஊடாக அவளுடைய கற்பனை தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. வசந்தத்தின் நாட்களும் கோடையின் நாட்களும் பிற எல்லாவகை நாட்களும் அவளுக்கே சொந்தமாக இருக்கப்போகின்றன. தன் வாழ்நாள் நெடியதாக இருக்கட்டும் என்று அவள் ஒரு வேகமான பிரார்த்தனையை முணுமுணுத்தாள். நேற்றுதான், வாழ்க்கை நீண்டதாக இருந்துவிடப்போகிறதே என்று திகிலுடன் அவள் நினைத்திருந்தாள்.

கடைசியில் அவளுடைய சகோதரியின் வற்புறுத்தலால் அவள் எழுந்து கதவைத் திறந்தாள். அவளுடைய கண்களில் படபடப்பு நிறைந்த ஒரு வெற்றிப் பெருமிதம் இருந்தது. வெற்றியின் தேவதைக்கு இருக்கும் ஒரு தன்னுணர்வற்ற பாவனை அவளுடைய தோரணையில் இருந்தது. அவளுடைய சகோதரியின் இடுப்பைப் பற்றிக்கொண்டு மாடிப்படியில் இறங்கினாள். கீழே ரிச்சர்ட்ஸ் அவர்களுக்காகக் காத்துக் கொண்டு நின்றிருந்தான்.

முன்கததவை, சாவியைக்கொண்டு யாரோ திறந்து கொண்டிருந்தார்கள். பயணத்தின் காரணமாகக் கொஞ்சம் அழுக்கடைந்திருந்த ப்ரென்ட்லி மேலட், தன்னுடைய கைப்பையுடனும் குடையுடனும் அமைதியாக வீட்டுக்குள் நுழைந்தான். விபத்து நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் அவன் இருந்திருக்கிறான். அப்படி ஒரு விபத்து நடந்ததே அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஜோசஃபினின் பெரும் கதறலையும் அவனுடைய மனைவியின் பார்வையிலிருந்து அவனை மறைக்க ரிச்சர்ட்ஸ் வேகமாக நகர்ந்ததையும் பார்த்து அவன் திகைத்து நின்றான்.

ஆனால் ரிச்சர்ட்ஸ் வெகுவாக தாமதித்துவிட்டான்.

அவளைப் பரிசோதிக்க வந்த டாக்டர்கள், அவள் இதய நோயால் – உயிரைப் பறிக்கும் மகிழ்ச்சியால் – இறந்திருக்கிறாள் என்று சொன்னார்கள்.

(1894ல் வெளியான இந்தக் கதை, 2000-01 வாக்கில் மொழிபெயர்க்கப்பட்டு 2002ல் பிறமொழிக்கதைகள் தொகுப்பில் வெளியானது)


கெய்ட் ஷோப்பின் (1851-1904)

அமெரிக்கப் பெண் எழுத்தாளரான இவருடைய சிறுகதைகள் இரண்டு தொகுப்புகளாக – Bayou Folk (1894), A Night in a Acadie (1897) வெளிவந்துள்ளன. தற்போது மிக உன்னதப் படைப்பாகக் கருதப்படும் The Awakening (1899) என்ற அவருடைய நாவல், “ஒரு பெண்ணிடமிருந்து வந்துள்ள மிக அதிர்ச்சி தரும் பட்டவர்த்தனமான எழுத்து.’’ என்று அக்கால மதிப்புரையாளர்களால் கடும் கண்டனத்துக்குள்ளானது. நிலை குலைந்துபோன ஷோப்பின் அதன்பிறகு எழுதுவதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். பெண்ணிய எழுத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். 


புனைவு என்னும் புதிர் கட்டுரை – உலகச் சிறுகதைகள் 11 

விமலாதித்த மாமல்லன் 

அபாரமான கதை. அபாரம் என்று சொல்லுமளவிற்கு அப்படியென்ன இருக்கிறது; அட அல்லது அடடா என்று  சொல்லவைக்கிற முடிவு என்பதைத்தாண்டி என்ன இருக்கிறது என்று தோன்றும்படி அமைதியாக எழுதப்பட்டிருக்கிற கதை. 

கதை ஆரம்பிக்கிற விஷயத்திலேயே முடியவும் செய்வது – இறுதியில் இருக்கிற சிறிய திருப்பத்தைத் தாண்டி – அப்படியொன்றும் பெரிய விஷயமில்லையே. அந்தத் திருப்பம்கூட ஏற்கெனவே பலமுறை பார்த்ததுதானே. எழுதியவர் 120 வருடங்களுக்கு முன்னரே இறந்துவிட்டார் என்கிற பழமை காரணமாக, அப்போது இது புதுமையாக இருந்திருக்கலாம் என்கிற சலுகையை வேண்டுமானால் கொடுக்கலாம் என்றாலும் அபாரம் என்று சொல்வதெப்படி என தோன்றக்கூடும்.

அபாரம் திருப்பத்தில் இல்லை. அதன் உள்ளே இருக்கிறது. 

பொதுவாகவே பெண் எழுத்தாளர்கள், ‘பெண் எழுத்தாளர்’ என்று குறிப்பிடப்படுவதை எழுத்தாளர் என்று கூறுவதைக்காட்டிலும் மாற்றுக் குறைவாகக் கருதுவதால் விரும்புவதில்லை. 

எழுத்துக்கு மனம் முக்கியம். எவ்வளவு சம்பவங்களை வைத்து எழுதினாலும் கதையில் பாத்திரத்தின் மனம் மிக மிக முக்கியம். அதன் எண்ணம் முக்கியம். மனம் இல்லாத மனிதனே இல்லை என்பதால் ‘மனம் இல்லாத கதைகள்’ வாசக மனத்தில் உட்காருவதில்லை.

வணிகம், இலக்கியம், என்று இரண்டிலுமே ‘மனதை’ விரித்து எழுதியவர்களே வெற்றிபெற்றிருக்கிறார்கள். அதிலும் பெண் மனதை எழுதியவர்களே பெருமளவில் பிரபலமாகியிருக்கிறார்கள். 

ஆண்களால் ஆன சமூகத்தில் பொதுவான புறவயப் பார்வையில் பெண்ணைக் கவர்ச்சிப்பொருளாகவே பார்க்கிறவன் கூட பெண்ணின் மனதை வெல்வதையே உண்மையான வெற்றியாகக் கருதுகிறான். எனவேதான் எழுத்திலும் பெண் ஸ்பெஷலிஸ்ட்டுகளுக்கு ஏகப்பட்ட டிமாண்டு. வணிக எழுத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சுஜாதாவைவிட வெறிகொண்ட வாசக வாசகிகள் பாலகுமாரனுக்கே அதிகம். இலக்கிய எழுத்திலும் ஜானகிராமனை ஜிலுஜிலுப்பு என்று ஒதுக்கத்தான் முடிந்ததே தவிர சுந்தர ராமசாமியால் அவரைத் தொடமுடியவில்லை. ஆக, வணிகமோ இலக்கியமோ ஆண் எழுத்தாளர்களே ‘பெண் மனதை’யும் எழுதி, இருபாலரையும் கவர்கிறவர்களாக இருக்கிறார்கள். 

வெற்றிகரமான வெகுஜன பெண் எழுத்தாளர்கள் அசட்டு செண்ட்டிமெண்ட் அல்லது அதற்குமேல் பொதுவெளி அனுமதிக்காது என்பதால் மனம் சார்ந்த தடவலியல் காமத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள் என்றால், பெண்ணிய எழுத்தாளர்கள், இடதுசாரிகளைப்போல கிடக்கிறது கழுதை இலக்கிய அமைதி என்று அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதி மிரட்டுபவர்களாக இருக்கிறார்கள். 

ஒவ்வொரு எழுத்தும் நெட்டுக்குத்தாக எழுந்து நின்று நரம்பு முறுக்கேறும்படி மேடைப்பேச்சுபோல சத்தம்போட்டுக்கொண்டே இருந்தால்தான் புரட்சிகரம், கலகம் என்கிற சிறுபிள்ளைத்தனமான எண்ணம் இன்னும் இங்கே முற்போக்குகளிடம் நிலவிக்கொண்டிருக்கிறது. 

விபத்தில் கணவனை இழந்த பெண், 

– ‘வரப்போகும் அந்த வருடங்களில் அவள் யாருக்காகவும் வாழ வேண்டியதில்லை;’

– ‘கண்மூடித்தனமான வற்புறுத்தலால் அவளுடைய விருப்பத்தை வளைத்துவிடும் சக்திவாய்ந்த ஆசைகொண்ட வேறொரு மனம் இருக்கப் போவதில்லை;’ 

– ‘அன்பு நிறைந்ததா, குரூரமானதா என்பது ஒரு பொருட்டில்லாமல் நிச்சயம் அது ஒரு குற்றமே என்பதை அந்தக் குறுகிய கணத்தில் உண்டான ஞான வெளிச்சத்தில் அவளால் பார்க்கமுடிந்தது.’

கணவன் இறந்த செய்தியை அறைகுறையாகக் கேள்விப்பட்ட ‘ஒரு மணி நேரத்திற்குள்’ இப்படி எண்ணுவதாகவும் அதை ஞானமாகவும் ஒரு ‘பெண்’ எழுதியதை – நிறபேதமின்றி ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் ஓட்டுரிமைகூட அளிக்காத அமெரிக்க சமூகம் – எப்படிப் பார்த்திருக்கும். அந்தக் காலத்தில் இப்படி எழுத இவருக்கு எவ்வளவு மனத்திண்மை இருந்திருக்கவேண்டும். 

இதோடு நிற்காமல் 

– ‘இருந்தும் அவனை சில சமயங்களில் அவள் நேசித்திருக்கிறாள். பெரும்பாலும் அவனை அவள் நேசித்ததில்லை. ஆனால் அது ஒரு விஷயமே இல்லை. தன் இருப்பின் மிக வலிமையான உணர்ச்சியாக அவள் திடீரென்று கண்டுகொண்ட தன்னுரிமைக்கு முன்னால் தீர்க்கப்படாத புதிரான காதலுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.’ 

என்று எழுதியிருப்பது இப்போதுகூட அரிது என்றே தோன்றுகிறதல்லவா. 

கதையின் இறுதியில் இருக்கிற திருப்பம், திருப்பமாக, திருப்பத்திற்காக மட்டுமே வைக்கப்பட்டதாக இருந்திருந்தால் இது வெறும் சுவாரசியக் கதையாக மட்டுமே எஞ்சிவிட்டிருக்கும். 

அந்தக் கையறுநிலையில், தனிமையில் அவள் மனம் என்ன நினைத்தது என்று முன்னால் எழுதியிருப்பது மட்டுமின்றி – எல்லோரையும் போல அதிர்ச்சியில் ஆரம்பத்தில் அழுதவள், மெல்ல அதிலிருந்து இவ்வளவு தீவிரமான எண்ணத்திற்கு எப்படி வந்து சேருகிறாள் என்கிற மாற்றத்தை இயல்பாக உருவாக்க, இயற்கையைப் பயன்படுத்திக்கொள்வதும் சேர்ந்தே, பின்னால் வரப்போகிற திருப்பத்தைத் தரமான இலக்கிய அம்சமாக உயர்த்துகின்றன. 

அடுத்து என்ன அடுத்து என்ன என்று அடித்துப் பிடித்து தலைதெறிக்க வாசித்துக்கொண்டு ஓடுகிற பெரும்பான்மைக்கு இலக்கியம் போரடிப்பதற்கு முக்கியமான காரணம் – விவரணைகள். 

இலக்கியம் போன்ற தோற்றத்தில் இருக்கக்கூடிய பாவங்கள், இலக்கியம் என்றால் விவரிக்கவேண்டும் என்கிற மேலோட்டமான புரிதலில் விவரணையை, பக்கங்களைப் பெரிதாக்கக் கிடைத்த வரப்பிரசாதமாய் சொன்னதையே சொல்லிச்சொல்லி பிழிந்து வைத்து தப்பித்தவறி இலக்கியத்தை எட்டிப்பார்க்க வருபவனையும் தலைதெறிக்க ஓடவைத்துவிடுகின்றன. 

சாண்டில்யனுக்கு, வர்ணனை வாசகனுக்கு சரீர சுகமளிக்கப் பயன்பட்டது என்றால் சுஜாதாவுக்கு பொழுதுபோக்கு வாசகன் தன்னை உயர்ரசனை உள்ளவனாய் நினைத்துக்கொள்ள உதவியது. நுட்பமான விவரணையைக் கொண்டே அசோகமித்திரன் கதையை நகர்த்துகிறார் என்றால் வண்ணதாசன் அதிலேயே மூழ்கி முக்தியடைந்துவிடுகிறார். 

இந்தக் கதையின் இறுதியில் வருகிற திருப்பமோ, அதில் இருக்கிற முரண்-நகையோ, 

– கனவன் உயிரோடு இருப்பதிலோ அல்லது வெண்ணெய் திரண்டு வரும்போது உடைந்த தாழியாய் அவள் இறந்துபோவதிலோ இல்லை. 

பலகீனமான இருதயத்தைக் கொண்ட பெண், இறந்துவிட்டதாய் எண்ணிய கணவன் உயிரோடிருப்பதைக் கண்ட இன்ப அதிர்ச்சியில் தாங்கமுடியாத மகிழ்ச்சியில் இறந்துவிட்டாள் என்று புறவயமான பொதுப்பார்வையில் டாக்டர்களை அறிவிக்க வைப்பதில் இருக்கிறது. 

கதையில் அவளை பலகீனமான இதயத்துடன் வைத்தது, இறுதியில் வருகிற ட்விஸ்ட்டுக்காக மட்டுமின்றி, உடலால் இவ்வளவு பலவீனமாக இருப்பவள் மனதால் எவ்வளவு உறுதியானவளாய் இருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகவும்தான். 

அவளது உள்மனம் அறிந்த வாசகனுக்குத் தெரியும், நடந்த அசம்பாவிதத்திற்காக ஆரம்பத்தில் அழுதாலும், மனதளவில் அவள் மகிழ்ச்சிகரமான எதிர்காலத்தை எதிர்நோக்கி நிற்கிறாள் என்பது. 

சற்றும் எதிர்பாராதவிதமாகக் கணவன் உயிரோடு வந்ததைக் கண்ட அதிர்ச்சியில் இறந்தவளை – உயிரைப் பறிக்கும் மகிழ்ச்சியால் – இறந்துவிட்டதாக மருத்துவர்களைச் சொல்ல வைக்கிற, பெண் மனதை அறியாத, அறிந்துகொள்ளும் அக்கறையும் இல்லாமல் இதுதான் அவள் என்று  எதேச்சதிகாரத்துடன் தமக்குத் தோன்றுவதை அறிவிக்கிற ஆண் சமூகத்தைப் பற்றிய விமர்சனம் கலந்த முரண்-நகை காரணமாகவே, வெளியாகி 129 வருடங்களாகியும் இது, அபாரமான கதையாக இன்னும் இருந்துகொண்டு இருக்கிறது. 

***

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!