நார்வேக்கும் வட துருவத்துக்கும் இடையிலான ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே ஸ்பிட்ஸ்பெர்கன் என்ற தீவு இருக்கிறது. அந்தத் தீவில் பனிக்கட்டி மலைக்கு உள்ளே, மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான ஒரு செல்வம் பாதுகாக்கப்படுகிறது. அது நிலக்கரியோ, எண்ணெய்யோ, தாதுக்களோ அல்ல. விதைகள். ஆம் உலக நாடுகளிலிருந்து பல விதமான விதைகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன. இதை ஸ்வால்பார்ட் உலக விதைப் பெட்டகம் (svalbard World Seed Vault) என்றும் டூம்ஸ்டே வால்ட் என்றும் அழைக்கப்படுகிறது.
1980 ஆம் ஆண்டு பயிர் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாக இயக்குநரான கேரி ஃபோலர் இந்தப் பெட்டகத்தை ஆரம்ப நிலையில் உருவாக்கினார். அவரது யோசனை 2001 ஆம் ஆண்டு ஐநாவால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வதேச விதை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதற்கு நோர்வே அரசாங்கம் நிதியளித்தது. 2008 ஆம் அதிகாரப்பூர்வமாக ஸ்வால்பார்ட் பெட்டகம் திறக்கப்பட்டது. இன்றும் நார்வே அரசாங்கம் பயிர் அறக்கட்டளையுடன் இணைந்து பெட்டகத்தை இயக்குகின்றது.
இங்கு செல்ல, விமானம் மூலம் நோர்வேயில் உள்ள லாங்கியர்பைன் நகரத்தை அடைய வேண்டும். அங்கிருந்து சில மணிநேரம் பயணம் செய்தால் ஸ்வால்பார்ட் உலக விதைப் பெட்டகத்தைப் பார்க்க முடியும். பரந்து விரிந்த பனி நிலத்திற்கு நடுவில் செவ்வக வடிவில் ஒரு பெரிய கட்டடம் தெரியும். அதுவும் பனி சாப்பிட்டுவிட்ட மிச்சம் போல் இருக்கும். உள்ளே சென்று பார்க்க அனைவருக்கும் அனுமதி கிடையாது. வெளியே பெரிய கதவுக்குப் பக்கத்தில் சிறிய கடவுக்குறியீடு இயந்திரம் (Passcode Machine) மட்டுமே உள்ளது.
Add Comment