இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா நிகழ்த்தியிருக்கும் தாக்குதல், இதனை ஒரு போராகவே சுட்டிக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் லஷ்கர் ஆதரவுத் தீவிரவாத இயக்கமான தி ரெசிடென்ஸ் ஃப்ரண்ட் நடத்திய தாக்குதலை அடுத்து இன்று (மே 7, 2025) அதிகாலை 1.44 மணிக்கு இந்தியாவின் முப்படைகளும் இணைந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதலைத் தொடங்கின.
ஆப்பரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ள இத்தாக்குதல், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் ஒன்பது முகாம்களின் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுவரை (காலை ஏழு மணி நிலவரம்) பன்னிரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. முசஃபராபாத் பகுதி (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) மட்டுமல்லாமல் அதற்கு அப்பாலும் பாகிஸ்தானுக்குள் பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட் போன்ற இடங்களில் தாக்குதல் நிகழ்ந்திருப்பதைக் கருதினால், இது மேலும் தொடரலாம் என்றே தெரிகிறது. இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில் ‘நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம்.
1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா நிகழ்த்தத் தொடங்கியிருக்கும் பெரும் தாக்குதல் இதுவே. ஆனால் ‘பாகிஸ்தான் ராணுவத்தைக் குறி வைத்து நாங்கள் தாக்கவில்லை; தீவிரவாத முகாம்களே இலக்கு’ என்று இந்தியா குறிப்பிட்டிருக்கிறது. இது எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பதை இப்போது கணிக்க இயலாது.
Add Comment