28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர் மின்வெட்டு நிகழ்ந்தது. இதனால் பக்கத்தில் உள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சிறு தாக்கம் ஏற்பட்டாலும் அவை சில செகன்ட்களுக்குள் அதிலிருந்து மீண்டுவிட்டன. அதனால் அண்டை நாட்டுப் பயனாளர்களால் அது கவனிக்கப்படவில்லை. ஆனால் ஸ்பெயினும் போர்ச்சுகலும் இதிலிருந்து மீளப் பல மணி நேரங்கள் எடுத்தன. கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணி நேரங்களுக்குப் பின்னரே மின்சார வினியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பியது.
இத்திடீர் மின்வெட்டின் காரணமாக இவ்விரு நாடுகளிலும் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். சாலைகளில் சிக்னல் லைட்கள் இல்லை. மின்சாரத்தில் இயங்கும் ரயில் போக்குவரத்து நின்றது. விமான நிலையங்களில் பல ஃப்ளைட்கள் ரத்து செய்யப்பட்டன. இப்படியாக இரு நாடுகளும் பல்வகையான சவால்களை எதிர்கொண்டன. அத்துடன் சங்கிலித் தொடராக ஏற்படும் பாதிப்புகளையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது.
சில வளரும் நாடுகளில் அவ்வப்போது அரசாங்கங்களால் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் நடைபெறுவதுண்டு. தேவைக்கு ஏற்ற மின்சார உற்பத்தி இல்லாதது இப்படியான திட்டமிட்ட மின்வெட்டுகளுக்குப் பொதுவான காரணமாகும். ஆனாலும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று மின்சார இணைப்புகளால் இணைந்து இருப்பதால் பொதுவாகப் பெருமளவிலான மின்வெட்டுகள் இடம் பெறுவதில்லை. மின்வெட்டுகள் புறக்காரணிகளால் இடம்பெறும்போது அவை ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் கட்டுப்படுத்தப்பட்ட மின்வெட்டாகவே இருக்கும். இப்படி இரு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய திடீர் மின்வெட்டு அண்மைக்காலங்களில் இடம் பெறவில்லை.
Add Comment