Home » ஸொரோக்கோவும் அவனுடைய அம்மாவும் மகளும்
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

ஸொரோக்கோவும் அவனுடைய அம்மாவும் மகளும்

ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா (1908-1967)
ஆங்கில மொழிபெயர்ப்பு: Barbara Shelby
தமிழில்: ஆர். சிவகுமார்


ஓடாத வண்டி ஒதுங்கி நிற்பதற்காகப் போடப்பட்ட தண்டவாளத்தின் மீது முதல் நாள் இரவிலிருந்து அந்த ரயில் பெட்டி நின்றிருந்தது. ரியோவிலிருந்து வந்த விரைவு வண்டியில் சேர்க்கப்பட்டு வந்த அது இப்போது நிலைய நடைமேடைக்குப் பக்கத்தில் இருந்த உள்பக்க தண்டவாளத்தில் இருந்தது. சாதாரண முதல் வகுப்புப் பயணிகள் பெட்டியைவிட அது புதிதாகவும் பளபளப்பாகவும் இருந்தது. நீங்கள் அதைப் பார்த்த மாத்திரத்திலேயே அது எப்படி வித்தியாசமாக இருந்தது என்பதைக் கண்டுகொள்ள முடியும். அது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதியின் ஜன்னல்கள், சிறைச்சாலையில் உள்ளவற்றைப் போல் கம்பித்தடுப்பைக் கொண்டிருந்தன. தொலைதூர நகரம் ஒன்றிலிருந்து எப்போதும் 12.45 மணிக்கு வரும் வண்டியோடு சேர்க்கப்படப்போகும் அந்தப் பெட்டி, இரண்டு பெண்களை அவ்வூரிலிருந்து நிரந்தரமாகக் கூட்டிக் கொண்டு போகப்போகிறது.

பெட்டியைச் சுற்றி கூடத் தொடங்கியிருந்த கூட்டம் வெறுமனே காத்துக்கொண்டிருந்தது. அந்தச் சூழலை ஒரு சோகத் தருணமாக மாற்ற விரும்பாமல் அக்கூட்டத்திலிருந்த ஒவ்வொருவரும் அங்கு நடந்து கொண்டிருந்ததை குறித்து அடுத்தவரைவிடத் தங்களுடைய உலகியல் ஞானம் கூடுதலாகத் தெரியும்படி வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். மேலும் மேலும் ஜனங்கள் வந்து சேர்ந்தார்கள். பட்டியிலிருந்து கால்நடைகள் ரயிலில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு அடுத்திருந்த நடைமேடையின் முனையில் தொடர்ந்து ஒரு சலசலப்பு இருந்துகொண்டேயிருந்தது. மர அடுக்குகளுக்கு இந்தப்பக்கம், ரயில் செல்லும் வழியை மடைமாற்றும் பணியாளின் கண்காணிப்பு அறை இருந்தது. ஸொரோக்கோ இரண்டு பெண்களையும் அழைத்துவரப்போகிறான். அதைச் செய்தாக வேண்டுமென்பதை அவன் ஏற்றுக் கொண்டான். ஸொரோக்கோவின் அம்மா முதியவள்; வயது எழுபதாவது இருக்கும். ஸொரோக்கோ மனைவியை இழந்தவன். எல்லாரும் அறிந்த வகையில் அவனுக்கு உறவு என்று ஒருவருமில்லை.

சூரிய வெப்பம் உச்சத்தில் இருக்கும் வேளை அது. அகில் மரங்களின் நிழலில் ஒதுங்கியிருக்கக் கூட்டத்தினர் முயன்றுகொண்டிருந்தார்கள். ரயில் பெட்டி ஒரு பெரிய தோணியைப்போல, வறண்ட நிலத்தின் மீது இருந்த ஒரு கப்பலைப்போலத் தோன்றியது. இரண்டு முனைகளும் மேல்நோக்கியிருக்க, சூழலோடு பொருந்திப்போகாத ஒன்றாக அதைக் காற்றிலிருந்த வெயிலின் மினுக்கம் தோன்ற வைத்தது. கவிழ்த்துப்போடப்பட்ட தொப்பை வயிற்றைப்போல இருந்த அதன் கூரை கருமையாகப் பளபளத்தது. மனித உணர்வுகள் அற்ற ஒருவரால் வேற்று கிரகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத எந்திரம்போல அது தோன்றியது. உங்களால் அதைக் கற்பனை செய்திருக்கவே முடியாது; அதைப் பரிச்சயம் செய்துகொள்ளவும் உங்களால் முடியாது; உங்களுக்குத் தெரிந்த உலகத்துக்கு உரியது அல்ல அது. மிகத் தொலைவில் இருந்த பார்பஸெனா என்ற நகரத்திற்கு அந்தப் பெண்களை அது கூட்டிக்கொண்டு போகப்போகிறது. ஏழைக்கு எல்லா இடங்களும் தொலைவுதான்.

கருப்பு அட்டை போட்ட புத்தகம் ஒன்றையும் பச்சை,  சிவப்புக் கொடிகள் சிலவற்றையும் ஏந்தியபடி ரயில் நிலைய அதிகாரி மஞ்சள் நிறச் சீருடையில் வந்து சேர்ந்தார். “பெட்டியில் புதிதாகத் தண்ணீர் வைத்திருக்கிறார்களா என்று பாருங்கள்’’ என்று உத்தரவிட்டார். பிரேக்கைக் கண்காணிக்கும் ஒருவர் வந்து இணைப்புக் குழாய்களை நகர்த்தத் தொடங்கினார். ஸொரோக்கோ வசித்த கீழ்த்தெருவைச் சுட்டிக்காட்டி “அதோ வருகிறார்கள்,’’ என்று யாரோ ஒருவர் கத்தினார். விசாலமான முகமும் கறை படிந்து நார் போன்று இருந்த மஞ்சள்நிற தாடியும் கொண்ட அவன் பெரிய முரட்டு ஆள். குழந்தைகள் அவனைப் பார்த்து பயந்தார்கள். குறிப்பாக அவனுடைய குரலைக் கேட்டு. அவன் பேசுவதே அரிது; ஆனால் பேசினால் குரல் தொடக்கத்தில் கரடுமுரடாகவும் பின்பு தெளிவில்லாமலும் போய்விடும். குழந்தைகள் பெரும் பரிவாரமாக அங்கு வந்திருந்தார்கள்.

பெண்கள் இருவரும் வந்து சேர்ந்து அசையாமல் நின்றார்கள். அந்தப் பெண்ணின் மகள் தன் கைகளை உயர்த்தி பாடத் தொடங்கினாள். பாட்டு நிலைகொள்ளாமல் அலைந்து அபசுரத்தில் ஒலித்தது. வார்த்தைகள் அர்த்தமின்றி வந்தன. ஒரு புனிதரைப் போல அல்லது பேய் பிடித்தவரைப் போல அந்தப் பெண் தன்னுடைய கண்களை வானத்தை நோக்கி உயர்த்தினாள். அவள் அதிசயத் தோற்றம் கொண்டிருந்தாள். ஒரு கோமாளியைப்போல அவளுடைய அலங்காரம் இருந்தது; கலைந்து போயிருந்த தலைமுடி மீது துண்டுத்துணிகளாலும் காகிதத் துண்டுகளாலும் ஆன தொப்பியை அணிந்திருந்தாள். பலவித ஆடைகளை மனம்போன போக்கில் ஒன்றின் மீது ஒன்றாக அணிந்திருந்தாள். அவளுடைய உருவம் பெருத்திருந்தது. ரிப்பன்கள் காற்றில் ஆடின; ஆங்காங்கே பட்டைகைகளால் ஆடைகள் கட்டப்பட்டிருந்தன; எல்லாவகையான சிங்கார அணி வகைகளும் அவளை அலங்கரித்தன: முழு கிறுக்குத்தனம். கருப்பு உடையையும் பூத்தையலிட்ட முக்கோண கருப்புச் சால்வையையும் கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த அந்த வயதான பெண் தன்னுடைய தலையை முன்னும் பின்னும் பின்னுமாக மென்மையாக அசைத்தாள். மிகவும் வேறுபட்டிருந்தும் அந்தப் பெண்கள் இருவரும் ஒரே மாதிரியாகவே இருந்தார்கள்.

திருமணத்திற்கு, தேவாலயத்திற்குள் நுழைவதைப் போல, பக்கத்திற்கு ஒருவராக வர ஸொரோக்கோ அந்த இரண்டு பெண்களையும் கைகொடுத்து அழைத்துவந்தான். அது ஒரு சோகம் நிரம்பிய கேலி நாடமாக இருந்தும் அதிகமும் ஈமச்சடங்கையே ஒத்திருந்தது. அந்தப் பெண்களின் கட்டுப்படுத்த முடியாதனவும் அபத்தமானவையுமான செயல்களைக் கண்டு சிரித்து விடுவோமோ என்று பயந்தும் ஸொரோக்கோவின் இயல்பு காரணமாகவும் கூட்டம் தள்ளியே நின்றது. நெருங்கிச்சென்று பார்ப்பது நயக்குறைவாகவே தோன்றியிருக்கும். இன்று அவன் அணிந்திருந்தவை அவனிடமிருந்த பழைய கந்தலானவற்றிலேயே சிறந்த பூட்ஸ், மேலங்கி, பெரிய தொப்பி. அவனுடைய வழக்கமான தோற்றத்திலிருந்து குறைத்தும் குழம்பியவனாகவும் பெரும்பாலும் பணிவானவனாகவும் அவனைக் காட்டின. எல்லாரும் தங்களுடைய மரியாதை கலந்த வருத்தத்தைத் தெரிவித்தார்கள். ஸொரோக்கோ, ‘‘உங்களுடைய சிரமத்தைக் கடவுள் ஈடு செய்வாராக,’’  என்று சொன்னான்.

ஸொரோக்கோ வியக்கத்தக்கவகையில் பொறுமையாக இருந்ததாகவும் அந்த இரக்கத்துக்குரிய இரண்டு பெண்கள் போய்விடுவது அவனுக்குப் பெரிதாக வருத்தத்தைத் தராது என்றும் கூட்டத்தில் இருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். அந்தப் பெண்கள் நிரந்தரமாகப் போய்விடுவது அவனுக்குக் கிடைக்கும் கருணையே. அவர்களுக்கு இருந்த நோய்க்குத் தீர்வே கிடையாது. அவர்கள் திரும்பி வரப்போவது கிடையாது. எப்போதுமே திரும்பி வரப்போவதில்லை. ஸொரோக்கோ நிறைய அனுபவித்துவிட்டான்; பல துரதிர்ஷ்டங்களுக்கு உட்பட்டுவிட்டான். அவர்கள் இருவருடனும் வாழ்வது அவனுக்குப் பெரும் போராட்டமாக இருந்தது. வருஷங்கள் போகப்போக அவர்கள் இருவருடைய நிலை மிக மோசமாக ஆனது. அவனால் சமாளிக்க முடியாமல் போனபோது பிறருடைய உதவியைக் கேட்க வேண்டியதாயிற்று. உதவவந்த அதிகாரிகள் எல்லா ஏற்பாடுகளையும் இலவசமாகவே செய்தார்கள். அரசாங்கம் எல்லாச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டு பிரத்யேக ரயில் பெட்டியையும் அனுப்பியிருக்கிறது. இப்படியாகத்தான் அந்த இரண்டு பெண்களும் மன நல விடுதிக்கு அனுப்பி வைக்கப்படப்போவது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

திடீரென்று முதியவள் ஸொரோக்கோவின் கையை விட்டுவிட்டுப் போய் ரயில் பெட்டியின் படிக்கட்டுகளில் உட்கார்ந்துகொண்டாள். ஸொரோக்கோ மென்மையான குரலில் நிலைய அதிகாரியைப் பார்த்து, “அவளால் எந்த தீங்கும் நேராது. ஆனால், நீங்கள் கூப்பிடும்போது வரமாட்டாள்,’’ என்று சொன்னான். பிறகு அந்த இளம்பெண், முகத்தில் பரவசம் கலந்த சாந்தம் தவழ முதலில் கூட்டத்தைப் பார்த்தும் அடுத்து வானத்தைப் பார்த்தும் மீண்டும் பாட ஆரம்பித்தாள். பிறர் தன்னைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தில் அவள் பாடவில்லை. நீண்டகாலத்துக்குமுன் நிகழ்ந்த மேலான, மலைக்க வைக்கிற காட்சிகளை அவள் நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருந்தாள். ஆனால், அதன்பின் உச்ச எல்லையென, தீங்கு குறித்த தொன்மையானதும் மாந்திரீகமானதுமான ஒரு முன்னுணர்வோடு அந்த முதியவள் அவளைப் பார்த்ததை அந்நகர மக்கள் கண்டார்கள். யாராலும் புரிந்துகொள்ள முடியாத அந்த இளம்பெண்ணின் பாடலைப் பின்பற்றி முதலில் மெல்லிய குரலில் தொடங்கி பிறகு போகப்போக வலுத்த குரலில் அவளும் பாடினாள். இப்போது அவர்கள் இருவரும் ஒருசேர தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள்.

ரயில் வரும் நேரமாயிற்று. பூர்வாங்க ஏற்பாடுகளை முடித்து இரண்டு பெண்களையும் குறுக்குவெட்டுக் கம்பிகள்கொண்ட பெட்டிக்குள் அவர்கள் ஏற்ற வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் அது செய்து முடிக்கப்பட்டது. விடைபெறும் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை. அவை நடந்தாலும் எப்படியும் அவர்களுக்குப் புரியப்போவதில்லை. நீண்ட பயணத்தின் போது அவர்களுக்கு வேண்டியதைச் செய்ய அவர்களுடன் கூடவே போகும் இரண்டு பேர் – சுறுசுறுப்பும் குதூகலமும் நிரம்பிய நெநெகோவும், திருவருள் பெற்றவனும் நம்பிக்கைக்குரியவனுமான ஹொஸேவும் – பெட்டிக்குள் போனார்கள். இரண்டு பெண்களுக்கும் எது நடந்தாலும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளும் நம்பிக்கைக்குரியவர்கள் அவர்கள். மூட்டை முடிச்சுகளையும் பெட்டிகளையும் மாமிசம், ஏராளமான திண்பண்டங்கள் தாளில் சுற்றப்பட்ட ரொட்டிகள் ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டு சிறுவர்கள் சிலர் பெட்டிக்குள் ஏறினார்கள். கடைசியாக நடைமேடையில் தோன்றிய நெநெகோ எல்லாம் சரியாக இருக்கிறது என்று சைகையில் காட்டினான். இரண்டு பெண்களும் எவ்விதத் தொந்தரவும் செய்யப்போவதில்லை. அப்போது கேட்டுக் கொண்டிருந்தது அந்த பெண்களின் கிளர்ச்சிமிக்க பாடல் மட்டுமே. உங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக, எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் துக்கப்பட வைக்கும் வாழ்க்கையின் விசித்திர மாற்றங்களைக் குறியீடாக அந்த ஒருமுகப்படாத பாடல் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

அந்த சம்பவம் முடிந்துவிட்டால் எத்தனை நிம்மதி. ரயில் வந்து கொண்டிருந்தது. ஒதுங்கி நின்றுகொண்டிருந்த பெட்டியை எஞ்சின் லாகவமாக தன்னுடன் சேர்த்துக்கொண்டது. ஊதல் ஒலியை எழுப்பிக்கொண்டு ரயில் பெரும் சப்தத்துடன் இழைந்து நகர்ந்து எப்போதும்போல சென்றுவிட்டது.

அது மறையும் வரை ஸொரேக்கோ காத்திருக்கவில்லை. அதை அவன் பார்க்கவே இல்லை. கையில் தொப்பியுடனும் அடர்ந்த தாடியுடனும்  அவன் நின்றான். எதுவும் அவன் காதில் விழாததுதான் இரக்கத்துக்குரியதாகத் தோன்றியது. சில வார்த்தைகளைக்கூட சொல்ல இயலாத நிலையில் இருந்த அந்த மனிதனின் வெளிப்படையான துக்கம். ஏற வழி இல்லாத பெரும் குழிக்குள் அமிழ்ந்து போய் துயரங்களை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்; புகார் எதுவுமில்லாமல் சுமையைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்ததில் அவன் ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தான். ‘இப்படித்தான் உலகம் இருக்கிறது’ என்று அவர்கள் அவனிடம் சொன்னார்கள். கண்களில் ஈரம் கசிய அவர்கள் அவனை மரியாதையுடன் உற்று நோக்கினார்கள். திடீரென்று எல்லாரும் ஸொரோக்கோவின் மீது அன்புவயப்பட்டார்கள்.

‘எல்லாம் முடிந்து போயிற்று’ என்று சொல்வதைப் போன்றும் தான் இனி பயனற்றுப்போன, முக்கியமல்லாத ஒரு நபர் என்று உணர்த்துவதைப் போலவும் அவன் தன்னை நேர்த்தியற்ற முறையில் உலுக்கிக்கொண்டு வீட்டிற்குபோகத் திரும்பினான். அளவிட முடியாத நீண்ட பயணத்தை மேற்கொள்பவன்போல வீடு நோக்கி நடக்கத்தொடங்கினான்.

ஆனால் சற்றுப்பொறுத்து நின்றான். தன்னுடைய பழைய இயல்பு குறித்த சந்தேகம் வந்தவன்போலவும் தன்னுடைய அடையாளத்தை இழந்தவன்போலவும் ஒரு விசித்திரமான முறையில் தயங்கி நின்றான். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பரிசுத்த ஆன்ம உரு என்பதைப்போல அவன் தோன்றினான். அப்போது, கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமுடியாதது நிகழ்ந்தது. யாரால் அதை நினைத்துப் பார்த்திருக்க முடியும்? திடீரென்று, அவன் வலுவான உரத்த குரலில் வெடித்துச் சீறி பாடத் தொடங்கினான். ஆனால், அது அவனுக்காகவே அந்த இரண்டு பெண்களும் திரும்பத் திரும்பப் பாடிய அதே அர்த்தமற்ற பாடல்தான். அவன் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

செயலற்று நின்ற கூட்டம் திகைத்துப் போனது; ஆனால் அது ஒரு கணம்தான் நீடித்தது. முழுக் கூட்டமும் எந்தவித முன்திட்டமும் இல்லாமல், என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், எல்லாரும் ஒரே குரலில் ஸொரோக்கோவின் மீதான இரக்கத்தின் காரணமாக அந்த அபத்தமான பாட்டைப் பின்தொடர்ந்து பாடத் தொடங்கினார்கள். அவர்களுடைய குரல்கள் எவ்வளவு உரத்து ஒலித்தன! பாடியவாறே அவர்கள் எல்லாரும் ஸொரோக்கோவைப் பின்தொடர்ந்தார்கள்; கூட்டத்தின் கடைசியில் இருந்தவர்கள் கிட்ட­த்தட்ட ஓடி வந்து சேர்ந்துகொண்டார்கள். ஆனால், ஒவ்வொருவரும் பாடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் யார் ஒருவராலும் அதை எப்போதும் மறக்க முடியாது. அதைப்போல எதுவும் எப்போதும் இருந்ததில்லை.

உண்மையில், இப்போது நாங்கள் ஸொரோக்கோவை அவனுடைய வீட்டிற்கு கூட்டிச் சென்றுகொண்டிருந்தோம். அந்தப் பாடல் எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரத்திற்கு அவனோடு நாங்கள் போய்க்கொண்டிருந்தோம்.

நன்றி: கல்குதிரை இதழ் 15 (2010)

குறிப்பு: 1961ல் எழுதப்பட்ட இந்தக் கதை, Alfred A. Knopf நிறுவனத்தால் நியூயார்க்கில் 1968இல் வெளியிடப்பட்ட ‘நதியின் மூன்றாவது கரை, மற்றும் பிற கதைகள்’ என்ற தொகுப்பிலிருந்து, மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் Barbara Shelby


ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா (1908-67)

ப்ரெஸில் நாட்டவர். நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர். மருத்துவர்.  ஜெர்மனியில் தூதரகப் பணியிலும் இருந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்தே பல மொழிகளையும் அவற்றின் இலக்கணங்களையும் கற்கும் ஆர்வமும் திறனும் பெற்றிருந்தார். தன் தாய்மொழியான போர்ச்சுகீஸை ஆழமாகப் புரிந்துகொள்ள அவை உதவியதாக சொல்லியிருக்கிறார். அவர் மருத்துவராகப் பணிபுரிந்த கிராமப்புறங்களின் மக்களும் அவர்கள் வாழ்க்கையும் நாடோடிக் கதைகளும் அவருடைய எழுத்தின்மீது செல்வாக்கு செலுத்தியுள்ளன. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. “நதியின் மூன்றாவது கரை’’ அதிகமும் பேசப்பட்ட கதை. ரோஸாவின் ஒரே நாவலான The Devil to Pay in the Backlands (1956) புது சொல் உருவாக்கங்களுக்காகவும் அதிகமும் வழக்கிலில்லாத பேச்சுவழக்கு மொழிக்காகவும் பெயர் பெற்றது. போர்ச்சுகீஸ் மொழியின் யூலிசிஸ் (ஜேம்ஸ் ஜாய்ஸ்) என்று கருதப்படும் படைப்பு இது.

நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதே ஆண்டு 1967ல் எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமானார்.


புனைவு என்னும் புதிர் கட்டுரை – உலகச் சிறுகதைகள் 13

விமலாதித்த மாமல்லன்

சொல்வதற்கு ஒன்றுமில்லை.

கதையைப் பற்றி மட்டுமில்லை; கதையே சொல்வதற்கு ஒன்றுமில்லை என்கிற கையறுநிலையைப் பற்றியதுதான். என்ன சொல்லி ஆறுதல் அளித்துவிடமுடியும் என்கிற நிலையில் இருப்பவனுக்குச் சொல்ல ஒன்றுமில்லாவிட்டாலும் ஊரே கூடி அவனோடு இருக்கிறது.

சிறுகதை என்பதே பெரும்பாலும் ஒற்றைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு, அதற்கு முன்னும் பின்னும் சேர்த்தும் கோத்தும் இருப்பதுதான். ஆனால் இதுவோ முழு திரைப்படத்திற்குரிய விஸ்தீரணத்துடன் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட குறும்படம்போல இருக்கிறது. கதைகளில் இது அபூர்வம்.

இதிலென்ன அதிசயம். பொதுவாக சிறுகதை என்பதே ஒரு விஷயத்தை ஒரு நிகழ்வைச் சொல்வதாகத்தானே பெரும்பாலும் இருக்கும் என்று தோன்றலாம். ஒற்றைச் சம்பவத்தைப் குறித்ததாகத் தோன்றும் கதைகளில் ஒன்றைத்தொட்டு ஒன்றாக பின்னோக்கிய நிகழ்வுகளோ, இறுதியில் முற்றிலும் எதிர்பாராத ஏதோ ஒன்று புதிதாக நடந்தோதான் பெரும்பாலும் முடியும்.

‘ஓடாத வண்டி ஒதுங்கி நிற்பதற்காகப் போடப்பட்ட தண்டவாளத்தின் மீது முதல் நாள் இரவிலிருந்து அந்த ரயில் பெட்டி நின்றிருந்தது.’

என்று தொடங்குகிற இந்தக் கதையில், அந்த ரயில் பெட்டிக்கு எதிரில் ஸ்டாண்டு போடப்பட்டு, அதன் மீது நிற்கிற கேமரா – ரயில் பெட்டியை, சுற்றிக் குழுமியிருக்கிற ஊர்மக்களை, ரயில் நிலைய அதிகாரியை, பயணப்படுவதற்காக ரயில் பெட்டிக்கு செய்யபடுகிற ஆயத்தங்களை  என்று ஒவ்வொன்றையும் துல்லியமாக ஒரே ஷாட்டில்  பதிவுசெய்தபடி  – ஓடிக்கொண்டு இருக்கிறது.

“அதோ வருகிறார்கள்,’’ என்று கூட்டத்தில் யாரோ கத்தியதும் ஓடிக்கொண்டிருக்கிற அப்படியே அதை நோக்கித் கேமரா திரும்புகிறது.

கதையின் பிரதான பாத்திரங்களான மூவரும் வருவதை, அவர்களின் நடை உடை பாவனைகளை, அந்த ரயில் பெட்டியில் உதவிக்குக் கூடச் செல்லவிருக்கிற ஆட்களை என்று எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்கிற கேமரா போல கதையைச் சொல்லிச் செல்கிற ஆசிரியர்,  சொல்லாமல் விட்டிருக்கும் பகுதியைப் பற்றித்தான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

கதை அல்லது புனைவு என்பது, வெறும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு, கண்ணெதிரில் நடப்பதைப் போன்ற உணர்வை வாசகனுக்கு உருவாக்குவதுதான். மிகச்சிறந்த கலைஞர்கள், மிகக்குறைந்த தீற்றல்களில் தத்ரூபத்தைத் தருவித்துவிடுகிற தேர்ந்த ஓவியனைப்போல மிகக்குறைந்த சொற்களைப் பயன்படுத்தி வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், சில பகுதிகளை வாசகனாகப் புரிந்துகொள்ளும்படிச் சொல்லாமலும் விட்டுவிடுகிறார்கள் – குறிப்பாக இலக்கிய எழுத்தாளர்கள்.

என்ன எழுதியிருக்கிறது, எப்படி எழுதியிருக்கிறது என்பதில் மட்டுமின்றி – எதை எழுதாமல் விடுகிறான் என்பதிலும் இருக்கிறது இலக்கியத்தரம்.

‘இப்படி’ இருக்கிற அம்மாவையும் மகளையும் வைத்துக்கொண்டு மனைவியும் இல்லாத ஒருவன் வாழ்வதைப் பற்றி – வாசகன் நினைத்துப்பார்த்துக்கொள்ளட்டும் என்பதைப்போல – கதையில் பெரிதாக எழுதுவே சொல்லப்படவில்லை. ஆனால், இந்தக் கதையைப் படிக்கிற யாராலும் அதைக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் இருந்துவிடமுடியாது. அதுதான் கதையே என்றாலும் ஆசிரியக் கூற்றாகக் கூட கதையில் அதைப்பற்றிய மெலோடிராமாவே இல்லை என்பதை கவனிக்கவேண்டும்.

வில்லனே இல்லாத கதை. விதியை வில்லனாக்குகிற கதைகள் பெரும்பாலும் வெற்றிபெற்றுவிடும் என்பது எழுதப்படாத விதி. தீர்வே இல்லாத நிலையைக் கதையின் கருவாக எடுத்துக்கொண்டு, எழுத்தாளர்களால் எதிர்மறையாகவே சித்தரிக்கப்படும் அரசாங்கம் கூட உதவுவதாகக் காட்டப்படுகிற, 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கிற இந்தக்கதை, இன்று வாசிப்பவனையும் நெகிழ வைப்பதாக எப்படி இருக்கிறது.

அசட்டுத்தனமாக நெஞ்சை நக்காமல் ஒரு கமெண்ட்டுகூடப் போடமுடியாத வாசகர்களையும் அலகு குத்தி விழி பிதுக்கி ரத்தம் சொட்டச்சொட்ட சாமியாடாமல், சாதாரண வார்த்தைகளில் எதையுமே எழுதமுடியாத எழுத்தாளர்களையும் கொண்டிருக்கிற மிக துரதிருஷ்டவசமான காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிற தமிழ் இலக்கியத்திற்கு – தரமான இலக்கியத்திற்கு இவை தேவையேயில்லை என்பதை உணர்த்த – இதுபோன்ற கதைகள் அவசியம்.

‘இப்படி’ இருக்கிற அம்மாவையும் மகளையும் அனுப்பிவைப்பதன் மூலமாக, ஸொரொக்கோவின் துரதிருஷ்டவசமான வாழ்க்கையில்,   இனியாவது நிம்மதி பிறக்கட்டும் என்று அவனுக்காக இரங்குகிறது ஊர். ஆனால், பொருட்படுத்தத் தக்கவர்களாக இல்லாதிருந்தபோதிலும் சுமையாகவே இருந்தாலும் பெற்றவளும் பெண்ணும் இல்லாமல் போனதில் அவன் தன்னைப் பயனற்றவனாக, முக்கியமற்றவனாக உணர்கிறான்.

மனித மனங்களை எழுத்தில் கொண்டுவருவதுதான் இலக்கியத்தின் முக்கிய அம்சம். மனத்தின் வினோதச் சிக்கல் சிடுக்குகளையும்  முடிச்சுகளையும் மட்டுமின்றி, விமோசனமற்ற எளிய மனிதர்களின் உணர்வுகளையும் இப்படி சத்தம்போடாமல் கொண்டுவருவதும் உயர்ந்த இலக்கியமாகும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது இந்தக் கதை.

முதல் பத்தியிலேயே ‘நீங்கள்’ என்று வாசகனிடம் நேரடியாகப் பேசத்தொடங்கி, கடவுள் பார்வையிலேயே நகர்கிற கதையின் இறுதியில் ‘நாங்கள்’ என்று ஸொரொக்கோவை வீட்டுக்கு அழைத்துச் செல்பவர்களில் ஒருவராகக் கலந்துவிடுகிறார் ஆசிரியர்.

நதியின் மூன்றாவது கரை போன்ற பூடகமான கதையை எழுதியவரா இப்படியான நெகிழ்ச்சியான கதையை எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமென்றால், இரண்டையும் தனித்தனியே படிக்கையில், இவர் இப்படியான எழுத்தில் தேர்ந்தவர் என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்படியாகவே இரண்டையும் எழுதியிருப்பதுதான் பெரிய வியப்பு. எடுத்துக்கொள்கிற விஷயமே எழுதுகிற விதத்தைத் தீர்மானிக்கவேண்டும். அதற்கு இடம்கொடுக்கிறவிதமான இலகுத்தன்மை உடையவனாகவும் எழுத்தாளன் இருக்கவேண்டும்.

‘முழு கிறுக்குத்தனம்’ பற்றிய கதை என்பதாலோ என்னவோ

‘குழந்தைகள் அவனைப் பார்த்து பயந்தார்கள்.

குழந்தைகள் பெரும் பரிவாரமாக அங்கு வந்திருந்தார்கள்.’

*

‘ஒரு புனிதரைப் போல அல்லது பேய் பிடித்தவரைப் போல அந்தப் பெண் தன்னுடைய கண்களை வானத்தை நோக்கி உயர்த்தினாள்.’

*

‘மிகவும் வேறுபட்டிருந்தும் அந்தப் பெண்கள் இருவரும் ஒரே மாதிரியாகவே இருந்தார்கள்.’

*

‘திருமணத்திற்கு, தேவாலயத்திற்குள் நுழைவதைப் போல, பக்கத்திற்கு ஒருவராக வர ஸொரோக்கோ அந்த இரண்டு பெண்களையும் கைகொடுத்து அழைத்துவந்தான். அது ஒரு சோகம் நிரம்பிய கேலி நாடமாக இருந்தும் அதிகமும் ஈமச்சடங்கையே ஒத்திருந்தது.’

*

‘பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பரிசுத்த ஆன்ம உரு என்பதைப்போல அவன் தோன்றினான்.’

‘அது அவனுக்காகவே அந்த இரண்டு பெண்களும் திரும்பத் திரும்பப் பாடிய அதே அர்த்தமற்ற பாடல்தான்.’

என்று, முரண்களாக அடுக்கி வைத்திருக்கிறார் ஆசிரியர்.

உதவிக்குக் கூடப் போகிறவர்களைப்பற்றிக் குறிப்பிடும்போது கூட,

‘அவர்களுடன் கூடவே போகும் இரண்டு பேர் – சுறுசுறுப்பும் குதூகலமும் நிரம்பிய நெநெகோவும், திருவருள் பெற்றவனும் நம்பிக்கைக்குரியவனுமான ஹொஸேவும் – பெட்டிக்குள் போனார்கள்.’

என்கிறார்.

அறியாமல் செய்வது பைத்தியக்காரத்தனம் என்றால்,

‘ஒரே குரலில் ஸொரோக்கோவின் மீதான இரக்கத்தின் காரணமாக அந்த அபத்தமான பாட்டைப் பின்தொடர்ந்து பாடத் தொடங்கினார்கள்.’

அபத்தம் என்று தெரிந்தும் உன்னோடு இருக்கிறோம் என்கிற தோழமை உணர்வுடன் அதைத் தயக்கமின்றிச் செய்வது மனிதாபிமானமாவிடுகிறது.

‘ஆனால், சாவு எனக்கு நேரும்போது, இரு நீண்ட கரைகளுக்கிடையே இடையறாமல் ஓடும் இந்த நீரில் ஒரு சிறிய படகில் நான் வைக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். நான் நதியின் ஆழத்தில், நதியில் மறைந்து போய், நதியின் உள்ளே….நதி.’

என்று முடிகிற நதியின் மூன்றாவது கரை கதையிலும்

‘உண்மையில், இப்போது நாங்கள் ஸொரோக்கோவை அவனுடைய வீட்டிற்கு கூட்டிச் சென்றுகொண்டிருந்தோம். அந்தப் பாடல் எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரத்திற்கு அவனோடு நாங்கள் போய்க்கொண்டிருந்தோம்.’

என்று முடிகிற இந்தக் கதையிலும் சிறுகதைக்கான கச்சிதத் தன்மையை விட காவியத்தன்மைக்கே முன்னிலை கொடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

நாம் மட்டுமென்ன, கதை படிப்பதைப் போலவா இதைப் படித்துக்கொண்டு இருந்தோம்.

***

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!