Home » நான்கு மில்லியன் புதிய ஏழைகள்
உலகம்

நான்கு மில்லியன் புதிய ஏழைகள்

ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நிறைந்தது. ஐந்து முறை பிரதமராகி ஒரு முறையேனும் தன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யாமல் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கே சவால்விட்ட ரணில், ஜனாதிபதியாவார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு யாராவது சொல்லி இருந்தால் உலகம் சிரித்திருக்கும். அரசியல் வல்லுநர்களை விடுங்கள். இலங்கையில் இருந்து செயல்படும் யூட்யூப் சோதிடர்கள்கூட ரனிலின் ஜாதகத்தைப் பொருட்படுத்தி விவாதித்ததில்லை. அப்படியொரு ராசி அவருக்கு.

எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் அதிகாரத்திற்கு வருவதை விடப் பெற்றுக் கொண்ட பதவியைத் தக்கவைத்துக் கொள்வதே சவாலான காரியம். அதுவும் பெட்ரோல் ஊற்றாமலேயே பற்றிக் கொள்ளும் இனவாதம் நீக்கமற நிறைந்திருக்கும் நாட்டில் அரசியல் செய்ய பல நூதன குட்டிக்கரணங்கள் போடவேண்டியிருக்கும். ரனிலுக்கு அது கைவரவில்லை. 1994ம் ஆண்டு ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான நாள் முதல் தேர்தலில் வென்று ஜனாதிபதி பதவியை அடைவது என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. பிரதமராய் அவர் சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்ட அரசுகளின் ஆயுள்களும் அவருக்கு மேல் இருந்த ஜனாதிபதிகளின் அதிகாரங்களால் பெரும் சேதாரத்திற்குள்ளாகின.

போதாக்குறைக்கு ரணிலும் கட்சி சீரமைப்புக்களில் ஆர்வமற்றிருந்தார். இருக்கும்வரை தலைவராக இருந்துவிட்டுப் போய்விட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. இதனால் கட்சிக்குள் பூசல்களும் பிளவுகளும் தோன்றின. புலிகளால் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் கொல்லப்பட்டிருந்த நிலையில் கட்சியில் இருந்த ஒரே ஒரு சீனியர் சிட்டிஸன் ரணில் ஆதலால் கட்சியை மரணக் கிணற்றில் தள்ளாமல் இருக்க வேறு வழி இன்றி ரணிலே தலைமைப் பீடத்தில் இருக்கட்டும் என்று அவரது கட்சியின் செயற்குழு ஒவ்வொரு ஆண்டும் முடிவு செய்து கொண்டிருந்தது. இப்படியே தொடர்ந்த ரணிலின் பயணம் 2020ம் ஆண்டு மிகவும் தீர்க்கமான கட்டத்திற்கு வந்தது.

பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சிதறிப் போனது. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், தலைவர் ரணிலுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த ஒரு தசாப்தகாலத்திற்கும் மேற்பட்ட பனிப்போர் ஒரு முடிவுரையைக் கண்டது. சஜித் பிரேமதாஸ தனிக்கட்சி அமைத்துக் கொண்டு செல்ல பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெறும் ஒரே ஒரு ஆசனம் கிடைத்தது. ஒருவருடத்திற்கும் மேலாக நெட்பிளிக்ஸ் பார்த்துக் கொண்டு இருந்த ரணில், தீர்மானமான ஒரு கட்டத்தில் நாடு அல்லாடிக் கொண்டு இருந்த போது கோட் சூட் மாற்றிக் கொண்டு வந்து பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந்நிலையில் கோல் ஃபேஸ் போராட்டம் உச்சம் பெற்று நெருக்கடிக்கு மேல் நெருக்கடி வந்து ஜனாதிபதி கோட்டாபயவின் கழுத்தைப் பற்றிப் பிடித்து இருந்தது.ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக எதிர்ப்பலைகள் எங்கும் வியாபித்தன.பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!