பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றே பஹல்காம் படுகொலை குறித்துக் கவலை தெரிவித்தது. கண்டனம் தெரிவித்தது. எனினும் தன் அறிக்கையில், பஹல்காமை சட்டவிரோத ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பகுதியாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்தியாவின் நடவடிக்கைகளுக்கான பதில் அறிவிப்புகளை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தாகும் அறிவிப்பைக் கடுமையாக நிராகரிக்கிறோம் என்றது பாகிஸ்தான். ஆதாரமின்றித் தங்கள் மீது குற்றஞ்சாட்டக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம் என்றது.
சிந்து நதி நீரைத் தடுக்கும் நடவடிக்கைகளை போர் என்றே கருத வேண்டி வரும் என எச்சரித்தனர். இந்திய விமானங்களுக்குத் தனது வான்வழியை மூடினார்கள். இதனால் அந்நாட்டுக்கு ஏற்படவிருக்கும் பெரிய அளவிலான அந்நியச் செலாவணி இழப்பைக்கூடப் பொருட்படுத்தவில்லை. இந்தியாவைப் போலவே விசா ரத்து, அதிகாரிகள் திரும்ப அழைத்தல் அறிவிப்பு எல்லாம் இருந்தது. கூடவே, 1972ஆம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான். 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போருக்குப் பின்னர் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை இது. பங்களாதேஷ் உருவாகக் காரணமான இப்போரில் இந்தியா 13000 கிலோமீட்டருக்கு மேல் முன்னேறித் தன் பிடிக்குள் வைத்திருந்த பாகிஸ்தான் நிலத்தை நல்லெண்ண அடிப்படையில் திரும்பக் கொடுத்தது. காஷ்மீர் சிக்கலை மூன்றாவது நபர் தலையீடு இல்லாமல் நாமே பேசித் தீர்க்கலாம் என்கிறது ஒப்பந்தம். குறிப்பாக லைன் ஆஃப் கன்ட்ரோல் உறுதி செய்யப்பட்டு வன்முறையால் இதை மீற வேண்டாமென ஒப்புக்கொண்டோம். இதைத்தான் ரத்து செய்துள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் 25ஆம் தேதி கூடியபோது இந்தியாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அரசியல் ஆதாயங்களுக்காகத் தீவிரவாதத்தை இந்தியா பயன்படுத்துகிறது என்றனர்.
Add Comment