பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டன. அனைத்து மாநில அரசுகளும் தங்கள் அதிகார வரம்பில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களைக் கண்டறிந்து நாடு கடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு, நீண்ட கால விசாக்கள் (Long Term Visa) உட்படப் பல்வேறு விசா வகைகளில் உள்ள நபர்களை உள்ளடக்கியது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அட்டாரி-வாகா எல்லை பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு ஏப்ரல் 27 ஆம் தேதி மூடப்பட்டது. மே 1, 2025க்கு முன்னர் பாகிஸ்தானியர்கள் வாகா எல்லை வழியாகத் திரும்பி வர அறிவுறுத்தப்பட்டனர். இதுவரை, பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருக்கும் 780 பேர், வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் திரும்பிச் சென்றுள்ளனர். சுமார் ஆயிரம் இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்துள்ளனர்.
பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நீண்ட கால விசாக்களில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு, இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்புகள் வழங்கப்பட்டன. இந்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2015 மற்றும் 2019க்கு இடையில், மொத்தம் 2,668 பாகிஸ்தானியர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் மட்டும், 809 பாகிஸ்தானியக் குடியேறிகள் இந்தியக் குடியுரிமையைப் பெற்றனர். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியக் குடியுரிமை பெற்ற 5,220 வெளிநாட்டினரில் 87% பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் , பாகிஸ்தானின் இந்துக்களும் சீக்கியர்களும் பெரும்பான்மையாக இருந்தனர். அவர்களில் சிலர் நீண்ட கால விசாக்களில் இந்தியாவில் வசித்து வருகின்றனர். 2022 ஆம் ஆண்டில், 308 பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா நீண்டகால விசாக்களை அங்கீகரித்தது.
Add Comment