Home » ஒரு  குடும்பக்  கதை – 61
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 61

61. ஒரு சிறையில் இரு பறவை
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் காந்திஜியின் யாத்திரை தண்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில்,  ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அறிக்கைகள் வாயிலாகவும், கட்சி அமைப்பின் பல்வேறு மட்டங்களிலும் இருப்பவர்களுக்குச் சுற்றறிக்கைகள் வாயிலாகவும்  தேசப் பணியில் மக்களை ஈடுபடுத்தப் பம்பரமாகச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.
1930 ஏப்ரல் 14. மத்திய மாகாணத்தில் இருந்த ராய்ப்பூரில்  ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தார்  மோதிலால் நேரு.  வழியில் அவர் கைது செய்யப்பட்டார்.
அன்றைய தினமே இரண்டே இரண்டு மணி நேரத்தில்  அவசரம் அவசரமாக வழக்கு விசாரணை நடந்து முடிந்தது. மாஜிஸ்டிரேட் ஜே.எஸ்.கிரோஸ்  நேருவுக்கு ஆறுமாத சிறை தண்டனை வழங்கினார். அலகாபாத் அருகில் இருந்த நைனி மத்திய ஜெயிலில் நேருவின் நான்காவது சிறைவாசம் துவங்கியது.
சிறை புகுவதற்கு முன்பாக, “எனது அன்பான அலகாபாத் சகோதர, சகோதரிகளுக்கு நான் என்ன சொல்ல?  உங்கள் அன்புக்கும், பாசத்துக்கும், கருணைக்கும் நெஞ்சம் நெகிழ நான் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! நம் நாட்டின் சுதந்திரத்துக்கான இந்தப் போராட்டத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம்.  அலகாபாத்தின் பெருமையைப் பறைசாற்றுங்கள்!” என்று மக்கள் மத்தியில் கூறினார்.
நைனி மத்திய சிறைச்சாலையில் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் இருந்த சிறு கொட்டடியில் நான்கு அறைகள் இருந்தன. அவற்றில் நேருவுக்காக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டன. காவலாளி, துப்புரவுப் பணியாளர், சமையல்காரர் என மூன்று பேரைத் தவிர பேச்சுத் துணைக்குக் கூட  வேறு ஆள் கிடையாது.

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!