ஆங்கில மேடத்தின் ஆல் தி பெஸ்ட், பத்து பைசாவுக்குப் பெறுமானமின்றிப் போனது. ஆனால், அப்பாவின் ரூபத்தில் அது பலித்தது. வயிற்றுப் புற்று நோயில் அவர் மண்டையைப் போட்டது அவனுக்கு ஆல் தி பெஸ்ட்டாக ஆகிற்று…
2 ஆரம்பம்
அப்பா தவறிப் போனதால் தற்செயலாகக் கிடைத்த வேலையில் – வேலை கிடைக்கிறது என்பதற்காக இந்த வேலையில் அவசரப்பட்டு சேர்ந்துவிடாதே என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் எஸ்விஆர்தான்.
அவன் வாழ்வில் எல்லாமே தற்செயல்தான். எதுவுமே திட்டமிட்டு நடந்ததில்லை. எஸ்விஆரை சந்தித்ததே தற்செயலாக நடந்ததுதான்.
பட்டப் படிப்பிற்காகத்தான் மெட்ராஸுக்கு வந்தான் என்றாலும் அப்பாவுக்குப் பதவி உயர்வு காரணமாக வரவிருந்த மாற்றல், மெட்ராஸாக இல்லாது வேறு ஊராக இருந்திருந்தால் அவன் மெட்ராஸுக்கே வந்திருக்க வாய்ப்பில்லை. மெட்ராஸுக்கு வராமல் போயிருந்தால், பரீக்ஷா என்கிற நவீன நாடகக் குழுவில் இணைந்திருக்கவோ, நவீன இலக்கியம் என்று ஒன்று இருக்கிறது என்பது கூடத் தெரிந்திருக்கவோ வாய்ப்பில்லாது போயிருக்கக் கூடும்.
பச்சையப்பன் கல்லூரியின் முதலாண்டு மாணவனாகக் கவிதைப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டிருக்கையில் எப்படி எழுதிப் படித்தாலும் பரிசு கிடைக்காமலே போய்க்கொண்டு இருந்தது. ரொம்பப் பிஞ்சாக, ஸ்கூல் பையன் போலப் பால் வடியும் முகத்துடன், தான் இருப்பதால்தான், ஒருவேளை யாரோ எழுதிக் கொடுத்துப் படிப்பதாக நடுவர்களுக்குத் தோன்றுகிறதோ; அதனால்தான் பரிசு கிடைப்பதில்லையோ என்று குறுக்கேத்தமாகத் தோன்றிய எண்ணம், மவுண்ட் ரோடு காதி வஸ்திராலயத்தில் கொண்டுபோய் நிறுத்தி, தொளதொளவென்றிருந்த நீண்ட முரட்டு குர்த்தாவை வாங்கிப் போட்டுக்கொள்ள வைத்தது.
அது ஒன்றும் அவனுக்குப் புதிதில்லை. பாண்டிச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் படிக்கிற பெண்கள், கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி அவனை பாலகனாக நடத்தி அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்களே என்கிற கடுப்பில் பெரியவனாகத் தெரியவேண்டும் என்பதற்காக, பி.யூ.சி படிக்கும்போதே, வெறும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு திரிந்தவன்தான் அவன்.
அப்படி அந்த குர்த்தாவுடன் போக, மத்திய நூலகக் கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில் அவனைப் பார்த்த, நந்தனம் கலைக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த அக்கினிபுத்திரன், நவீன நாடகத்தை நடத்துகிற ‘நாநி’ சங்கரன் என்கிற தம் நண்பரும் இப்படித்தான் ஜிப்பா அணிவார் என்று கூறி பரீக்ஷா கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்…
அருமை – தொடருங்கள்