மசாலா சேர்த்து அடுக்கி வைத்த கோழித் துண்டங்கள் மீது அனல் பட்டு வெந்த பகுதியை மட்டும் நீண்ட கத்தி கொண்டு வெட்டித்தள்ளுவார்கள். கீழே தட்டில் அவை விழுந்ததும் கொஞ்சம் முட்டைக்கோஸ் சேர்த்துத் தாராளமாகச் சில கரண்டிகள் மயோனைஸ் சேர்த்துக் கலக்குவார்கள். அதை ரொட்டியில் மடித்துக் கொடுப்பதுதான் சவர்மா. ஃபுட் ஸ்ட்ரீட் எனப்படும் மாநகர உணவுக் கடைத் தெருக்களில் இக்காட்சி சாதாரணம். மத்திய கிழக்கு உணவான சவர்மா கடையைத் தாண்டி அப்படியே பக்கத்தில் இருக்கும் மேற்கத்திய உணவுகள் விற்கும் சாண்ட்விச் கடையை எட்டிப் பார்த்தால் ரொட்டிக்கு நடுவில் மயோனைஸ் தடவித்தான் சுட்டுத் தருவார். வடஇந்திய சிக்கன் டிக்காவுக்குப் பக்கத்திலும் மயோனைஸ் இருக்கும். அப்படிப்பட்ட மயோனைஸ் தடைசெய்யப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் எட்டாம் தேதியிலிருந்து அடுத்த ஓராண்டுக்குத் தமிழ் நாட்டில், முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு தரப்படுத்துதல் ஆணையம் சார்பில் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்கள். மயோனைஸின் தயாரிப்பு, விநியோகம், இருப்பு வைப்பது என அனைத்துமே உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், கேட்டரிங் நிறுவனங்கள், எங்குமே இதன் பயன்பாடு இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Add Comment