கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சம்பன். மிகவும் குறும்புத்தனமானவன். தந்தையைப் போலத்தானே பிள்ளையும் இருப்பான். ஊரில் அனைவரும் இந்தக்குழந்தையைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த கிருஷ்ணர் தன் பிள்ளையையே கடும் கோபத்தில் சபித்துவிட்டார். மீள முடியாத குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்ட சம்பன் செய்வதறியாது விமோசனம் தேடி அலைந்தான். ஒரு ரிஷியால் அவனுக்கு ஓர் அறிவுரை கிடைத்தது. சூரியனை நோக்கித் தவம் இருப்பது. இந்த நோய்க்கான மருந்தும் சாபத்திற்கான விமோசனமும் உனக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகள். தனது உடல்நிலை மோசமாவதையும் பொருட்படுத்தாமல் கடும் தவம் இருந்தான். தவத்தை மெச்சிய சூரிய பகவான் அவன் முன் காட்சியளித்தார். அவனுக்கு வரமாக நல்ல ஆரோக்கியத்தையும் கொடுத்துச் சென்றார். மீளா நோயிலிருந்து தன்னை மீட்டெடுத்த சூரியனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான் சம்பன். அவன் யோசனையில் உருவானதுதான் கோனார்க் கோயில். இது இந்தக்கோயில் வரலாறு குறித்துச் சொல்லப்படும் ஒரு கதை.
தனது தாயின் கடைசி ஆசையாகச் சூரியனுக்கு ஒரு கோயில் கட்ட முடிவு செய்தான் நரசிம்ம தேவன் என்ற மன்னன். பூரியில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்திற்கு இணையான கட்டடக் கலைநயத்துடன் இருக்க வேண்டும் என முடிவு செய்தான். உலகம் உள்ளவரை அந்தக் கோயில், அதன் புகழ் பேசப்பட வேண்டும் என்று விரும்பினான். அதற்கான வரைபடம் ஒன்றை உருவாக்கினான். பீஸு மஹாராணா என்ற கட்டடம் கட்டும் விற்பன்னரை பணிக்கு அமர்த்தினான். அவரும் ஆயிரத்து இருநூறு தொழிலாளிகளும் தங்கள் சொந்த ஊரை விட்டு இங்கு இடம் பெயர்ந்தார்கள். பன்னிரண்டு ஆண்டுகள். அந்தக்கோயிலின் கட்டுமானத்திற்குத் தேவையான பாறைகளைக் கடல் கடந்து கொண்டு வந்தார்கள். மகாராஜாவின் கனவுக் கோயிலான இதை ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்குச் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது. எல்லாம் முடிந்தது. கோயில் கோபுரத்தின் மேல் கலசம் வைக்கும் அமைப்பு மட்டும் யாருக்கும் பிடிபடவில்லை.
Add Comment