பதினேழு வயது காஷ்மீரி சிறுமியான மும்தாஸாவின் கால் முறிந்திருந்தது. எனினும் சுற்றுலா வந்திருந்த பத்து வயதுச் சிறுவனைக் காப்பாற்ற, அவனை முதுகில் சுமந்து கொண்டு தன்னுடைய மண் குடிசையை நோக்கி ஓடினார். பஹல்காம், பைசரன் மைதானத்தில் இருந்து அவர்கள் வீடு ஒரு கிலோமீட்டர் தூரம்தான். அன்று வழக்கம்போலச் சுற்றுலாப் பயணிகளுடன் வழிகாட்டியாக மைதானத்துக்குச் சென்றிருந்தார். ஏப்ரல் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் மூன்று மணியளவில், மேகி செய்து சாப்பிட்டுவிட்டு இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தனர். வெடிச்சத்தம் கேட்டதும் ஏதோ பட்டாசுச் சத்தம் என்றே அனைவரும் நினைத்துள்ளனர். துப்பாக்கிச் சத்தம் என்றறிந்ததும் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் சண்டை என்றெண்ணி, கீழே படுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர் சுற்றுலா வழிகாட்டிகள். பலர் மூலைக்கொன்றாக ஓடினர். சிலர் தரையோடு தரையாகப் படுத்தனர்.
பயங்கரவாதிகள் சுட்டுக்கொண்டே நெருங்குவதை உணர்ந்து அங்கிருந்து பயணிகள் வெளியேற உதவத் தொடங்கினர் வழிகாட்டிகள். உடைந்த காலுடன் மும்தாஸா சிறுவனைத் தூக்கிக் கொண்டு தன்னுடன் பலரை அழைத்துக்கொண்டு தன் வீட்டை அடைந்தார்.
படிக்க ஆசையிருந்தாலும் வறுமையின் காரணமாக பள்ளி செல்வதை நிறுத்தியவர் மும்தாஸா. அவர்கள் வீட்டைக் கடந்து மேலேறும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தான் வளர்க்கும் முயல் குட்டியை வாடகைக்கு கொடுத்துப் படம் எடுத்துக்கொள்ள பத்து ரூபாய் வசூலிப்பார். கோவிட் நேரத்தில் இந்த வருமானம்தான் கைகொடுத்தது. ரேபிட் கேர்ள் எனப் பிரபலமானவர். டூரிஸ்ட் வழிகாட்டியாகத் தன் கடமை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே என நினைத்தவர் இருள் சூழும் நிலையில் மீண்டும் மலையேறிச் சென்று மேலும் சிலருக்கு உதவினார்.
Add Comment