இந்திய மக்கட்தொகையில் நூறு கோடி பேர் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடுபவர்களாக இருக்கின்றனர். பதின்மூன்று சதவீத மக்களே அடிப்படைத் தேவைகளைத் தவிர்த்துப் பிற விருப்பப்பொருள்களை வாங்கும் சக்தியுடன் உள்ளனர். முப்பது கோடிப் பேர் இந்த வரிசையில் சேர்வதற்கு வாய்ப்புள்ளவர்களாக உள்ளனர். இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வு அஞ்சத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ப்ளூமி வென்ச்சர்ஸ் எனப்படும் துணிகர மூலதன நிறுவனத்தின் அறிக்கை இது.
இந்தியப் பொருளாதாரம் என்பது சந்தைப் பொருளாதாரமாகவே இருந்துவந்துள்ளது. சுமார் நூற்று நாற்பத்து மூன்று கோடி மக்களின்மீது கட்டமைக்கப்பட்டப் பொருளாதாரமாக அது நம்பப்பட்டுவந்தது. அதில், நுகரும் வகுப்பினரும் விழையும் வகுப்பினரும் முறையே பதின்மூன்று கோடியும் முப்பது கோடியும் உள்ளனர் என்கிறது இவ்வறிக்கை. அதாவது, உண்மையில் இந்தியச்சந்தை என்பது இந்த நாற்பத்து சொச்சம் கோடி மக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தியச்சந்தை மிகப்பெரியது என்ற பிம்பத்தை உடைக்கிறது இவ்வறிக்கை.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் என்றழைக்கப்படும் துளிர் நிறுவனங்கள் இந்த நுகரும் வகுப்பினரையே நம்பியுள்ளன. விழையும் வகுப்பினர் அவ்வளவு எளிதில் தங்களது பணப்பையைத் திறப்பதில்லை. கூகுள்பே, ஃபோன்பே போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதிகள் இவ்வகுப்பினரைச் செலவாளிகளாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனாலும், அவர்கள் பகட்டான பொருள்களை வாங்குவதில்லை. ஓடிடி தளங்களுக்கான சந்தா, கல்விசார் முதலீடுகள் போன்றவை அவர்களது தேர்வுகளாக உள்ளன.
Add Comment