காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புக் கேபினட் கமிட்டி (Cabinet Committee on Security – CCS) விரைவாக முடிவுகளை எடுத்து அறிவித்தது.
வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு, பாகிஸ்தான் தன்னுடைய உதவிகளை நிறுத்தும் வரைக்கும் இது நிறுத்திவைக்கப்படும் என்றார். மேலும் சிலவற்றையும் அறிவித்தார்.
அட்டாரி எல்லை மூடப்படும். அவ்வழியாக இந்தியா உள்ளே வந்துள்ள பாகிஸ்தானிகள் வெளியேற மே 1ஆம் தேதி வரை அவகாசம்.
சார்க் விசா நீட்டிப்பு மூலம் பாகிஸ்தானிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு விசா உடனே நிறுத்தப்படும். வழங்கப்பட்டுள்ள விசா அனுமதி அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படும். இந்த விசா மூலம் ஏற்கெனவே இந்தியா உள்ளே இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணிநேரம் அவகாசம். ( SVEC – SAARC Visa Exemption Scheme – என்பது 1988ல் இஸ்லாமாபாத்தில் நடந்த சார்க் மாநாட்டுக்குப் பிறகு 1992ல் அறிமுகமானது. பாகிஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 24 வகையினர் சிறப்பு விசா அந்தஸ்துடன் தடையின்றி இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுவர்.)
Add Comment