பத்வா தோலி என்ற சிறிய கிராமத்தை இந்திய வரைபடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் ஐஐடி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நிரம்பிய பீகார் கிராமம் என்று தேடினால் கிடைத்துவிடும்.
மாநிலத் தலைநகரான பாட்னாவிலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில், கயா மாவட்டத்தின் ஃபல்கு நதிக் கரையோரம் அமைந்துள்ள பத்வா தோலி, ஒரு காலத்தில் பருத்தி நெசவு நேர்த்திக்காக ‘பீகாரின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்பட்டது. இப்போதும் இங்கு விசைத்தறித் தொழிலே பிரதானமாக உள்ளது. இந்தச் சிற்றூரில் இருந்து இந்த ஆண்டு மட்டும் 40 மாணவர்கள் ஐஐடி-ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி அடைந்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
1996 முதல் தொடர்ந்து மாணவர்கள் ஐஐடி பட்டதாரிகள் ஆகி வரும் இந்தக் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு பொறியாளர் இருக்கிறார். இதற்கெல்லாம் விதை போட்டவர் ஜீதேந்திர பிரசாத். 1991ஆம் ஆண்டு இவ்வூரில் இருந்து முதன்முதலாக ஐஐடி-ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று, உத்தரப்பிரதேசத்தின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஹெச்யூ) உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் படித்தார். இப்போது அமெரிக்காவில் பணிபுரியும் அவர்தான் “விருக்ஷ், வி தி சேஞ்ச்” என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி இந்த ஊர் மாணவர்களின் ஐஐடி கனவுகளுக்கு வழி காட்டினார்.
Add Comment