ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை.
ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன் தலைவராக இரண்டாம் முறையாக 2015ஆம் ஆண்டு வந்தார். அப்போதே அவர் ட்விட்டர் வடிவமைப்பில் இருந்த முக்கியமான பிரச்சனையாகச் சொன்னது, அதன் மையப்படுத்தப்பட்ட வழங்ககங்களைத்தான் (கணினி சர்வர்கள்). ட்விட்டரின் எல்லாச் செயல்களையும், தரவுகளையும் ஒரே அதிகாரத்தின் கீழே வைத்திருப்பதுதான் அதன் தலையாய பிரச்சனை என்றார் ஜாக்.
அந்தக் காலத்தில் ட்விட்டர் அமெரிக்கச் சமூக முறைகளையும், பொய்ச் செய்திகளையும் பரப்புகிறது எனப் பல நாட்டினரும் குற்றம் சொன்னார்கள். அதோடு நிற்காமல் ஒவ்வொரு நாடும் அவர்களுக்குப் பிடிக்காத கீச்சை (ட்விட்) மறைக்கச் சொன்னார்கள். இப்படி வரும் வேண்டுகோள்களை ஏற்று மறுத்தால் இன்னொரு நாடோ அல்லது இன்னோர் அமைப்போ குற்றம் சொன்னது. ஒரு கட்டத்தில் இந்தத் தணிக்கைகளே ட்விட்டரின் தலைவலியானது. பல நாடுகளின் சட்டத்துறைகளும் நிறுவனத்தை விசாரிக்கத் தொடங்கின. இருந்தும் ட்விட்டரின் பிரபலத்தால் யாராலும் வேறு ஒன்றை நிலைநிறுத்த முடியவில்லை.
Add Comment