பிரபல இந்தி திரைக்கலைஞர் அனன்யா பாண்டே சில மாதங்களுக்கு முன்னர் தனது மன அழுத்தத்தைப் பற்றிப் பேசும் போது “சமூகவலைத்தளங்களில் யாருமே அவர்களது தோல்விகளைப் பகிர்வதில்லை” என்றார். ஒவ்வொரு நாளும் நமது அன்றாட வாழ்க்கையை மிகைப்படுத்தியே நாம் இச்செயலிகளில் பகிர்கிறோம் – அந்தக் கட்டாயத்தினாலேயே மன அழுத்தம் வருகிறது என்பதைக் குறிக்கும்வண்ணம் இதைச் சொன்னார் அனன்யா.
இந்த நவீன உலகில், சமூக வலைத்தளங்களும் வேண்டும், அதில் நிஜமும் வேண்டும் என்றால் அது சாத்தியமா? சாத்தியம் என்று செய்து காட்டியிருக்கிறார்கள் “காதலுக்கான மொழியை” கொண்ட பிரான்ஸ் நாட்டினர் இருவர். பாரிஸ் நகரில் ‘அலெக்சிஸ் பாரியாட்’ (Alexis Barreyat) மற்றும் ‘கெவின் பெரோ’வால் 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட செயலி “பீ-ரியல்” (BeReal). உண்மையாக இரு என்பதைக் குறிக்கும் பெயர் இது. “பீ-ரியல்” செயலியின் நோக்கமே உங்களது அன்றாட வாழ்வின் ஒரு யதார்த்தமான தருணத்தைப் படமாக உங்களுக்கு விருப்பமானவர்களோடு பகிர்வது மட்டுமே.
இதற்கு முன்னர் அலெக்சிஸ் பாரியாட், கோ-பிரோ (GoPro) காமிரா நிறுவனத்தின் ஜெர்மன் கிளையில் வேலை செய்தார். உலகத்தின் பல பகுதிகளில் நடக்கும் வித்தியாசமான நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் படம் எடுப்பதைத் தயாரித்தார். வழக்கில் இருந்த சமூக செயலிகள் பயனர்களை அடிமையாக மாற்றிவிடுவதைப் பார்த்த அலெக்சிஸ் தனது கல்லூரி நண்பரான கெவினுடன் சேர்ந்து உருவாக்கியது “பீ-ரியல்”.
Add Comment