ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் பணி மாறுதலுக்கும் தேசிய அளவில் அறியப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சிப் பணியில் ஐம்பத்து ஏழு முறைப் பணி இடமாற்றம் செய்யப்பட்டவர். கடந்த மாதம் ஓய்வு பெற்றார். தோராயமாக ஏழு மாதங்களுக்கு ஒரு பணியிட மாறுதல் பெற்றிருக்கிறார். தன்னுடைய பணிக் காலத்தில் ஐம்பத்து ஏழு பதவிகள் வகித்துள்ளார். பணியில் சேர்ந்த முதல் ஐந்தாண்டுகளில் ஏழு முறை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்.
2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மட்டும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா முதல்வராகப் பதவி வகித்த ஹரியானா அரசு இருபத்து ஏழு முறை அசோக் கெம்காவைப் பணியிட மாறுதல் செய்துள்ளது. அடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆட்சி மாறினாலும் நடைமுறை மாறவில்லை. ஹரியானா மாநில அடுத்த முதல்வர் மனோகர் லால் கட்டரும் அசோக் கெம்காவைப் பணியிட மாறுதல் செய்து அலைக்கழித்தார்.
ஆவணக் காப்பகம், தொல்லியல் துறை, பதிப்புத் துறை என உப்புச்சப்பில்லாத குறைந்த நிலைத் துறைகளிலேயே உயர்பதவிகளில் பெரும்பாலும் பணியாற்றியிருக்கிறார். ராபர்ட் வத்ரா தொடர்புடைய ஸ்கைலைட் ஹாஸ்ப்பிடாலிட்டி நிறுவனம் டிஎல்எஃப் யூனிவர்சலுக்கு விற்பனை செய்த 3.5 ஏக்கர் நில வழக்கு அசோக் கெம்காவைப் பரவலாக அறியச் செய்தது.
Add Comment