வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான சாய்கான் நகருக்குள் நுழைந்து இருபது வருடப் போரை முடிவுக்கு கொண்டுவந்தனர். அந்நிகழ்வு சாய்கானின் வீழ்ச்சி (Fall of Saigon) என்று வரலாற்றில் குறிக்கப்பட்டது. சாய்கானின் வீழ்ச்சி, அமெரிக்கப் படையினர் தோல்வியுற்று தென் வியட்நாமை விட்டு வெளியேற வேண்டிய கட்டயாத்தில் தள்ளியது. அதன் மூலம் அமெரிக்கா கட்டவிழ்த்த மிகக் கொடூரமான ஒரு போர் முடிவுக்கு வந்தது.
வியட்நாம் 1858ஆம் ஆண்டிலிருந்து பிரஞ்சு காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945ஆம் ஆண்டு, செப்டெம்பர் 2ஆம் தேதி வியட்நாம் விடுதலை அடைந்துவிட்டதாகத் தலைவர் ஹோ சி மின் சுயப்பிரகடனம் செய்தார். அதில் பிரஞ்சு நாட்டுக்கு ஒப்புதல் இல்லை. வியட்நாமில் தன்னுடைய செல்வாக்கை இழக்க விருப்பமில்லாமல் தன் ஆட்சி அதிகாரத்தை முடிந்த அளவு தக்கவைக்கப் பார்த்தது. கடைசியில் 1954ஆம் ஆண்டு வியட்நாம் ரஷ்யா மற்றும் சீனா உதவியுடன் உண்மையான விடுதலை அடைந்தது. ஆனால் பிரஞ்சு காலனியாதிக்கவாதிகள் வியட்நாமை வட மற்றும் தென் பகுதியென இரண்டு துண்டமாக்கிவிட்டுத்தான் வெளியேறினர்.
வட வியட்நாம் ஹோ சி மின்னின் கம்யூனிச ஆட்சியின் கீழும், தென் வியட்நாம் கம்யூனிச எதிர்ப்பு ஆட்சியின் கீழும் வந்தது. ஆனாலும் வட வியட்நாம் ஆட்சியாளர்கள் என்றும் ஒன்றிணைந்த வியட்நாம் என்ற கனவை விட்டுவிடவில்லை. தென் வியட்நாமில் கம்யூனிச ஆதரவு வியட்காங் கிளர்ச்சியாளர்களை ஊக்குவித்துக் கொண்டே இருந்தது ரஷ்ய-சீன ஆதரவு வட வியட்நாம். 1954ஆம் ஆண்டு முதலே வியட்காங்கின் சிறு அளவிலான கெரில்லா முறை தாக்குதல் தென் வியட்நாமில் தொடங்கிவிட்டது. அதுதான் வியட்நாம் போரின் தொடக்கம்.
Add Comment