Home » Home 25-12-2023

வணக்கம்

ஒரு வருடம் நிறைவடைந்து இன்னொரு வருடம் பிறக்கும்போது நிறைய எதிர்பார்க்கிறோம். திட்டமிடுகிறோம். குழந்தைகள் தமது பிறந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருந்து கொண்டாடிக் களிப்பது போலப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடிக் கடக்கிறோம். ஆனால் மறுநாள் முதல் முந்தைய ஆண்டின் இறுதி தின நிலவரத்தைத்தான் திரும்பவும் ஒரு போர்வையாக எடுத்துப் போர்த்திக்கொண்டு பிழைப்பைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எதுவும் மாறுவதில்லை. அற்புதங்கள் மறைபொருள்களாகவே தொடர்ந்து நீடிக்கின்றன.

இது மிகையல்ல. இந்த இதழில் இடம்பெற்றுள்ள பத்மா அர்விந்தின் முடியாத யுத்தம் (உக்ரைன் போரினைப் பற்றியது), ரும்மானின் தப்பிச் செல்லும் தலைமுறை (இலங்கையின் இளைய தலைமுறை கொத்துக் கொத்தாக வேறு தேசங்களுக்கு இடம் பெயர்வது தொடர்பானது), நஸீமா எழுதியிருக்கும் குரங்கு கையில் ஏகே 47 (பாலஸ்தீனியர்களின் பிரச்னை சார்ந்தது), ஸஃபார் அஹ்மதின் ட்யூனிசியா: மீண்டும் கொதிநிலை (துனிசிய அரசியல் குழப்பம்) என எந்தக் கட்டுரையை வாசித்தாலும் நீங்கள் இதனை உணரலாம். நாம் பிரச்னைகளுடன் வாழப் பழக வேண்டிய தலைமுறை. இதில் உலகப் பிரச்னை, உள்ளூர்ப் பிரச்னை என்ற பாகுபாடே இல்லை. எங்கும் தமிழர்கள் இருப்பதால் எல்லா மண்ணின் சிக்கல்களும் ஏதோ ஒரு வகையில் நம்மைத் தொடாதிருப்பதில்லை.

சென்னை புத்தகக் காட்சி - சர்வதேசப் புத்தகக் காட்சி இரண்டும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றன. பபாசி நடத்தும் சென்னை புத்தகக் காட்சியில் எப்போதும் இருக்கும் இடர்பாடுகள் இம்முறையும் இருந்தன என்பதைத் தவிர புதிய பிரச்னைகள் ஏதுமில்லை. ஆனால் புத்தகக் காட்சிக்கு வந்த ஒவ்வொருவருக்கும் ஓர் ஆதங்கம் இருந்தது. அதே வளாகத்தில்தான் தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்திய சர்வதேசப் புத்தகக் காட்சியும் நடைபெற்றது. அதன் தரமும் உயரிய நோக்கமும் சரியான விளைவுகளும் பபாசியைச் சிறிதளவாவது சிந்திக்க வைக்காதா என்பதே அது. பணத்துக்கோ ஆள் பலத்துக்கோ சற்றும் குறைவற்ற அமைப்பு அது. இருந்தாலும் விடாப்பிடியாக ஒரு மொண்ணைத்தனத்தைத் தனது பிரத்தியேக அடையாளமாக வைத்திருக்கிறது. பொறுத்துத் தான் தீர வேண்டும். இந்த இதழில் புத்தகக் காட்சியில் கவனம் ஈர்த்த சில விஷயங்களைக் குறித்துச் சில பதிப்பாளர்களும் படைப்பாளிகளும் வாசகர்களும் பேசியிருக்கிறார்கள் (நினைவில் வாழும் திருவிழா).

இந்த இதழில் இன்னும் இரண்டு திருவிழாக்களைக் குறித்தும் கட்டுரைகள் உள்ளன. மதுரை தெப்பத் திருவிழா நடக்கவிருக்கிறது. பாபுராஜ் அது குறித்து எழுதியிருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தொகுதி மக்களின் மனநிலை குறித்து பிரபு பாலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

முறையான முதலீட்டுத் திட்டம் குறித்த சிவசங்கரியின் கட்டுரை, நர்மியின் பயணக் கட்டுரை, ஐபோனில் இருந்து ஆண்டிராய்டுக்கு மாற நினைப்பவர்களுக்குப் பேருதவி புரியும் விதமாக வெங்கடரங்கன் எழுதியிருக்கும் நுட்பக் கட்டுரை என்று இந்த இதழ் வழக்கத்தினும் சிறிது கனமானதே.

அனைத்துக்கும் சிகரம், ஆர். சிவகுமார் மொழிபெயர்ப்பில் ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸாவின் சிறுகதை ‘நதியின் மூன்றாவது கரை’. கதையைப் படித்துவிட்டு விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்கும் புனைவு என்னும் புதிர் கட்டுரையை நிதானமாகப் படியுங்கள். ஓர் இலக்கியப் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்று அது அணு அணுவாகச் சொல்லித்தரும்.

மேலும் சிறப்பான படைப்புகளுடன் மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களைச் சந்தாதாரர் ஆக்குங்கள். ஏனெனில், இது உங்கள் பத்திரிகை.

  • ஊருலகம்

    இந்தியா

    ஒரு நாடு, ஒரு வானம்

    நாளொன்றுக்கு ஆயிரத்து இருநூறு சொச்சம் விமானங்கள் விண்ணில் ஏறும் / தரை இறங்கும். கொஞ்சம் மெனக்கெட்டுக் கணக்கு பார்த்தால், நிமிடத்திற்கு ஒரு விமானம்...

    உலகம்

    ஓயா ஊழலும் தீராத நல்லுறவும்

    அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம்...

    உலகம்

    அமெரிக்க மாணவர் போராட்டம்: அது வேறு, இது வேறு!

    திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி கிளைவ்ஸ் விடுதியில் மாணவர்கள் தடியடி பட்டதை தமிழ்நாட்டில் யாரும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். 25 வருடங்கள் முன்...

    சுவை புதிது

    நம் குரல்

    இதுவும் இயற்கைப் பேரிடர்தான்!

    இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...

    தமிழ்நாடு

    அகதி முகாமிலிருந்து ஒரு ஓட்டு!

    “அகதி முகாம்களில் சுமூகமான சூழல் நிலவினாலும் இதுவொரு திறந்தவெளிச் சிறை போலத்தான் எங்கள் மனதில் தோன்றும். இப்படியில்லாமல் சுதந்திரமாக வெளியில்...

    சுற்றுலா

    நல்லிணக்கக் குப்பைகள்

    மிக உயரமான ஒரு மலையைச் சுற்றிச் சாதாரணமாக எவ்வளவு குப்பை சேரும்? இலங்கையின் மத்தியில் அமைந்திருக்கிறது ‘சிவனொளிபாத மலை’. அதன் அடிவாரத்திலும்...

    சுற்றுலா

    போரா குஹாலு: பள்ளத்தாக்கில் ஒரு புராதன உலகம்

    அரக்குப் பள்ளத்தாக்கு. தமிழ் நாட்டிற்கு ஏற்காடு, ஏலகிரி போல, விசாகப்பட்டினத்துக்கு அருகில் இருக்கும் குட்டி மலைப்பகுதி இது. விசாகப்பட்டினத்திலிருந்து...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 3

    அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 3

    3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 3

    3. சம்பள ஆராய்ச்சி நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை...

    Read More
    உரு தொடரும்

    உரு – 3

    பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 98

    98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு  ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 3

    3. இரு வேறு ஃபாரினர்ஸ் இன்னும் ஓர் இடமாற்றம். வேறொரு கிராமம். மற்றுமொரு பள்ளி. இப்போது நான் வளர்ந்த சிறுவன். நான்காம் வகுப்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். கேளம்பாக்கம் பஞ்சாயத்து ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தத் தொடக்கப்பள்ளிக் கட்டடம் இருக்கும் அதே வளாகத்துக்குள்ளேயே அப்பா மாற்றலாகி வந்திருக்கும்...

    Read More
    error: Content is protected !!