வணக்கம்

இந்த இதழின் சிறப்புப் பகுதிக்கான அறிவிப்பை வெளியிட்டது முதலே, ‘இதில் எழுதவும் அறியவும் என்ன உள்ளது?’ என்று பலர் மின்னஞ்சல் மூலம் கேட்டார்கள். சொகுசு என்பது நபருக்கு நபர் மாறக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சொகுசு விரும்பாத மனிதர் என்று யாரும் இருக்க முடியாது. முற்றும் துறந்த முனிவர்கள்கூட உட்காருவதற்குப் புலித்தோல் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லுவதில்லை.

எவ்வளவோ விஷயங்களுக்கு நாம் ஏங்கியிருப்போம். நாம் ஏங்கியவை வேறொருவருக்கு எளிதாக வாய்த்திருக்கும். அவருக்கு அதன் அருமை தெரியாமலும் இருக்கலாம். வாழ்க்கையின் அலகிலா விளையாட்டுகளுள் ஒன்றல்லவா இது? இந்த இதழில் அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையின் சொகுசு ஏற்பாடுகள் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்கள். கூடவே அமெரிக்க அதிபர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளையும் கவனியுங்கள். கூப்பிட்டுக் கொடுத்தாலும் வேண்டாம் அப்பதவி என்று சொல்லிவிடத் தோன்றும்.

இந்த இதழின் இன்னொரு முக்கியமான கட்டுரை, அரசு வேலையைப் பெறுவது பற்றியது. சொகுசு வரையறை தாண்டி இக்கட்டுரை நமக்குத் தெரியப்படுத்தும் உண்மைகள் பல. அரசுப் பணியின் சௌகரியங்கள் குறித்து நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அவை உண்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றுக்கு அப்பால் அந்தப் பணியைப் பெறுவது தொடங்கி, நீடித்து இருந்து ஓய்வு பெறுவது வரை கடக்க வேண்டிய கண்டங்களை எவ்வளவு பேர் அறிவார்கள்?

எழுத்தாளர்கள், மாணவர்கள், சுற்றுலாவில் சொர்க்கம் தேடுவோர் என்று பல தரப்பினரின் சொகுசு ஆர்வங்கள் குறித்த கட்டுரைகள் இவ்வாரம் உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.

பிரிட்டிஷ் இளவரசர் என்று பன்னெடுங்காலமாக நம் மனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட சார்லஸ் இப்போது மன்னர் சார்லஸ் ஆகியிருக்கிறார். அவரைக் குறித்து ஜெயரூபலிங்கம் எழுதியுள்ள கட்டுரை மிக நீண்டதொரு வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைச் சுருக்கமாகக் காட்சிப்படுத்துகிறது.

உளவாளிகளுள் டபுள் ஏஜெண்டுகளாக இருந்தோர் பலர் உண்டு. ஆனால் ஒரு தேசத்தின் அதிபருடைய மருமகனே வேறொரு தேசத்துக்கு உளவு சொல்லி வந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. அஷ்ரப் மர்வான் என்கிற இஸ்ரேலிய உளவாளியின் கதையைக் கொண்டு நூறு நாவல்கள், ஆயிரம் திரைப்படங்கள் உருவாக்கலாம். திகைப்பூட்டும் தகவல்களைக் கொண்ட ஸஃபார் அஹ்மதின் கட்டுரையை மிகவும் ரசிப்பீர்கள்.

ஒட்டகம் மேய்ப்பவர்களின் வாழ்வைப் படம் பிடிக்கும் நசீமாவின் கட்டுரை, நாம் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகளின் வரலாறைப் பேசும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரை, எந்தத் தொழிலிலும் வெற்றி பெறத் தேவையான மிக முக்கியமான அடிப்படைக் குணம் ஒன்றைத் துலக்கிக் காட்டும் ‘பிரிட்டானியா’ உயரதிகாரி அரசு கேசவன் குறித்து ராஜ்ஶ்ரீ செல்வராஜ் எழுதியுள்ள கட்டுரை, உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் ‘ஒரு நாள்’ என்பது எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை விவரிக்கும் ரங்காவின் கட்டுரை - இவையெல்லாம் இந்த இதழுக்கு அழகு சேர்க்கின்றன.

மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து, சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இது நாம் இணைந்து இழுக்கும் தேர்.

 • சிற்றிதழ்

 • சிறப்புப் பகுதி: சொகுசு

  நம்மைச் சுற்றி

  நாலு விஷயம்

 • அடுத்த இதழ்

 • இதழ் தொகுப்பு

  September 2022
  M T W T F S S
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  2627282930  
 • தொடரும்

  error: Content is protected !!