Home » உயிருக்கு நேர் – 25
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 25

பாரதிதாசன்

25 பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964)

அறிமுகம்

இயற்பெயர் ஒன்று. ஆனால் புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்ற அடைமொழிகள் இவரது கவித்திறத்தால் இவருக்கு வழங்கப்பட்ட புகழ்ப்பெயர்கள். தனது இயற்பெயரையே மறுத்து தனது உளம்போற்று நாயகரின் தொண்டன் என்ற முகமாகத் தனது பெயரை வைத்துக் கொண்டார் இவர். அத்தனை அன்பு அவருக்கு அவரது தலைவராக வரித்துக் கொண்டவர் மேல் இருந்தது. அவ்வாறு வைத்துக் கொண்ட பெயரால் அவரது பெயர் விளங்கும் போதெல்லாம் அவரது தலைவரின் பெயரும் புகழ்ந்து வழங்கியது. சிகரம் போன்ற செம்மாந்த தோற்றம்; முழங்காலைத் தொடும் நீண்ட குப்பாய உடை. எவருக்கும் குனிந்து பழக்கப்படாத தலை; பயிற்சி பெற்ற மல்லனைப் போன்ற உடல்; பணைத் திடம் கொண்ட தோள்கள்; குறிகொண்டு நோக்கும் கூரிய பார்வை கொண்டவர்; பெருத்த மீசை; திருவாரூர்த் தேர் வருவது போன்ற அசைந்து வரும் மென்னடை; அன்போடு அதிரப் பேசும் குரல்; கழுத்தின் இருபுறமும் கூர்முனைகள் தென்படத் தொங்கும் சால்வை என்று தோற்றப்பொலிவில் கம்பீரமானவர் அவர். ஆனால் அவரது தலைவரைப் பற்றிப் பேசத் தொடங்கினாலேயே குழைந்து விடும் மனமும் குரலும் கொண்டவர். அந்தத் தலைவரது பெயர் பாரதியார். தொண்டரது பெயர் பாரதிதாசன். கனகசுப்புரத்தினமாக இருந்த அவர், பாரதி மீது கொண்ட பேரன்பின், பெருமதிப்பின் காரணமாகத் தனது பெயரைப் பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டார். 1963’ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பொள்ளாச்சி நகரில், பெரிய அளவில் பாரதி விழா ஒன்று நடந்தது. கவிஞர் கே.சி.எசு.அருணாசலம், கவிஞர் சிற்பி, எச்.இராமகிருட்டிணன், சிலம்பொலி செல்லப்பன், உருசியத் தமிழ் மாணவி இசபெல்லா என்று பாரதி அன்பர்கள் இணைந்து நடத்திய விழா அது. அதில் பேசிய பேச்சாளர் பாரதியைப் பற்றிக் குறிப்பிடும் போது, பேச்சின் உரிமையில் ‘அவன்’ என்று ஒருமையில் பேசினார். மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதிதாசனுக்கு சுள்’ளென்று சினம் வந்துவிட்டது; பாரதியார் என்று மரியாதையாகக் குறிப்பிடுமாறு மேடையிலேயே சிம்ம கருச்சனை செய்தார் பாரதிதாசன். தனது குருவின் மீது அத்தனை பேரன்பு கொண்டிருந்தார் அவர். எவ்வாறு உ.வே.சா தனது குருநாதரை ‘பிள்ளையவர்கள்’ என்றே குறிப்பிட்டுப் பேசுவாரோ, அதேபோல், பாரதிதாசனும் ‘ஐயரவர்கள்’ என்றே மரியாதை கொண்டு விளித்துப் பேசுவார்.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க்கவிகளில் மாபெரும் கவி பாரதி. அத்தகைய பாரதி காலமான போது, அவரது இறுதி ஊர்வலத்தில் இருபது பேர்கூட வரவில்லை என்ற அவலப் புகழ் தமிழ்ச்சாதிக்கு இன்றும் இருக்கிறது. ஆனால் பாரதிதாசன் மறைந்தபோது குறைந்தது பத்தாயிரம் பேர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். மாநிலம் போற்றிய தலைவர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், இந்த இறுதி ஊர்வலத்தில் அவரது நினைவைப் போற்றி வழுத்தினார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய புகழ்முகம் கொண்டவராக விளங்கினார் பாரதிதாசன் என்றே சொல்லலாம்.

1964’ஆம் ஆண்டு ஞானபீடம் பரிசு தோற்றுவிக்கப்பட்டபோது, அதன் முதல் தகுதிக்குரியவராகப் பரிசீலிக்கப் பெற்றார் பாரதிதாசன். பரிசுக்குழுவுக்குப் பாரதிதாசனின் பெயர் பரிந்துரைக்கப்பெற்றது; ஆனால் பரிசுக்குழு அறிவித்த தினத்தில் பாரதிதாசன் காலமாகி நிறைந்து போனார். ஞானபீடம் உயிருடன் இருப்பவர்களுக்கே வழங்கப்பட்டு வந்ததால், நெருங்கி வந்த ஞானபீடம், கவிஞர் காலமானதால், மலையாளக் கவிஞரான ‘சங்கர் குரூப்’புக்குப் போனது. அத்தகு பெருமைக்குரியவராக இருந்தவர் பாரதிதாசன்.

பணியினால் ஆசிரியப் பணியில் இருந்தாலும், புரட்சிக் கவிஞராக, தேசியக் கவிஞராக, இயற்கைக் கவிஞராக, பெண்ணுரிமை பேணியவராக, இதழாசிரியராக, திரைப்பட நாடக எழுத்தாளராக, அரசியற்களத்தில் செல்வாக்குச் செலுத்துபவராக… என்று பல்துறை வித்தகராக விளங்கியவர் பாரதிதாசன். அனைத்திற்கும் அடிப்படையாக இருந்தது அவருக்குள்ளிருந்து துள்ளிவந்த தெள்ளுதமிழ். இந்தவார உயிருக்கு நேர் பகுதியின் நாயகராக பாரதிதாசனைப் பற்றி இந்தக் கட்டுரையில் அறிவோம்.

தோற்றம் இளமை கல்வி

புதுவை என்று புகழ்பெற்ற புதுச்சேரியில் ‘பள்ளிக்கூடத்தார்’ என்று அடைமொழி கொண்டிருந்த குடும்பம் ஒன்று இருந்தது. அது சுப்பராய முதலியார் குடும்பம். அந்தக் குடும்பத்தின் வழி வந்தவர் கனகசபை. அவருக்கு இரண்டு மனைவியர். கனகசபைக்கும் அவரது இரண்டாம் மனைவியான இலக்குமி அம்மையாருக்கும் பிறந்தவர் சுப்புரத்தினம். கனகசபையின் மகனானதால் கனகசுப்புரத்தினம். கி.பி.1891’ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29’ஆம் நாள் ஒரு புதன்கிழமையில் பிறந்தார் அவர். அவரது தந்தையான கனகசபைக்குப் புதுவையில் மளிகை மண்டிதான் தொழில். கண்ணாடிப் போத்தல்களில் அடைத்த மிளகு ரசம், வெற்றிலை, மணிலாக் கொட்டை என்ற வேர்க்கடலை, வெங்காயம், கோழி முட்டை போன்றவற்றை பிரான்சு போன்ற தேசங்களுக்கு கப்பல் வழி ஏற்றுமதி செய்யும் தொழில் புரிந்தார் அவர். வீரசைவத்தைப் பின்பற்றியவர் கனகசபை. தமிழறிஞர் பெரும்புலவர் பு.அ.பெரியசாமிப்பிள்ளை இவருக்கு நண்பர். வள்ளலாரின் மீதும் அவரது சமரச சுத்த சன்மார்க்கத்தின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தவர் அவர்.

அக்காலத்தில் வழமை போல் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார் கனகசுப்புரத்தினம். அந்தப் பள்ளிகளில் எண்சுவடி, செய்யுள்கள் மூலபாடம் மற்றும் அவற்றிற்கான உரைநடை அரும்பதவிளக்கம் போன்றவை சொல்லித்தரப்படும். செய்யுள்களைப் பிள்ளைகள் மூலபாடமாகப் படிப்பார்கள். ஆறுவயது முதல் பதினேழு வயது வரை புதுவை வட்டாரத்தில் இருந்த திருப்புளிசாமி ஐயாவின் திண்ணைப் பள்ளியில்தான் சிறுவன் சுப்புரத்தினம் படித்தார். பன்னிரண்டு வயதில் 1330 குறட்பாக்களும் மனப்பாடம் ஆகியிருந்தன. இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை அவருக்கு வந்திருந்தது. நாடகங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். மார்கழி, மாசி மகம் போன்ற விழாக் காலங்களில் இசையோடு பாடும் பாடற் குழுக்களிலும் இடம்பெற்றுச் சிறந்த இசைப்பயிற்சியும் பெற்றார் சுப்புரத்தினம்.

திண்ணைப்பள்ளி முடித்து உயர் கல்விக்காக கல்வே பள்ளிக்குச் சென்றார் சுப்பரத்தினம். கலவை சுப்பராயச்செட்டியாரால் தோற்றுவிக்கப்பெற்ற கல்வே கல்லூரியில் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு என்று மூன்று மொழிகளிலும் பயிற்சி அளிக்கப்பெற்றது. இந்தக் கல்லூரியில் தமிழ் ஆசிரிய அலுவலருக்குரிய பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தார் சுப்புரத்தினம். வகுப்பின் மாணவர்கள் அனைவரிலும் தோற்றத்தில் சிறியவர் சுப்புரத்தினம். ஆனால் படிப்பில் சூட்டிகையானவராக இருந்தார். இதனால் உதவித்தொகை கிடைத்தது. இறுதித் தேர்வில் முப்பது மாணவர்கள் புலவர் தேர்வில் தேர்வு பெற்றனர். அவர்களில் முதல்வராகத் தேர்வு பெற்றிருந்தார் சுப்புரத்தினம். புதுவையில் தமிழாசிரியருக்கு ஒரு வேலையிடம்தான் இருந்தது. புதுவை கல்வி இயக்குநரின் செயலாளராக இருந்த கையார் என்பவர் கனகசபை அவர்களின் நண்பர். அவர் சுப்புரத்தினத்தைக் கூப்பிட்டு, ‘சுப்பு, வேலைக்கு நிரவியில் ஒரே ஒரு இடம்தான் இருக்கிறது. அந்த இடமும் நியதிப்படி உனக்குத்தான் கிடைக்க வேண்டும். ஏனெனி்ல் நீதான் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறாய். அதோடு அரசு உதவித் தொகையும் பெற்றுப் படித்திருப்பதால், விதிகளின் படி உனக்கே அந்த வேலை வரவேண்டும். ஆனால் நீ உருவத்தில் மிகச் சிறியவனாக, மிகப் பொடியனாகத் தோன்றுகிறாய். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது, இரண்டு மூன்று சட்டைகளைப் போட்டுக் கொண்டு பருமனானவராக வா; உயரமான காலணிகளை அணிந்து வா. கல்வித்துறை இயக்குநரிடம் தைரியமாகப் பேசு.’ என்று அறிவுரை கூறினார். அந்தப்படியே நேர்முகத் தேர்வுக்குச் சென்றவருக்கு, வேலை உறுதி செய்யப்பட்டு அன்றே வேலைக்கான உத்தரவு, கையிலேயே கொடுக்கப்பட்டது.

பணிக்காலப் பொருதங்கள்

நிரவியில் பணியில் அமர்ந்தபோது சுப்புரத்தினத்துக்குப் பதினெட்டு வயது முடிந்து சிலதினங்கள் மட்டுமே ஆகியிருந்தன. பிரெஞ்சு ஆளுகையில் இருந்த நிரவியின் ஊர் மக்கள் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். ‘அதோ போறானே பொடிப்பய, அவந்தாம் புது வாத்தியாராம்’ என்று அவரது காதுபடவே பேசுவார்கள். நகரத்து நாகரிகம் பரவியிருக்காத சிற்றூரான நிரவிக்கு, சுப்புரத்தினத்தைப் பார்க்க அவரது நண்பர்கள் எவராவது முழுக்கால் சட்டை போட்டுக் கொண்டு வந்தால், அவர்களை ஊர்மக்கள் கூடிநின்று வேடிக்கை பார்ப்பார்கள். நிரவியில் விசுவலிங்கம் பிள்ளை என்பவர் ஒரு முக்கியப்புள்ளி. அவருக்கு ஆசிரியராக இருந்தவர் இராமசாமிப்புலவர் என்ற புலவர், அவருக்கு எழுபது வயது இருக்கும். ஒரு நாள் மாலை சுப்புரத்தினம் மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, விசுவலிங்கம் பிள்ளை தன்னுடைய ஆசிரியரோடு, வீட்டின் திண்ணைக் குறட்டின் மேல் அமர்ந்து இலக்கியம் பேசிக் கொண்டிருந்தார். வேறுசில அன்பர்களும் அவர்களோடு இருந்தனர். பிள்ளை, சுப்புரத்தினத்தைப் புலவருக்குச் சுட்டிக்காட்டி, ‘இந்தப் பையன்தான் இங்கு தமிழ் வாத்தியார்’ என்றார். புலவர் தெருவோடு நடந்து போய்க் கொண்டிருந்த சுப்புரத்தினத்தைக் கூப்பிட்டார். அவர் அழைத்த முறையே சுப்புரத்தினத்திற்குப் பெரும் சினத்தை வரவழைத்தாலும், அவருடைய முதுமைத் தோற்றத்துக்கு மதிப்புக் கொடுத்த குறட்டின் ஓரத்தில் வந்து அமர்ந்தார் சுப்புரத்தினம். புலவர்,
இலை படர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்னின்-நிலைவிளம்பக்
கொங்கை சுரந்தவருட் கோமாளோ சம்பந்ததா
இங்குயர்ந்தார் ஆர்சொல் எனக்கு?
என்ற பாடலை எடுத்துச் சொல்லி, ‘ஞான சம்பந்தருக்கு அன்னையர்களாக இந்தப் பாடலில் சொல்லப்படும் உமை, மங்கையர்க்கரசியார், இருவரில் யார் சிறந்த அன்னை?’ என்று கேட்டார்.

சுப்புரத்தினத்துக்குத் தமது தமிழ்ப்புலமையில் சிறுவனாக இருக்கும் போதே நம்பிக்கையும் உறுதியும் உண்டு. கல்லூரியிலும் அவருக்குத் தமிழ் கற்பித்த பங்காரு பத்தர் சிறந்த தமிழாசிரியர். சுப்புரத்தினத்தின் தந்தையாரின் நண்பரான பு.அ.பெரியசாமிப்புலவரும் சிறந்த தமிழறிஞர். அவருக்கு ஒப்பாக இன்னொருவரைச் சொல்லவேண்டுமென்றால், அரசஞ்சண்முகனாரைச் சொல்லாலாம். இத்தகைய பெரியோர்களிடம் தமிழ் கற்ற சுப்புரத்தினம் எந்தப் புலவருக்கும் எப்போதும் அஞ்சியதுமில்லை.

கேட்ட கேள்விக்கு உறுதியாக, ‘மங்கையர்க்கரசிதான்’ என்று விடையிறுத்தார் சுப்புரத்தினம். எவ்வாறு என்று கேட்ட புலவருக்கு, ‘ குழந்தை அழுமுன்பே முலையூட்டுபவர் அன்னை. ஆனால் ஞானசம்பந்தர் அழுத பின்னும், சிவபெருமான் கேட்டுக் கொண்டபின்னரே வந்தார் உமையம்மை. ஆனால் மங்கையர்க்கரசியாருக்கு, ஞானசம்பந்தரைப் பார்க்கும் முன்னரே, அவரைப் பற்றிச் ‘சீர்காழியில் பிள்ளை பாலுக்காக அழுதது’ என்ற இறந்தகால நிகழ்வை, எதிரில் நின்றவர்கள் எடுத்துரைத்த கணமே, பாண்டிமாதேவியின் மார்பகங்கள் விம்மிப் பாலைச் சுரந்தன; மேலும் உமையம்மைக்கு வெறும் அன்னை என்று விளி கொடுக்கும் இப்பாடல், பாண்டிமாதேவிக்கு, அருட் கோமகள் என்ற அடைமொழியைத் தருகிறது; எனவே அவரே சிறந்த அன்னை’ என்று விளக்கினார் சுப்புரத்தினம். மற்றவர் எதிரில் இந்த விளக்கத்தைப் பொருட்படுத்தாதவர் போன்று நடித்தாலும், அன்றைய மாலையில் புலவர், சுப்புரத்தினத்தின் வீடு தேடி வந்து அவரைப் பாராட்டியதோடு, அவரிடம் மன்னிப்பும் வேண்டிக் கொண்டார். இந்த நிகழ்வுக்குப் பின்னர் நிரவியில் சுப்புரத்தினத்தின் பெயர் புகழ் பெற்றது.

மாணவர் மீதான அக்கறை

கல்வி கற்றுக் கொடுப்பதோடு நின்று விடாமல், சுப்புரத்தினத்துக்கு மாணவர்கள் மேல் நிலையான அக்கறை அனைத்துப் புலங்களிலும் இருந்தது. புதுவையி்ல் சுயர்கூப் வீதியில் அமைந்திருந்த தொடக்கப் பள்ளியில் அவர் பணியாற்றும் போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இதற்குச் சான்று. அந்தப் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு, மதிய உணவு அளிக்கும் வழமை உண்டு. ஒருநாள் மதியஉணவு நேரத்தில், மாணவர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. சுப்புரத்தினம் மாணவர்களை அணுகிக் காரணம் கேட்டார். ‘முசியே, சாம்பார் கசப்புங்க’ என்றனர் மாணவர்கள். சுரைக்காய் சாம்பார் கசந்து கிடந்ததை சுவைத்துப் பார்த்தார் சுப்புரத்தினம். சமையற்காரர்களைக் கடிந்து கொண்ட சுப்புரத்தினம், மாணவர்களை வரிசையாக நிறுத்தி, கல்வித்துறைத் தலைவரின் அலுவலகத்துக்கு இட்டுச்சென்று, நிகழ்வின் கொடுமையை எடுத்துரைத்தார். விவரத்தைக் கேட்டறிந்த தலைவர், தனது செயலாளர் மூலம் வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொண்டதோடு, சுப்பு ரத்தினத்தை வெகுவாகப் பாராட்டினார். மாணவர் மீது அக்கறையோடு செயல்படும் அவர், எந்த உதவிக்கும் தம்மை அணுகலாம் என்றும் கேட்டுக் கொண்டு அவரை அனுப்பி வைத்தார். இந்தப் பொதுநலம் சுப்புரத்தினத்தைப் பல பொதுக்காரியங்களில் ஈடுபடுத்தியதோடு, அரசியல் அரங்கிலும் புகழைப் பெற்றுத் தந்தது.

பாரதியின் தாசன்

‘1908’இல் பாரதியார் புதுவை வந்தார். அவர் புதுச்சேரி வந்து ஓரிரு ஆண்டுகள் கழித்துத்தான் எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நான் இருபது வயதுக் காளை. அரசியற் கழகம், புலவர் கழகம், சண்டைக் கழகம் (மற்போர் பழகுவோர் குழு) ஆகிய எல்லா இடத்திலும் இருப்பேன். என் தோற்றமும் பார்ப்பதற்கு முரட்டுத் தனமாக இருக்கும். மற்களத்தில் முறையாகப் பயிற்சி செய்து கொண்டிருந்ததால், நல்ல உடற்கட்டுக் கொண்டிருந்த நான், கையில் தங்கக் காப்பும், கழுத்தில் கறுப்புக் கயிறும், மேனி தெரியும் மல் சிப்பாச் சட்டையுமாக வசுதாது போலத்தான் திரிவேன். என் நடையுடை பாவனைகளில் பண்பட்ட நிலை அப்போது ஏற்படவில்லை என்றே சொல்வேன். அப்போதே கவிதைகள் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். பாரதியாரின் தோற்றமும், கவிதையும், வெளிப்படையான போக்கும் என்னை அவர்பால் ஈர்த்தன. அவர் தொடர்பு என்னுடைய பழக்கவழக்கங்களிலும், சிந்தனைகளிலும் என்னையறியாமல் என்னை மாற்றத் தொடங்கியிருந்தது. காலப்போக்கில் அதனை நானும் உணரத் தொடங்கினேன். சுப்புரத்தினமாக இருந்த நான் பாரதிதாசனாக மாறத் தொடங்கினேன்.’ இவ்வாறு பாரதியாரின் பால் ஈடுபட்டதை விவரிக்கிறார் பாரதிதாசன்.

பாரதியாருக்குப் புதுவையில் அமைந்திருந்த நண்பர்கள் வட்டம் பெரிது. அரவிந்தர், வ.வே.சு.ஐயர், மண்டையம் சீனுவாசாச்சாரியார் போன்றோர் ஒருவகை. எழுத்தர் சுந்தரேச ஐயர், வெல்லச்சு செட்டியார் என்ற முத்தியாலு பேட்டை கிருட்டிணசாமி செட்டியார், வ.ரா போன்ற பாரதியாருக்கு இருந்த பணமுடைக்குத் தடயமே இல்லாமல் உதவிகள் செய்த நண்பர்கள் ஒருவகை, உடல் உழைப்புக்குத் தயங்காத குவளைக்கண்ணன் போன்றோர்; என்று அமைந்த பல்வகைக் குழுவில் தம்மையும் இணைத்துக் கொண்டு பாரதிதாசனானார் சுப்புரத்தினம். ஆங்கில அரசின் ஒற்றர்களைக் கண்காணித்து பாரதிக்கு எச்சரிக்கை செய்வது, புதுவை வந்து மறைந்து வாழ்ந்த தேசபக்தர்களுக்கு வெளிநாட்டுக் கைத்துப்பாக்கிகள் வாங்கிக் கொடுப்பது, பாரதியார் இடும் பணிகளை எவருக்கும் தெரியாமல் முடித்துக் கொடுப்பது என்று இயங்கினார் பாரதிதாசன். ஆங்கிலேயக் கலெக்டர் ஆசுத்துரையைக் கொல்லப் பயன்பட்ட துப்பாக்கியை வாங்கி அனுப்பியவர் பாவேந்தர்தான் என்று ஒரு குறிப்புக் கிடைக்கிறது.

ஒருநாள் நண்பர்கள் கூட்டத்தோடு பாரதியார் வீட்டில் அமர்ந்திருந்த பாரதிதாசன், பாரதியார் அமர்ந்து எழுதும் கணக்குப்பிள்ளை மேசையில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ‘ஐயரைப் போலவே சுப்புரத்தினமும் என்னவோ எழுதுறாரப்பா’ என்று பகடி செய்தார் குயில்தோப்பு சிவா. இதைச் செவிமடுத்த பாரதியார், ‘சுப்புரத்தினம் கவி எழுதக் கூடியவன்’ என்று சொல்ல, ‘எங்கே, அப்படியானால் ஒன்று எழுதச் சொல்லுங்கள்’ என்றனர் நண்பர்கள். உடனே ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பதினாறு வரிக்கவிதையை எழுதினார் பாரதிதாசன். பாடலைக்கேட்டு அனைவரும் வியந்தும் மகிழ்ந்தும் போனார்கள். பாடலைப் படித்துப் பார்த்த பாரதியார், அதன் பண்ணும் பொருளும் தனது கவிதைப் பாணியிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். அதோடு நில்லாமல், கையோடு அந்தக் கவிதையை தன் கைப்பட பெயர்த்து எழுதி, ‘சிரீ சுப்ரமணியபாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது’ என்று குறிப்பெழுதிச் சுதேசமித்திரன் நாளிதழுக்கு அனுப்பிவைத்தார். அது நாளிதழில் வெளியாயிற்று.

பாரதியார் முயன்று உட்கார்ந்து கவிதை செய்பவர் இல்லை.கவிதை உள்ளத்திலிருந்து கொட்டும் போது, அதனை எழுதிக் கொண்டே போகும் இயல்பினர். பாரதியார் எழுதிய புதிய ஆத்திசூடி ‘யௌவனம் காத்தல் செய்’ என்பதோடு நின்றிருந்தது. மிகுந்த பொருட் கடினப்பாடால் சோர்வடைந்திருந்த பாரதி, அதிக மனவருத்தத்தால் புதுவையை விட்டுவிட்டு, ஆங்கிலேய இந்தியப் பகுதிக்குச் சென்றுவிடலாம் என்று சினம் பொறிபறக்க, தனியாகப் புகைவண்டி நிலையத்துக்குச் சென்றுவிட்டார். கோபங்கொண்ட அவரை எதிர்கொள்ளச் சக்தியற்று அனைவரும் வாளாவிருந்து விட்டனர். பின்னர் வீட்டுக்கு வந்த பாரதிதாசன் செய்தி கேள்வியுற்று, பாரதியைத் தேடி எல்லா இடமும் அலைந்து விட்டு, புகைவண்டி நிலையத்துக்கு இறுதியாக வந்தார். சினம் அடங்காமல், நிலையத்தில் யாருடனும் பேசாமல், கண்களில் பொறிபறக்க அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார் பாரதி. பாரதியாரை எப்படியோ சாமாதானம் செய்து, மனிதர்கள் இழுக்கும் ஒரு கை வண்டியில் பாரதியாரை ஏற்றிக் கொண்டு திரும்பினார் பாரதிதாசன். தன் வீட்டுக்குப் போக மறுத்த பாரதியை, பாரதிதாசன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘சுப்பு, மனிதர்கள் வீடு பிடிக்கவில்லை, இயற்கை உலாவச் செல்லலாம்’ என்று பணிக்க, அவரது வீடிருந்த வாழைக்குளம் தாண்டி, இருந்த தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றார் பாரதிதாசன். வழியில் அகப்பட்ட ஒரு இளநீர்க்காயைச் சீவி, பாரதியாருக்குக் குடிக்கக் கொடுத்தார். தென்னந்தோப்பில் இருந்த ஒரு மல்லிகைச் சரக்கொடிக்கு அருகில், தான் ஏதும் அருந்தாது இருந்த பாரதிதாசன், ஒரு துண்டை விரித்துப் படுத்தார். அவரது அன்பு, மல்லிகைக் கொடிப் பூக்கள் என்ற சூழல் பாரதியிடம் திறப்பை ஏற்படுத்த, ‘ரசத்திலே தேர்ச்சி கொள்’, ‘ராஜசம் பயில்’ … என்று புதிய ஆத்திசூடியைத் தொடர்ந்து எழுதி முடித்தார் பாரதி. அத்தகைய அன்பு இருவரிடையேயும் நிலவியது.
1946’இல் பாரதிவிழாக் கவியரங்கத்தை திருச்சி வானொலிநிலையம் நடத்தியது. அதற்குத் தலைமையேற்ற பாரதிதாசன் அளித்த கவிதை அற்புதமானது. பாரதியை அத்தனை அருமையாகப் பாராட்டிய இன்னொரு கவிதை அரிதானது.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை !
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ !

பாரதிதாசன் என்றால் உண்மையில் பாரதியின் தாசனாக வாழ்ந்தார் அவர்.

பாரதிதாசனின் பிற கூறுகள்

பாரதிதாசன் திராவிட சித்தாந்தங்களைப் பின்பற்றியவர் என்பதால் அவர் தேச நோக்கு இல்லாதவர், கடினப்பாடுடையவர் என்ற பல உருவகங்கள் அவர் மீது நிலவின. ஆனால் அதில் முழு உண்மையில்லை. அவர் தீவிரத் தேசியவாதியாகவும், காந்தியவாதியாகவும் இருந்தவர். ‘அழகின் சிரிப்பு’ என்ற அற்புதமான இயற்கையைப் பற்றிய கவிதை நூல் எழுதியவர் பாரதிதாசன். பாரதியை அணுகிய பிறகு பல மாற்றங்கள் அவரிடம் வந்தன. 1920’இல் நிகழ்ந்த சத்தியாக்கிரக இயக்கத்திலும் பங்கு கொண்டார். காந்தியை ஒரு அவதாரத் தோற்றமாகப் பார்த்தார் பாரதிதாசன்.
குறுகிய செயலில் வையம்
குதித்தது கரைக்கு மீள
இறையவன் அருளில் காந்தி
எழுந்தது புவியில், நெஞ்சே !
என்று காந்தியைக் குறிப்பிட்டு எழுதினார் பாரதிதாசன். பாரதநாடு என்ற தேசியத்துவத்தைப் போற்றியவராக, இயற்கைக் கவிஞராக, பெண்ணுரிமை போற்றியவராக பல பொருண்மைகள் நிரம்பியவராகவே இருந்தார் பாரதிதாசன்.

• 1928’இல் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுத் தம்மை இணைத்துக் கொண்டார். இந்தியாவில் முதன்முதலாக குடும்பக் கட்டுப்பாடு பற்றிக் கவிதை எழுதி, ஈ.வெ.இரா’வின் குடி அரசு இதழில் வெளியிட்டார்.

• 1930’இல் பாரதியாரின் தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு, சிறுவர் சிறுமியர் தேசியக் கீதங்கள் போன்றவற்றை நூலாக வெளியிட்டார்.

• 1938’இல் பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி நண்பர்கள் பொருளுதவியால் வெளியிடப்பெற்றது.

• 1939’இல் ‘கவி காளமேகம்’ திரைப்படத்துக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதினார். பல படங்களுக்கு வசனங்களும், பல திரைப் பாடல்களும் எழுதியிருக்கிறார். சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் திரைப்படங்களுக்கு எழுதத் தொடங்கியவர்களின் முன்னவர் என்று பாரதிதாசனைச் சொல்லலாம்.

• 1946, 47களில் முல்லை, குயில் போன்ற இதழ்கள் அவரால் தொடங்கப் பெற்றன.

• 1946’இல் முப்பத்தேழு ஆண்டுகள் ஆசிரியப் பணிக்குப் பின்னர் ஓய்வு பெற்றார்.

• 1955’இல் புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று அவைத் தலைவரானார்.

• பின்னாட்களில் கலைஞர் மு.கருணாநிதி அரசு, பாவேந்தர் பெயரில் விருது ஒன்றை ஏற்படுத்தியதோடு, அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

• இன்று வரை குன்றாப் புகழுடன் விளங்கும் தமிழ்மொழி வாழ்த்தான, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலை இயற்றியவர் பாரதிதாசனே. ‘புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ பாடலும் இவர் எழுதியதே. ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்பதும் இவருடையதுதான்!

• பழநி அம்மையார் என்ற பெண்ணை மணந்த பாரதிதாசனுக்கு, மன்னர் மன்னன் என்ற ஆண் மகவும், மூன்று பெண் மகவுகளும் உண்டு.

பாரதிதாசனின் இலக்கியப் பங்களிப்பு

கவிதை, இசைப்பாடல், நாடகம், புதினம், சிறுகதை, கட்டுரை என்று பலவகைகளில் எழுதியவர் பாரதிதாசன். மதுரைத்திட்டம் தொகுப்பில் உள்ள அவரது ஆக்கங்களின் பட்டியல் பின்வருமாறு…

இலக்கணம், இசைப்பாடல் :

1. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது- வெளிவந்த ஆண்டு :1926
2. இசையமுது (முதலாம் தொகுதி)- வெளிவந்த ஆண்டு :1942
3. இசையமுது (இரண்டாம் தொகுதி)- வெளிவந்த ஆண்டு :1952
4. இந்தி எதிர்ப்புப் பாடல்கள்- வெளிவந்த ஆண்டு :1948
5. ஏற்றப் பாட்டு- வெளிவந்த ஆண்டு :1949
6. ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது- வெளிவந்த ஆண்டு :1978
7. கதர் இராட்டினப்பாட்டு,- வெளிவந்த ஆண்டு :1930
8. தேனருவி- வெளிவந்த ஆண்டு :1956
9. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு- வெளிவந்த ஆண்டு :1920
10. பாட்டுக்கு இலக்கணம்- வெளிவந்த ஆண்டு :1980
11. வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?- வெளிவந்த ஆண்டு :1980

கட்டுரைகள் :

1. பாரதிதாசன் திருக்குறள் உரை- வெளிவந்த ஆண்டு :1992
2. உலகுக்கோர் ஐந்தொழுக்கம்- வெளிவந்த ஆண்டு :1994
3. மானுடம் போற்று- வெளிவந்த ஆண்டு :1984

4. பாரதிதாசனின் கடிதங்கள்- வெளிவந்த ஆண்டு :2008
கவிதை :
1. அமிழ்து எது?- வெளிவந்த ஆண்டு :1951
2. அழகின் சிரிப்பு- வெளிவந்த ஆண்டு :1944
3. இளைஞர் இலக்கியம்- வெளிவந்த ஆண்டு :1958
4. உலகம் உன் உயிர்- வெளிவந்த ஆண்டு :1994
5. எதிர்பாராத முத்தம்- வெளிவந்த ஆண்டு :1938
6. காதல் நினைவுகள்- வெளிவந்த ஆண்டு :1944
7. காதல் பாடல்கள்- வெளிவந்த ஆண்டு :1977
8. குயில் பாடல்கள்- வெளிவந்த ஆண்டு :1977
9. சிறுவர் சிறுமியர் தேசியகீதம்- வெளிவந்த ஆண்டு :1930
10. தமிழியக்கம்- வெளிவந்த ஆண்டு :1945
11. தமிழுக்கு அமிழ்தென்று பேர்- வெளிவந்த ஆண்டு :1978
12. தாயின் மேல் ஆணை- வெளிவந்த ஆண்டு :1958
13. திராவிடர் திருப்பாடல்- வெளிவந்த ஆண்டு :1948
14. திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்- வெளிவந்த ஆண்டு :1949
15. நாள் மலர்கள்- வெளிவந்த ஆண்டு :1978
16. பன்மணித்திரள்- வெளிவந்த ஆண்டு :1964
17. பாரதிதாசன் ஆத்திசூடி- வெளிவந்த ஆண்டு :1948
18. பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி)- வெளிவந்த ஆண்டு :1938
19. பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)- வெளிவந்த ஆண்டு :1949
20. பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)- வெளிவந்த ஆண்டு :1955
21. பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி)- வெளிவந்த ஆண்டு :1977
22. பாரதிதாசன் நாடகங்கள்- வெளிவந்த ஆண்டு :1959
23. புகழ்மலர்கள்- வெளிவந்த ஆண்டு :1978
24. புரட்சிக் கவி- வெளிவந்த ஆண்டு :1937
25. பொங்கல் வாழ்த்துக் குவியல்- வெளிவந்த ஆண்டு :1954
26. மணிமேகலை வெண்பா- வெளிவந்த ஆண்டு :1962
27. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம்- வெளிவந்த ஆண்டு :1925
28. முல்லைக்காடு- வெளிவந்த ஆண்டு :1948
29. வேங்கையே எழுக- வெளிவந்த ஆண்டு :1978

காவியம் :

1. அகத்தியன்விட்ட புதுக்கரடி- வெளிவந்த ஆண்டு :1948
2. இருண்டவீடு- வெளிவந்த ஆண்டு :1944
3. கடற்மேற் குமிழிகள்- வெளிவந்த ஆண்டு :1948
4. கண்ணகி புரட்சிக் காப்பியம்- வெளிவந்த ஆண்டு :1962
5. காதலா? கடமையா?- வெளிவந்த ஆண்டு :1948
6. குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி- வெளிவந்த ஆண்டு :1942
7. குடும்ப விளக்கு – 2ஆம் பகுதி: விருந்தோம்பல்- வெளிவந்த ஆண்டு :1944
8. குடும்ப விளக்கு – 3ஆம் பகுதி: திருமணம்- வெளிவந்த ஆண்டு :1948
9. குடும்ப விளக்கு – 4ஆம் பகுதி: மக்கட்பேறு- வெளிவந்த ஆண்டு :1950
10. குடும்ப விளக்கு – 5ஆம் பகுதி: முதியோர் காதல்- வெளிவந்த ஆண்டு :1950
11. குறிஞ்சித்திட்டு- வெளிவந்த ஆண்டு :1959
12. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்- வெளிவந்த ஆண்டு :1930
13. தமிழச்சியின் கத்தி- வெளிவந்த ஆண்டு :1949
14. பாண்டியன் பரிசு- வெளிவந்த ஆண்டு :1943

நாடகம் :

1. பாரதிதாசனின் புதிய நாடகங்கள்- வெளிவந்த ஆண்டு :1994
2. சத்திமுத்தப்புலவர்- வெளிவந்த ஆண்டு :1950
3. இன்பக்கடல்- வெளிவந்த ஆண்டு :1950
4. அமைதி- வெளிவந்த ஆண்டு :1946
5. இரணியன் அல்லது இணையற்ற வீரன்- வெளிவந்த ஆண்டு :1939
6. கழைக்கூத்தியின் காதல்- வெளிவந்த ஆண்டு :1951
7. கற்கண்டு- வெளிவந்த ஆண்டு :1945
8. குமரகுருபரர்- வெளிவந்த ஆண்டு :1992
9. கோயில் இருகோணங்கள்- வெளிவந்த ஆண்டு :1980
10. செளமியன்- வெளிவந்த ஆண்டு :1947
11. சேரதாண்டவம்- வெளிவந்த ஆண்டு :1949
12. தலைமலை கண்ட தேவர்- வெளிவந்த ஆண்டு :1978
13. நல்லதீர்ப்பு- வெளிவந்த ஆண்டு :1944
14. படித்த பெண்கள்- வெளிவந்த ஆண்டு :1948
15. பிசிராந்தையார்- வெளிவந்த ஆண்டு :1967

பாட்டு :

1. சுயமரியாதைச் சுடர்- வெளிவந்த ஆண்டு :1931
2. தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு- வெளிவந்த ஆண்டு :1930
3. தொண்டர் வழிநடைப் பாட்டு- வெளிவந்த ஆண்டு :1930
புதினம் :
1. பாரதிதாசனின் புதினங்கள்- வெளிவந்த ஆண்டு :1992

பிற :

1. இலக்கியக் கோலங்கள்- வெளிவந்த ஆண்டு :1994
2. கேட்டலும் கிளத்தலும்- வெளிவந்த ஆண்டு :1981
3. பாரதிதாசன் கதைகள்- வெளிவந்த ஆண்டு :1955
4. ஏழைகள் சிரிக்கிறார்கள்- வெளிவந்த ஆண்டு :1980
5. கவிஞர் பேசுகிறார்- வெளிவந்த ஆண்டு :1947
6. பாரதிதாசன் பேசுகிறார்- வெளிவந்த ஆண்டு :1981
7. எது இசை?- வெளிவந்த ஆண்டு :1945
8. பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்- வெளிவந்த ஆண்டு :2012
9. சிரிக்கும் சிந்தனைகள்- வெளிவந்த ஆண்டு :1981

நிறைவு

தனது அரசியல் தொடர்புகள், சுயமரியாதை இயக்கப் பங்களிப்புகளினால் 1960’களுக்குப் பிறகும் குன்றாத புகழுடன் திகழ்ந்தார் பாரதிதாசன். 1964 ஏப்ரல் 21’ஆம் நாள் அவர் மறைந்த போது, அவருடைய அடக்கம் புதுச்சேரியில் நிகழ்த்தப்படவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். முன்னரே குறிப்பிட்டபடி பெரும் மக்கள் திரள் அஞ்சலி செலுத்த அவரது இறுதி ஊர்வலமும், நல்லடக்கமும் நடந்தன. தனது சாகாவரம் பெற்ற பாடல் வரிகளால் இன்றளவும் நினைவில் நிற்கிறார் பாவேந்தர்.

முருகுதமிழ் அறிவன்
asnarivu@gmail.com

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!