Home » உயிருக்கு நேர் – 45
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 45

45 மா.இராசமாணிக்கனார்  (12.03.1907 –  26.05.1967)

தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால் தமிழ் வகுப்புக்குரிய ஐந்தாவது வருடம் வரை உள்ள பாடங்களைச் சில மாதங்களில் கற்று முடித்து விட்டான் அந்தச் சிறுவன். அப்படிப்பட்ட சிறுவனின் பின்னாள் வாழ்க்கை தமிழுலகம் கண்டிராத ஒரு வரலாற்றுப் பேரறிஞரின் வாழ்வாக விரிந்தது. சோழர்களின் வரலாறை மூன்று புத்தகங்களாக அவர் எழுதியது இன்றளவும் பாராட்டப்பட்டுப் படித்துக் கொண்டாடப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் நூல் எழுதியவர் இவரே.  சென்னை விவேகானந்தா கல்லூரி, மதுரைத் தியாகராசர் கல்லூரி, சென்னைப் பல்களைக்கழகம் என்று பல கல்லூரிகளும் பல்கலைகளும் அவரைப் பணி கொண்டு தமிழுக்கு அணி செய்தன. அவரது பெரியபுராண ஆராய்ச்சி சமய ஆய்வுநூல்களின் ஆக்கத் திறத்துக்கு அதுவரை இல்லாத ஒரு புதிய அளவுகோலை முன்வைத்த சிறந்த நூல். சேக்கிழாரின் வரலாற்று ஆய்வுப் புலத்தை எடுத்துக்காட்டிய நூல். சமயநோக்கில் அல்லாது, ஆய்வுநோக்கில் ஒரு சைவ இலக்கிய வரலாற்று நூலாகப் பெரியபுராணத்தை அணுகினார் அவர்.

சைவசமய வளர்ச்சி என்ற தலைப்பில் ஆய்வு நூலாக்கி அளித்து முனைவர் பட்டம் பெற்றார் அவர். அவர் எழுதிய தமிழர் திருமணமுறை என்ற நூல் தமிழ்ச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் பெரும் பாராட்டைப் பெற்ற நூல். பி.ஓ.எல். எல்.டி, எம்.ஓ.எல், முனைவர் போன்ற பட்டங்களை தமிழ்மொழியியலில் பெற்றவர்.  சைவ வரலாற்று ஆய்வுப் பேரறிஞர், ஆராய்ச்சிக் கலைஞர், சைவ இலக்கிய அறிஞர், சைவநெறிக்காவலர் போன்ற பட்டங்களைப் பெற்ற, பன்முகத் திறன் கொண்ட அவரது வாழ்க்கை நெடுகி நீண்ட ஒன்றாக அமையாது போனது தமிழுலகின் கேடூழ் என்றே சொல்லவேண்டும். எனினும் அவரது ஐம்பதொன்பது ஆண்டுக் கால வாழ்வுக்குள் அந்த அறிஞர் தமிழுலகுக்கு ஆக்கியளித்த நூல்கள்  அவரது திறனுக்கும், ஆழ்ந்த அறிவுக்கும் இன்றளவும் சான்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளிந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரைக்கதைக் குழுவில் பணியாற்றிய குமரவேல், இராசமாணிக்கனாரின் பெயரன் ஆவார். வரலாற்றுப் பேராசிரியரும், தமிழறிஞருமான மா.இராசமாணிக்கனாரே நாம் இந்தவாரம் அறிந்து கொள்ளப்போகும் உயிருக்கு நேர் பகுதி 45’ன் நாயகர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!