Home » உலகம் சுற்றும் வாலிபன் (புதிய காப்பி)
இலங்கை நிலவரம் உலகம்

உலகம் சுற்றும் வாலிபன் (புதிய காப்பி)

ஜூலை 9ம் தேதி புரட்சி நடந்தது. அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பற்றிய எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. என்னதான் ஆனார்? எங்கே போனார்?

ஒன்பதாம் தேதி சனிக்கிழமை வரலாறு காணாத மக்கள் வெள்ளம் ஜனாதிபதி மாளிகையின் கேட்டை உடைத்துக் கொண்டு உட்புகும் கணத்திற்குச் சற்று முன்னர் வரை அவர் மாளிகையில்தான் இருந்தார். நிலைமை விபரீதமாவதை அறிந்த பாதுகாப்புத் தரப்பினர் நூறு மீட்டர் நீளமான ரகசிய சுரங்கப் பாதை வழியாக கொழும்புத் துறைமுகத்திற்கு அவரையும் அவரது பாரியார் அயோமா அம்மையாரையும் வெளியேற்றினர். அங்கிருந்து கடற்படைக் கப்பலில் ஏறி இருபத்தொரு நாட்டிகல் மைல் தொலைவில் இருக்கும் ‘நீர்கொழும்பு’ கடலில் நடு மையத்தில் நின்று கொண்டார்.

இந்த நிமிஷம் முதல் கில்லி படத்தில் வரும் விஜய் – த்ரிஷா போல தம்பதியரின் ஓயாத ஓட்டம் ஆரம்பமாகிறது.

அத்தனை ஆர்ப்பாட்டக்காரர்களும் களைத்துப் போய் மாலை வீட்டுக்குத் திரும்பியதும் பழையபடி மாளிகையில் போய் உட்கார்ந்து கொள்வதே அவரது திட்டமாய் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைத் தொடர்பு கொண்டு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதியின் சகல அதிகாரங்களையும் பாராளுமன்றத்திற்கு வழங்கிவிட்டு தான் பெயரளவில் வெறும் டம்மி பீஸாய் இருக்கப் போவதாகவும் கூறினார். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். கோட்டாபயவுக்கு நிலைமையின் விபரீதம் சுத்தமாய்ப் புரியவில்லை என்பதற்கு இந்த உரையாடலைத் தவிர வேறு சாட்சி தேவை இல்லை.

முப்படைகளின் பிரதானியும் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச ஒரு முழு நாளைக் கடலில் கடத்தினார். இதற்கு மேல் இந்தப் பதவியைத் தொடரத்தான் வேண்டுமா என்று அவருக்கே தோன்றி இருக்கக் கூடும்.

கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்னர் அரசியல் சாசனத்திற்குக் கட்டுப்பட்டு தனது அமெரிக்கப் பிரஜா உரிமையை நீக்கிக் கொண்டவர். ஆனால் முழுக் குடும்பத்திற்கும் அமெரிக்கப் பிரஜா உரிமை இன்னமும் இருக்கிறது. ‘பழைய காதலி தான். இருந்தாலும் இந்நெருக்கடியில் கைவிடமாட்டாள்’ என்ற நினைப்பில் அமெரிக்க தூதரகத்தை அணுகினார். அவருக்கு உடனடி வீஸா வழங்க தூதரகம் மறுத்துவிட்டது. மனைவி அமெரிக்கப் பிரஜை என்பதால் மனைவியை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்து கிரீன் கார்ட் பெற்றுக் கொண்டு வருமாறு சாதாரணர்களுக்கு சொல்வது போல சொல்லப்பட்டது. ஒரு ஜனாதிபதிக்கு இதைவிட அவமானத்தை யாரால் கொடுக்க முடியும்?

அயர்லாந்து செல்வதற்கு முயற்சி செய்ததாய் ஒரு தகவல் வந்தது. எப்படியோ அமெரிக்காவும் ஐரோப்பாவும் கை விரித்த நிலையில் மத்திய கிழக்கு தான் தஞ்சம் புக ஒரே வழி என்று கணித்திருக்க வேண்டும். 12ம் தேதி காலை 05.25 இற்கு அபுதாபி செல்லும் EY265 விமானத்தைப் பிடிக்கக் கிளம்பினார்.

இங்கே ஒரு விசயத்தை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு முழுநாளைக் கடலில் கடத்திய கோட்டாபய மற்ற இரண்டு நாள்களும் எங்கே இருந்தார் என்பதற்கான தெளிவான பதில் கிடைக்கவே இல்லை. ஏர்போர்ஸிற்கு சொந்தமான ஒரு கேம்ப் இல் இருந்ததாக சொல்லப்பட்டது. எப்படியோ இந்தக் காலத்தில் ஆன்லைன் ஜனாதிபதியாக இருந்தார். அவ்வளவுதான் மேட்டர்.

அப்போது விமான நிலையத்தில் பெரிய கலாட்டா நடந்து கொண்டிருந்தது. கோட்டாபயவின் தம்பி பெசில் ராஜபக்சவை குடிவரவு அதிகாரிகள் துரத்தியடித்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோக்களும் ஃபோட்டோக்களும் சமூக வலைதளம் முழுக்க ட்ரெண்டாகிக் கொண்டிருந்தன. இந்த நிலை ஜனாதிபதியும் முன்னாள் யுத்த வெற்றி வீரனுமான தனக்கு ஜென்மத்திலும் வராது என்று நினைத்து ‘எடுடா வண்டியை’ என்று சொல்லி இருப்பார் கோட்டாபய.

பாதுகாப்பு அதிகாரிகள் டாக்குமெண்டுகளை குடிவரவு அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பார்கள். விமான நிலையத்தின் பின் கேட் வழியாக வந்து விமானம் புறப்பட கடைசி நேரத்தில் ஓடிப் போய் விமானத்தில் ஏறிக் கொள்ள வேண்டும். இவ்வளவுதான் ஏற்பாடு.

ஆனால் விமான நிலையமே உடைந்து தலையில் வீழ்ந்த மாதிரி ஒரு பதில் குடிவரவு அதிகாரிகளால் கோட்டபாயவுக்கு சொல்லப்பட்டது. ‘குறித்த நபர் எங்கள் முன்னே ஆஜாராகாமல் எந்தப் பணியையும் தொடரமாட்டோம். எல்லோருக்கும் பொதுச் சட்டம் தான். ஒரே நாடு ஒரே சட்டம்.’

எந்தப் பேச்சு வார்த்தைக்கும் யாரும் மசியவில்லை. ஒரு பக்கம் கெளரவப் பிரச்னை. இன்னொரு பக்கம் வேறொரு சிக்கல் இருந்தது. இமிக்ரேஷனிடம் பவ்யமாய் கைகட்டி நின்று தன்மானத்தை தாரை வார்த்துவிட்டு அப்படியே விமானத்தில் ஏறினாலும் பயணிகள் யாராவது நடுவானில் உதைக்க வந்தால் என்ன செய்வது?

பயணிகள் விமானம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. விமானப் படைக்கு சொந்தமான அன்டனோவ் AN 32 விமானத்தில் பறக்க விமானப் படையின் உதவியை நாடினார் கோட்டாபய. இதில் இன்னொரு செளகரியமும் இருந்தது. விமானப் படை விமானத்தில் செல்லும்போது எந்தக் குடிவரவு அதிகாரி முன்னிலையிலும் போய் இளிக்கத் தேவை இல்லை என்கிறது சட்டம். விமானப் படையே எல்லாவற்றையும் செய்து தரும்.

‘அபுதாபி எல்லாம் செல்லுமளவுக்கு இச்சிறு விமானம் தாங்காது, வேண்டுமென்றால் தென் இந்தியாவில் ஏதாவது விமானநிலையத்திற்கோ அல்லது மாலத் தீவுக்கோ கொண்டுபோய் விடலாம்’ என்றது விமானப் படை.

மூன்று மாதம் கிரெடிட் லைனில் பிழைத்துக் கொள்ள சாப்பாடு தந்த இந்தியா கைவிடாது என்ற நம்பிக்கையில் ‘மோடியே சரணம்’ என்றவாறு சுழற்றினார்கள் டெலிபோனை. ஆனால் கிடைத்த பதில்தான் கிலியூட்டியது. இலங்கையின் நிலவரம் அயல் வீட்டானைத் தவிர யாருக்கு நன்கு தெரியும்? எதற்கு வம்படியாய் சர்ச்சை ஒன்றை வாங்கி மடியில் கட்டிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்களோ என்னவோ. ‘தமது எந்த விமானநிலையத்திலும் வெளிநாட்டு ராணுவத்தின் விமானம் ஒன்றைத் தரையிறக்க அனுமதி இல்லை’ என்று மறுத்துவிட்டது இந்தியா.

வேறு போக்கிடமில்லை. மாலத்தீவு தான் ஒரே வழி. அண்ணன் மகிந்த ராஜபக்சவின் ஆருயிர் தோழனும், முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் சபாநாயகருமான முஹம்மட் நஷீடிடம் விவரம் சொல்லப்பட்டது. இதே நஷீடுக்கு எதிராக மாலத்தீவு மக்கள் 2013ம் ஆண்டு கலகம் செய்த போது அவர் இலங்கைக்குப் பறந்து வந்தார். அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அன்னாரைக் காத்தருளினார். இது போதாது? நஷீட் பரபரப்பானார்.

நஷீட் ஏற்பாட்டில் விறுவிறு என்று காரியம் நடந்தது. 13ம் தேதி அதிகாலை 01 மணிக்கு விமான நிலையத்தின் பின்கேட் வழியாக நுழைந்த கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் மாலே பறந்தார்கள். எதிர்த்து நின்றவர்களுக்கு அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு இருக்கும் சுகபோகமும் சலுகைகளும் செளபாக்கியமுமிக்க ஷரத்துகளும் விமானப்படையால் வாசித்துக் காட்டப்பட்டது.

எந்தளவுக்குத் தலை தெரித்த ஓட்டம் என்றால் மாலத்தீவு ரன்வே திருத்த வேலை காரணமாக இரவு 12.30 முதல் காலை 06.30 வரை மூடப்பட்டு இருந்தது. கடமையில் இருந்த ஏர் டிராபிக் அதிகாரிகள் விமானப் படையிடம் இதை எடுத்துக் கூற அதெல்லாம் ஒரு நொடியில் தீர்ந்து போனது. கோட்டாபயவுக்காக மூடப்பட்ட ரன்வேயும் திறக்கப்பட்டது. நஷீட் அத்தனையையும் பக்காவாய் செய்துமுடித்து இருந்தார். எப்பேர்பட்ட நட்பு.

மாலத் தீவில் கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட இருப்பதாய் ப்ரேக்கிங் நியூஸ்கள் வரிசை கட்டின. முழு சர்வதேச மீடியாவின் கவனமும் மாலத் தீவில் குவிந்தது. புனித மெக்காவிற்குப் போய் இருந்த மாலத் தீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சாலிஹ் உடனடியாக நாடு திரும்பினார்.

ஆனால் சில மணித் துளிகளிலேயே ‘கோட்டா கோ ஹோம்’ கோஷம் மாலத் தீவிலும் எழுந்தது. மாலத் தீவில் இருக்கும் இலங்கையர்கள் சுலோகங்களை ஏந்திக் கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் குதிக்க, கோட்டாபயவின் இஸ்லாமிய விரோத அரசியல் ட்விட்டர் எங்கும் ட்ரெண்டாகி மாலத் தீவு வாசிகளையும் ஆத்திரமூட்ட, கொதிப்படைந்த எதிர்க்கட்சி கோட்டாபயவின் விஜயத்தின் நோக்கத்தை கேள்விக்குட்படுத்தி பாராளுமன்றத்தில் விவாதம் கோரியது.

இப்படி சர்ச்சை சலங்கை கட்டி ஆடிக் கொண்டிருக்க கோட்டாபய தெற்கு மாலேயில் இருக்கும் வால்டோப் அஸ்டோரியா சவுத் மாலே என்ற பிரபுக்கள் தங்கும் அதி சொகுசு ஹோட்டலில் தினத்திற்கு நான்கு லட்சம் இந்திய ரூபாய் செலுத்திக் கொண்டு பதுங்கி இருந்தார்.

இவ்வளவும் நடந்து கொண்டிருக்கும் போது காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் போய் பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். பிரதமர் ரணில் நாடு முழுக்க அவசரகால சட்டத்தையும் கொழும்பில் மேலதிகமாக ஊரடங்கு சட்டத்தையும் அமல்படுத்தினார். ஆனால் இவற்றை அமல்படுத்த பிரதமர் ரணிலுக்கு அரசியல் சாசனத்தில் அதிகாரம் இல்லை என்று சில சட்டத்தரணிகள் போர்க் கொடி தூக்கினர். நிலமை இப்படி இருக்க பிரதமர் ரணிலை பதில் ஜனாதிபதியாக தான் நியமித்து இருப்பதாக கோட்டாபயவின் இருட்டறை அறிக்கை ஒன்று வந்து சேர்ந்தது.

கோட்டாபய ராஜபக்ச எவ்வளவுதான் துரத்தப்பட்ட ஜனாதிபதி என்று முழு உலகமுமே சத்தியம் செய்து சொன்னாலும் அவரின் ராஜினாமா கடிதம் இல்லாமல் எதுவுமே செல்லாது என்று அறிவித்துவிட்டார் சபாநாயகர். ஏற்கெனவே 13ம் தேதி ராஜினாமாவை அனுப்பி வைப்பதாய் சொன்ன அவர், தான் பாதுகாப்பாய் ஒரு நாட்டிற்குப் போய்ச் சேரும் வரை தன் பதவியைத் துறப்பதில்லை என்று திட்டவட்டமாய் சொல்லிவிட்டார்.

இதனால் தேசம் முழுக்க பெரும் பிரளயம் மூண்டது. ‘ஊரடங்கெல்லாம் போட நீ யாரு? உனக்கு யாரு அதிகாரம் தந்தது? உன்னை எப்படி அக்டிங் ப்ரசிடண்டாக அந்த ஆள் நியமிக்க முடியும்? கோட்டாபயவைப் பாதுகாக்கும் நீயும் சேர்ந்து பதவி துறக்க வேண்டும்’ என்று போராட்டக்காரர்கள் பிரதமர் ரணில் மீது எகிறினார்கள். ஒரு கூட்டம் போய் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியையும், மற்றொரு அரச தொலைககாட்சியான ஐ ரீ என் ஐயும் கைப்பற்றிக் கொண்டது. பாராளுமன்றத்தைக் கைப்பற்ற இன்னொரு கூட்டம் ஆரவாரமாய் கிளம்பியது. யாரும் யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை. அவரவருக்கு எது சரி என்று பட்டதோ அதைச் செய்து கொண்டிருந்தனர்.

‘ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் என்று அத்தனையும் வீழ்ந்துவிட்டன. இப்படியே போனால் எதுவுமே மிஞ்சப் போவதில்லை. படு அராஜகமான நிலைக்கு தேசம் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் கூறும் கோரிக்கைகளை நிறைவேற்ற குறைந்தபட்சம் பாராளுமன்றமாவது இருக்க வேண்டும். ஆகவே போதும் நிறுத்துங்கள்’ என்று சட்டத்தரணிகள் சங்கம் போராட்டக்காரர்களிடம் கதறத் தொடங்கியது.

இதெல்லாம் இப்படி இருக்க, சொர்க்கபுரியாக இருக்கும் என்று நினைத்த மாலத்தீவும் ஏழாம் நரகம் போல மாறத் தொடங்க கோட்டாபய அவசரமாய் சிங்கப்பூர் செல்லும் முயற்சிகளில் இறங்கினார். தனிப்பட்ட ஜெட் விமானம் ஒன்றில் அவர் சிங்கப்பூர் செல்ல இருப்பதாக முதலில் அலறியது மீடியா. ஆனால் என்ன நினைத்தாரோ அந்தத் திட்டத்தைக் கைவிட்டார்.

பின்னர் 13ம் தேதி இரவே மாலேயிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற முயன்றவரிடம் ‘அதில் இலங்கையிலிருந்து வரும் ட்ரான்ஸிட் பயணிகள் இருக்கிறார்கள். உயிருக்கே பெரும் ஆபத்தாய்விடும்’ என்று சொல்லி தடுத்து நிறுத்தப்பட்டது. கடைசியாய் சவூதி ஏர்லைன்ஸிற்கு சொந்தமான SVA 788 விமானத்தில் 14ம் தேதி மாலை சிங்கப்பூர் போய்ச் சேர்ந்தார். இந்த விமானம் செல்லும் அரிய காட்சியின் லைவ் தான் இதுவரை flight radar இணையத்தில் அதிக நபர்கள் கண்டு களித்த விமானம் ஒன்றின் லைவாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதே வேளை போராட்டக்காரர்களின் கோபம் சபாநாயகர் மேலே திரும்பியது. அவர் என்ன செய்வார், பாவம்? அவரும் பல தடவை கோட்டாபயவைத் தொடர்பு கொள்ளப் பார்த்தார். பதிலாக ‘நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் நாடு நாடாய் சுற்றிக் கொண்டிருக்கிறார். தயவு செய்து சற்று நேரத்தில் மீண்டும் முயற்சிக்கவும்’ என்று திரும்பத் திரும்ப பதிவு செய்யப்பட்ட டெலிபோன் குரல் சொல்லப்பட்டு இருக்க வேண்டும்.

கடுப்பான சபாநாயகர் ராஜினாமா கடிதத்தைக் கூட தராமல் பொறுப்பில்லாமல் இருக்கும் கோட்டாபய பதவி விலகியதாய் அறிவிக்கமுடியுமா என்று சட்ட மாஅதிபருடன் ஆலோசனை நடத்தத் தொடங்கினார்.

இந்த அமளி துமளி நடந்து கொண்டிருக்கும் போது கோட்டாபய லைனுக்கு வந்தார். தான் ராஜினாமா கடிதத்தை வாட்ஸப் செய்திருப்பதாக சபாநாயகருக்கு அறிவிக்க, பெரும் மொக்குத்தனமாய்ப் போனது. ஆன்லைன் ஜனாதிபதியின் விரிச்சுவல் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று மீண்டும் களேபரமானது.

தனக்கு முறையான கடிதத்தை அனுப்பிவைக்குமாறு ஆணித்தரமாய் கோட்டாபயவிடம் சொல்லிவிட்டார் சபாநாயகர். 14ம் தேதி இரவு சிங்கப்பூரில் இருக்கும் இலங்கைத் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லும் அடுத்த விமானத்தில் ஏறி சுடச்சுட ராஜினாமா கடிதத்துடன் வந்து சேர்ந்தார். ‘ஒரு காக்கா இம்புட்டோன்னு ஆய் போனதுக்கு இவ்வளவு பெரிய கலவரமா’ என்று வடிவேலு கேட்ட மாதிரி ஒரு ராஜினாமாவுக்கு எத்தனை பெரும் செலவு.

கோட்டாபய பதவி விலகினாலும் ஒட்டுமொத்த ராஜபக்ச கும்பலும் வீட்டுக்குப் போனாலும் ஒரு அரசியல் ஸ்திரமற்ற பொருளாதார சுபீட்சமற்ற தன்மை ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரஷ்ய புரட்சி, சீன புரட்சி, ப்ரெஞ்ச் புரட்சி என்ற பண்டைய காலப் புரட்சியின் போதும் சரி, அரபுலகம் கண்ட நவீன மக்கள் எழுச்சியின் போதும் சரி. போராட்டக்காரர்களில் இருந்துதான் ஒரு தலைவன் உதயமானான். அல்லது வலுவான ஒரு கட்சிப் பின்னணியுடைய ஒரு சர்வ வல்லமைமிக்க ஒரு தலைவன் அத்தனையையும் நெறிப்படுத்தினான். இலங்கையில் அது நடக்கவில்லை.

ராஜபக்ச குடும்பத்தையும் அராஜக ஆட்சியாளர்களையும் தூக்கியடித்துவிட்டு நல்லாட்சி அமையவேண்டும் என்று வெறுமனே வேண்டிக் கொண்டார்களே தவிர யாரால் எப்படி அது அமைய வேண்டும் என்று எந்தத் தெளிவும் அவர்களிடம் இருக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் 20ம் தேதி பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் (செவ்வாய் கிழமை காலை 10 மணி) வரை மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். சாவு வீட்டில் தவிர்க்கமுடியாத கல்யாணம் ஒன்றை நடத்த வேண்டிய இக்கட்டான நிலைமை ஒன்று ஏற்பட்டதைப் போல இருக்கிறது நாடு.

ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச கும்பலுடன் கருத்து வேறுபட்டு ஒதுங்கிப் போன டலஸ் அலகப் பெரும, ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்களும் கோதாவில் இறங்கி இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கட்சி டலஸ் அலகப் பெருமவை ஆதரிக்கிறது.

உள்நாட்டு அரசியல் அலப்பறைகள் இப்படி நகர சிங்கப்பூரில் இருந்து பதினைந்து நாள்களில் வெளியேறுமாறு கோட்டாபயவிற்கு அறிவித்து இருக்கிறது சிங்கப்பூர் அரசு. கோட்டாபய கடைசியாய் எங்கே போய்ச் சேர்வார் என்று யாருக்கும் தெரியவில்லை. இடி அமீன் முதல் நவாஸ் ஷெரீப் வரை அத்தனை அயோக்கிய சிகாமணிகளுக்கும் நேசக் கரம் நீட்டிய சவூதியில் போய் தஞ்சம் அடையப் போகிறார் என்று பிரான்ஸின் AFP செய்தி வெளியிட்டு இருந்தது.

கோட்டாபய நாட்டைவிட்டு தப்பியோடினாலும் பழக்கதோஷ ‘கோட்டா கோ ஹோம்’ கோஷம் இன்னமும் காலி முகத்திடலில் ஓயவில்லை. கோட்டாபயவின் தற்போதைய வீடு எங்கே இருக்கிறது என்று கத்துபவர்களிற்கும் தெரியாது. கோட்டாபயவுக்கும் தெரியாது. அவர்கள் வெறி கொண்டு கத்துகிறார்கள். கோட்டாபய வெறி கொண்டு உலகம் முழுக்க ஓடிக் கொண்டு இருக்கிறார்.

ஸஃபார் அஹ்மத்
ahmedzafaar@gmail.com

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!