Home » இந்தியக் கடற்படை: அறிந்ததும் அறியாததும்
இந்தியா

இந்தியக் கடற்படை: அறிந்ததும் அறியாததும்

கடற்கொள்ளையர் பற்றிய செய்திகளும் இந்தியக் கடற்படை வீரர்களின் சாகசங்கள் குறித்தும் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட கப்பல்களை அவர்கள் மீட்டுக் கொடுத்த செயல்கள் குறித்தும் சமீப காலமாகச் செய்திகள் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. நமக்கு ராணுவம் அளவுக்குக் கடற்படை அவ்வளவு நெருக்கமல்ல என்பதால் அது குறித்து அதிகம் தெரிந்தவர்கள் குறைவு. இந்தக் கட்டுரை, இந்தியக் கடற்படை குறித்த நுணுக்கமான பல விவரங்களை அளிக்கிறது:

மூன்று வித்யுத் ரக ஏவுகணைக் கப்பல்கள். ஐ.என்.எஸ். நிப்பாட், நிர்காட், வீர். மூன்றும் தலா நான்கு ஏவுகணைகளைக் கொண்டிருந்தன (உபயம்: சோவியத்). இவற்றுக்குத் துணையாக இரண்டு சிறிய ரகப் போர்க்கப்பல்கள்- ஐ.என்.எஸ். கில்டன் மற்றும் கிட்சால். இந்த ஐந்து கப்பல்களுக்கும் எரிபொருள் நிரப்புவதற்கான டேங்கர் ஐ.என்.எஸ். போஷாக். இந்தியக் கடற்படை தலைமையகத்திலிருந்து தாக்குதலுக்கு அனுப்பப்பட்ட குழு இதுதான்.

1971-ல் பங்களாதேஷ் விடுதலையை முன்வைத்து இந்தியா- பாகிஸ்தான் போர்ப் பதற்ற சூழ்நிலை இருந்தபோதே, அதாவது நவம்பர் இறுதியிலேயே, முன்யோசனையுடன் இக்கப்பல்கள் குஜராத்தின் ஓகா துறைமுகத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் மூன்றாம் தேதி பாகிஸ்தான், இந்திய எல்லைக்குள் தனது விமானங்களை அனுப்பிப் பிள்ளையார் சுழி போட்டது. போர் தொடங்கியது.

டிசம்பர் 4, 1971. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்குத் தெற்கே தோராயமாக 460 கிலோமீட்டர்கள். மிகக் கவனமாகப் பாகிஸ்தானின் கண்காணிப்பு ரேடாருக்கு வெளியே நின்றிருந்தன மேற்சொன்ன இந்தியக் கப்பல்கள். அன்றையத் தேதியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் இரவில் தாக்குதல் நடத்தும் திறனற்று இருந்தன. பிறகென்ன…. அது தான் சுபமுகூர்த்தம்.

சரியாக இரவு 10.30 மணி. பாகிஸ்தானை நோக்கி முன்னேறின இந்தியக் கப்பல்கள். துறைமுகத்திலிருந்து 330 கிலோமீட்டர்கள் என்கிற நிலையில் பாகிஸ்தானின் போர்க் கப்பலைக் கண்டடைந்து. முதல் குறி பி.என்.எஸ்.கைபர். இது பாகிஸ்தானின் Destroyer போர்க் கப்பல். ஐ.என்.எஸ். நிர்காட் வடமேற்கு பக்கமாக நகர்ந்து சென்று தனது முதல் தாக்குதலை தொடுத்தது. பாகிஸ்தான் கப்பலின் கொதிகலன் அறையை அது தாக்கியது. அவர்கள் இது இந்திய விமானப்படையின் தாக்குதல் எனத் தவறாக நினைத்து, உடனே பாகிஸ்தான் கடற்படை தலைமையகத்திற்குத் தகவல் சொன்னார்கள். ‘எதிரி விமானம் தாக்கிவிட்டது’ கூடவும் அவர்கள் தங்கள் இருப்பிடமாகத் தந்த விவரங்களும் தவறானவை. அதனால் மீட்புக் குழு வருவதற்குத் தாமதமானது. சற்று பொறுத்துப்பார்த்த ஐ.என்.எஸ். நிர்காட் மீண்டுமொரு தாக்குதலைத் தொடுத்தது. இந்த அடிக்கு பாகிஸ்தானின் கைபர் கடலில் மூழ்கிப்போனது.

அடுத்த அரைமணி நேரத்தில் ஐ.என்.எஸ். நிப்பாட் எதிர்கொண்டது பாகிஸ்தானின் வீனஸ் சாலஞ்சரை. இது போருக்காகப் பெருமளவில் வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்களோடு பாகிஸ்தானுக்குள் சென்றுகொண்டிருந்த கப்பல். இரண்டு ஏவுகணைத் தாக்குதல்கள். வீனஸ் சேலஞ்சரும் அதற்குத் துணையாக வந்த பாதுகாப்புக் கப்பலும் வெடித்துச் சிதறின. அடுத்தது ஐ.என்.எஸ். வீர் தன் பங்கிற்குப் பாகிஸ்தானின் சிறிய ரகப் போர்க்கப்பல் ஒன்றைக் கடலுக்குள் புதைத்தது.

இதேவேளையில், ஐ.என்.எஸ். நிப்பாட் முன்னேறிச் சென்று கராச்சி துறைமுகத்தைத் தாக்கியது. அங்கிருந்த எண்ணெய் டேங்குகளைக் குறிவைத்து அழித்தது.

எண்ணெய்க் கிடங்குகள், ஆயுதங்கள் – வெடிபொருள்கள் அதோடு கப்பல்கள் எனப் பெரும் சேதத்தை விளைவித்து விட்டு, இந்தியத் தரப்பில் எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக எல்லையைத் தாண்டின கப்பல்கள். இந்தியக் கடற்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைச் சுக்கு நூறாக்கிய சம்பவம்தான் ஆபரேஷன் டிரைடென்ட். இந்த வெற்றி தினத்தைத் தான் ஒவ்வொரு ஆண்டும் இந்தியக் கடற்படை தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிபொருள்களை மொத்தமாக அழிக்கும் நோக்கில், அதற்கு அடுத்த சில நாள்களிலேயே இந்தியக் கடற்படை அரங்கேற்றிய இன்னொரு ஆபரேஷன் பைதான். இவ்விரு தாக்குதல்களும் அன்றைக்குப் போரில் இந்தியத் தரப்பின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளாக அமைந்தன. அதோடு இந்திய கடற்படையின் திறனையும் உலக நாடுகள் உணர்ந்து கொண்டன.

இன்றைக்கு இந்தியப் பெருங்கடலில் தீவிரவாதத் தாக்குதலோ, கடற்கொள்ளையர்களின் அட்டகாசங்களோ எதுவாயினும் அதை எளிதாக முறியடிக்கும் வல்லமை இந்தியக் கடற்படையிடம் உண்டு. அதுவும் கடந்தசில வாரங்களாகத் தொடர்ந்து அதைக் குறித்துச் செய்திகளை அறிந்து வருகிறோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!