வணக்கம்
இன்று மகளிர் தினம். இது மகளிர் சிறப்பிதழ். AI முதல் Me too வரை இன்றைய தலைமுறைப் பெண்கள் சம்பந்தப்பட்ட பல நுணுக்கமான பிரச்னைகள் இந்த இதழில் அலசப்பட்டிருக்கின்றன. அரசியலில் கோலோச்சத் தொடங்கியிருக்கும் ரோஜா முதல் மாத நாவல் துறையில் சாதித்த மகளிர் வரை பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண் சாதனையாளர்கள் இந்த இதழை அலங்கரிக்கிறார்கள்.
இந்த இதழில், இந்தப் பகுதியின் சிறப்பாசிரியராக இருந்து பணியாற்ற ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவனைக் கேட்டுக்கொண்டோம். மறுக்காமல் ஒப்புக்கொண்டு, சிறப்பாகச் செய்துகொடுத்த அவருக்கு மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த நன்றி.
பத்திரிகை, தொலைக்காட்சி உலகில் சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் செயலாற்றி வருபவர் அவர். நிராகரிப்புகள், அவமானங்கள், பொறாமைகள், கவிழ்ப்பு முயற்சிகள் என்று சந்திக்காத இடர்பாடுகளில்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது திறமை ஒன்றினால் மட்டுமே அனைத்தையும் வென்று தனது பத்திரிகையை நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் பல துறைச் சாதனையாளர்களுக்கு அவரது லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் சார்பில் அவர் வழங்கும் சக்தி விருதுகள் தமிழ்ச் சூழலில் மிகவும் பிரபலம். பெண்கள் முன்னேற்றத்தை மட்டுமே தன் வாழ்வின் அர்த்தமாகவும் இலக்காகவும் கொண்டு செயல்புரிபவர். இச்சிறப்பிதழை அவர் ஆசிரியராக இருந்து கொண்டு வருவதன் பொருத்தத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இதழைக் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். வாசகர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.