Home » ப்ளஸ் டூவுக்குப் பிறகு: கல்விக் கடன் பெறும் வழிகள்
கல்வி

ப்ளஸ் டூவுக்குப் பிறகு: கல்விக் கடன் பெறும் வழிகள்

வித்யா லட்சுமி, ஜன் சமர்த் – கல்லூரிப் படிப்புக்காகக் காத்திருக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு பெயர்கள் இவை.

பெரும்பாலான மத்தியத்தர வர்க்கத்தின் கனவு, தங்கள் பிள்ளைகளை ஒரு ‘உயர்ரக’க் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைப்பதுதான். உயர்ரகக் கல்லூரி என்றால் அதற்குண்டான கட்டணமும் அப்படித்தானே இருக்கும்? அதைக் கட்டுமளவு பணம் கையிருப்பில் இல்லை. ஆனால் பிள்ளையின் விருப்பம் அதுதான். என்ன செய்வது..?

‘படிப்பதற்குப் பணம் போதவில்லை எனும் காரணத்தினால் பிள்ளைகள் தங்களுடைய கல்விக் கனவை இழந்துவிடலாகாது’- இது பெற்றோருடைய எண்ணம் மட்டுமல்ல, நமது அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதுவே.

மேற்படிப்புச் செலவிற்காகப் ‘பிணையில்லாக் கடனை’ எந்த வங்கியிலும் தடையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். கார் வாங்க, வீடு கட்ட, கடன் வாங்கும்போது போது, கடனைக் கட்டி முடிக்கும் காலம் வரை அந்தக் காரும், வீடும் வங்கியின் பெயரில் அடமானத்தில் இருக்கும். நகைக் கடன் என்றால் திருப்பும் காலம் வரை வங்கியில்தான் நகை இருக்கும்.

அப்படியானால் கல்விக் கடனுக்கு அடமானம் வைக்க சொத்துப் பத்திரம் வேண்டுமா? ஃபிக்ஸட் டெபாஸிட் போட வேண்டுமா? பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்ய வேண்டுமா? எதுவும் தேவையில்லை! அரசாங்கத்தின் ஆணைப்படி 7.5 லட்சம் வரை எந்த ஒரு பிணையமும் இல்லாமல்தான் வங்கிகள் கல்விக் கடன் வழங்க வேண்டும். அதில் இரு பிரிவுகள் உண்டு.

வங்கிகள் நாலு லட்சம் வரை எந்தப் பிணையமும் இன்றி எல்லாருக்கும் கடன் கொடுக்கும். அதற்குமேல் கடன் தேவைப்படும் மாணவர்கள், மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்தவர்களாக இருப்பின் அவர்களது பெற்றோரிடமிருந்து ஜாமீன் பத்திரம் (Guarantor agreement) பெறப்படும். அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு 7.50 லட்சம் வரை பிணையமோ ஜாமீன் கையெழுத்தோ தேவையில்லை. ஏழரை லட்சத்துக்கு மேல் கடன் வேண்டும் என்றால் மட்டுமே சொத்துப் பத்திரத்தைப் பிணையமாகத் தர வேண்டியிருக்கும்.

இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளுக்கு மட்டும்தான் எஜுகேஷன் லோன் என்னும் தவறான புரிதல் இங்கு உண்டு. பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., டீச்சர் டிரெயினிங், டிப்ளமா, டிகிரி, நர்ஸிங் போன்ற பல அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கும் கல்விக் கடன் பெறலாம்.

கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், போக்குவரத்துச் செலவுகள், புத்தகம், லேப்டாப் வாங்குவது போன்ற அனைத்துச் செலவினங்களுக்காகவும் கல்விக் கடன் பெறமுடியும். ஆனால் நன்கொடை, கொட்டேஷன் ஃபீஸ் போன்றவற்றைக் கடனில் சேர்க்க முடியாது.

நாம் சேரவிருக்கும் படிப்பு அங்கீகரிக்கப்பட்டதா? அதற்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? எந்த வங்கியைப் போய் பார்ப்பது? எதில் வட்டி குறைவாக இருக்கும்? யாரைக் கேட்பது? இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாகத்தான் வித்யாலக்ஷ்மி போர்ட்டலை வடிவமைத்திருக்கிறது மத்திய அரசு. அதில் மொத்தம் 45 அரசு மற்றும் தனியார் வங்கிகள் இணைந்திருக்கின்றன. அந்தந்த வங்கிகள் கொடுக்கும் கல்விக் கடன் வகைகள், வட்டி விகிதங்கள், திருப்பிச் செலுத்தும் காலம், தேவையான சான்றிதழ்கள் போன்ற விவரங்கள் முழுவதையும் இணையத் தளத்திலேயே பார்த்துக் கொள்ளலாம்.

நமக்கு விருப்பமான வங்கியில் அந்த இணையத்தளத்தின் மூலமே விண்ணப்பிக்கலாம். ஒரு சந்தேகத்துக்கு இரண்டு மூன்று கல்லூரிகளில் அப்ளிகேஷன் போட்டுவைப்பதைப் போன்று இந்த போர்ட்டலிலும் மூன்று வங்கிகள் வரை கடனுக்காக விண்ணப்பித்து வைக்கலாம்.

அது சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குப் போய்விடும். விண்ணப்பித்த படிவத்தின் ஸ்டேட்டஸ் என்ன..? என்று பார்க்கும் வசதியும் வித்யா லக்ஷ்மி போர்ட்டலில் உண்டு. இந்த போர்ட்டலில் ரெஜிஸ்டர் செய்வது, விவரங்களைப் பார்ப்பது, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது போன்ற செயல்முறைகளை விரிவாக விளக்கும் ஸ்டெப்-பை-ஸ்டெப் வீடியோக்கள் தமிழிலேயே இருக்கின்றன. 

வித்யாலக்ஷ்மியில் விண்ணப்பித்த உடனே வங்கியிலிருந்து அழைப்பார்கள் என்று வீட்டில் உட்கார்ந்திருக்கக் கூடாது. காரியம் ஆக வேண்டுமென்றால் களத்தில் இறங்கிவிட வேண்டும். விண்ணப்பித்த படிவங்களை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் 10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்ட், பான் கார்ட் நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், கல்லூரியில் தந்த போனஃபைடு ஃபீஸ் ஸ்ட்ரக்ச்சர், அட்மிஷன் சான்றிதழ் போன்றவற்றையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தந்தை அல்லது தாயின் ஆதார், பான் நகல்களும் தேவைப்படும்.

ஜன் சமர்த் என்பதும் மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் கடன் போர்ட்டல்தான். நம்முடைய வருமானம், படிப்பதற்கு ஆகும் செலவு, நம்மால் அதில் எவ்வளவு போட முடியும் போன்ற விவரங்களை உள்ளீடு செய்தால் நமக்கு எவ்வளவு கடன் தொகை கிடைக்கும் என்று சொல்லிவிடும். இந்தப் போர்ட்டலில் உள்ளீடு செய்த விண்ணப்பத்தையும் பிரிண்ட் அவுட் எடுத்து வங்கியில் சமர்ப்பிக்கலாம். பொதுத் துறை வங்கிகள் இந்த ஜன் சமர்த்-பிரிண்ட் அவுட்டையும் விண்ணப்பத்தோடு சமர்ப்பிக்கச் சொல்லி வலியுறுத்துகின்றன.

சரி… எல்லா ஆவணங்களையும் கொடுத்தாகி விட்டது. எத்தனை நாள் காத்திருக்கலாம்? இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். நான்கைந்து முறை வங்கிக்குப் போய் பார்க்க வேண்டி வரலாம். எந்த ஒரு கல்விக் கடன் விண்ணப்பத்தையும் வங்கிகளால் எளிதில் நிராகரித்துவிட முடியாது. என்ன காரணத்தினால் கடன் வழங்கப்படவில்லை என எழுத்துப் பூர்வமாகச் சொல்ல வேண்டும். மதிப்பெண் அடிப்படையிலோ, குடும்ப வருமானம் குறைவு, சொத்து இல்லை என்பதற்காகவோ கல்விக் கடன் வழங்காமல் இருக்க முடியாது.

விண்ணப்பத்திருக்கும் மாணவரின் அண்ணனோ, அக்காவோ ஏற்கனவே கல்விக் கடன் வாங்கி, ஒழுங்காகக் கட்டாமல் விட்டிருந்தாலோ, பெற்றோரின் பெயரில் வாராக் கடன் இருந்தாலோ அதைக் காரணம் காட்டி விண்ணப்பத்தை நிராகரிக்கலாம். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எத்தனைப் பிள்ளைகள் வேண்டுமானாலும் ஒரே நேரத்திலோ/ அடுத்தடுத்தோ தேவைக்கேற்பக் கடன் பெற்றுக் கொள்ளலாம். பெண் பிள்ளைகளுக்கு வட்டி விகிதத்தில் 0.50% வரை சலுகை உண்டு. ஆண்டு வருமானம் 4.50 லட்சத்துக்கு குறைவாக இருப்பின் படிக்கும் காலம்வரை, கடனுக்கான வட்டித் தொகைக்கு மத்திய அரசு மானியம் வழங்கும்.

கடன் பெறுவதற்கு வங்கியில் ஏற்கனவே சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கடன் வழங்குகையில் வங்கியே ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொடுக்கும்.

சரி, லோன் கிடைத்துவிட்டது. கல்லூரியில் கட்டிச் சேர்ந்தாகி விட்டது. கடன் கதை அத்தோடு முடிவதில்லை. கடன் தொகை முழுவதையும் முதல் தவணையிலேயே வங்கிகள் கொடுத்து விடாது. பெரும்பாலான கல்லூரிகள் ஆண்டுக் கட்டணம்தான் வசூலிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் வங்கிக்குச் சென்று, கல்லூரி கொடுக்கும் கட்டண விவரங்களையும், அந்த வருட மதிப்பெண் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அரியர்ஸ் இருந்தாலோ, அட்டெண்டென்ஸ் குறைவாக இருந்தாலோ, வங்கிகள் அந்த ஆண்டுக்கான கடன் தொகையைக் கொடுக்கத் தயங்கும். பெற்றோரை அழைத்து வந்து கடிதம் எழுதி மேலாளரைப் பார்க்கச் சொல்லி இழுத்தடிக்கும்.

சரி, படிப்புக் காலம் முடிந்து விட்டது. அடுத்து மாஸ்டர்ஸ் படிக்க வேண்டுமென்றால் அதற்கும் கல்விக்கடன் பெற்றுக் கொள்ளலாம். படித்து முடித்து வேலை தேடுவதற்குச் சில காலம் ஆகும். அனைத்து வங்கிகளும் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை ‘ரீபேமென்ட் ஹாலிடே’ வழங்கும். அதாவது, அந்த காலகட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. வேலை கிடைத்த உடனோ, படிப்பு முடிந்த ஒரு வருடம் கழித்தோ கடனை ஈஎம்ஐ-யாகக் கட்ட ஆரம்பித்து விட வேண்டும். பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தும் வசதி இருக்கும்,

பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலை கொடுப்பதற்கு முன் நமது ‘சிபில் ஸ்கோர்’ என்ன என்று பார்க்கும். கல்விக் கடன் வாங்கிக் கட்டாமல் இருப்பின், சிபிலில் தெரிந்து விடும். வேலை கிடைக்காது. படிக்கும் காலத்தில் உதவி செய்த வங்கிக் கடனை உரிய காலத்தில் அடைத்து விடுவதே சாலச் சிறந்தது. பிடித்த கல்லூரியில் சேர்ப்பதும், கல்விக் கடன் பெற்றுத் தருவதும் பெற்றோரின் கடமை என்றால், அதைத் திரும்பச் செலுத்தும் பொறுப்பு முற்று முழுதாகப் பிள்ளைகளுடையதுதான்.

இன்றைய இணைய உலகில் கல்விக் கடன் பெறுவது கடினமான காரியம் அல்ல. தேவையான அனைத்து விவரங்களும், விண்ணப்பங்களும் விரல் நுனியில் கிடைக்கும் வசதிகள் இருக்கின்றன. அந்த வசதிகளைக் கவனமாக உபயோகிப்படுத்திக் கொள்வது நமது கையில்தான் இருக்கிறது.

காயத்ரி. ஒய்
gayathriyagnamani@gmail.com

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!