Home » ‘நாளைய நட்சத்திரங்கள் இங்கிருந்தே உதிக்கும்!’
விழா

‘நாளைய நட்சத்திரங்கள் இங்கிருந்தே உதிக்கும்!’

புக்பெட் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்

புக்பெட் ஆண்டு விழாக் கொண்டாட்டம்

சரியாக ஓராண்டுக்கு முன்னர், இதே அக்டோபரில், காந்தி ஜெயந்தி நாளில்தான் பாராவின் Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்பு ஆரம்பமானது. இந்த ஓராண்டில் ஐந்து அணிகளாகச் சுமார் தொண்ணூறு மாணவர்கள் வந்து பயின்று சென்றிருக்கிறார்கள். பயின்று தேறியவர்களுள் சிலர் மெட்ராஸ் பேப்பரிலும் தொடர்ந்து எழுதுகிறார்கள். அமைதியாக ஓர் எழுத்து இயக்கம் இங்கே உருவாகிக்கொண்டிருக்கிறது.

புக்பெட்-ரைட்ரூம் ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டம் கடந்த ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு Zoom-இல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிவசங்கரி வசந்த் வரவேற்புரை வழங்கினார்.  தொழில்நுட்ப வல்லுநரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிராந்திய இயக்குநருமான தி.ந.ச. வெங்கடரங்கன் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். எழுத்தாளர்கள் ரமேஷ் வைத்யா, என். சொக்கன், கே. சுமதி மூவரும் வாழ்த்துரை வழங்கிப் பேசினார்கள். நமது மெட்ராஸ் பேப்பர் நிருபரும், பாராவின் ரைட் ரூம் மாணவியுமான நசீமா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மெட்ராஸ் பேப்பரின் தொழில்நுட்ப ஆலோசகர் செல்வ முரளி நன்றியுரை ஆற்றினார்.

தொடர்ந்து, பாராவின் மாணவர்கள் பலர் தத்தமது வகுப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அதன்பிறகு பாராவுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்களும் வாசகர்களுமாக சுமார் நாநூறு பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் (யூட்யூப் நேரலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் இது சாத்தியமானது.) இருந்து சில துளிகள்:

சிவசங்கரி: எழுத்தை சொல்லிக் கொடுக்க முடியுமா?

கலையைக் கண்டிப்பாகக் கற்றுத்தர முடியாது. ஆனால் நுட்பத்தை சொல்லிக் கொடுக்க முடியும்.

ஷேக் மொகதீன்: ஒரு அபுனைவு நூலை எப்படி வடிவமைக்க வேண்டும்?

பத்திரிகையாளராகச் செய்ய வேண்டிய வேலைகள், எழுத்தாளராகச் செய்ய வேண்டிய வேலைகள், எடிட்டராக அமர்ந்து அதற்கு எப்படி வடிவம் கொடுப்பது என்று மூன்று நிலைகளில் செய்ய வேண்டும். அதிகம் வேலை வாங்கும் பகுதி பத்திரிகையாளனாக எப்படித் தகவல்களைத் திரட்டுகிறோம் என்பது. பிறகு அவை சரியான தகவல்களா என்று உறுதிப் படுத்த வேண்டும். பிறகு எழுதி எடிட் செய்ய வேண்டும். அபுனைவில் கன்டண்ட் தான் அரசன். எழுத்தாளன் ஊழியனாக மட்டுமே இருக்க முடியும். புனைவெனில் ராஜா எழுத்தாளன் தான்.

தியாகராஜன்: மெட்ராஸ் பேப்பர் நிருபர்களுக்கு ஓர் அடையாளம் (அட்டை) இருந்தால் நல்லது.

அட்டை என்ன செய்துவிடும்? சென்னை புத்தகக் கண்காட்சியில் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பத்துப் புத்தகங்கள் வரப்போகின்றன. நமது பெயரை அவை சொல்லும். உலகெங்கும் எடுத்துச் செல்லும். இது ஆரம்பம்தான். அடுத்தடுத்து இந்தப் படை இன்னும் பல சாதனைகள் புரியும். நாளைய நட்சத்திர எழுத்தாளர்கள் இங்கிருந்தே உதிப்பார்கள்.

கோகிலா பாபு: மாணவர்களாக இருந்து படித்ததில் எங்களுக்குத் திருப்தி. ஒரு ஆசிரியராக இருந்து நடத்தியதில் உங்களுக்கு எப்படி இருந்தது?

கொடுத்தால் குறையாத ஒரே விஷயம் சொல்லித் தருவதுதான். தொடக்கம் முதலே இது என் வேலையின் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. பத்திரிகை, பதிப்புலகில் இருந்த வரை தினசரிப் பணிகளில் ஒன்றாகவே. ஆனால், முழு நேர எழுத்துக்கு வந்தபின்பு வகுப்புகள் எடுப்பது குறைந்து, நின்று போனது. அது ஒரு வருத்தமாக இருந்ததால்தான் சென்ற ஆண்டு மீண்டும் வகுப்புகளைத் தொடங்கினேன்.

கவனித்தீர்கள் என்றால், கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழில் தரமான புதிய எழுத்தாளர்கள் வரவில்லை. குறிப்பாக அபுனைவு எழுத ஆளே இல்லை. வந்தவர்களும் தப்பும் தவறுமாகவே எழுதினார்கள். அதை மனத்தில்கொண்டுதான் இந்த வகுப்பைத் தொடங்கினேன். கருத்தளவுக்கு மொழியும் முக்கியம். நீங்கள் எழுதி வெளிவரும்போது பிழைபட்ட பிரதி என்று யாராவது சொல்லும்போது தான் வலி புரியும். நன்றாக இல்லை என்பது வேறு. சரியில்லை என்பது வேறு. ஒரு பிரதி முதலில் குற்றமற்றதாக, தகவல், மொழிப் பிழை இல்லாததாக இருக்க வேண்டும். இதற்கு அப்பால்தான் கண்டன்ட். அது தரமாக, கனமாக, காத்திரமாக இருக்க வேண்டும். பிழை களைந்த ஓர் எழுத்துத் தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பது என் அடிப்படை ஆசை. ரைட் ரூம் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது.

சிவ கிஷோர்: ஒரு புனைவுப் புத்தகத்தை (நீங்கள் மாஸ்டர் என்று குறிப்பிட்ட ஓர் எழுத்தாளருடையது.) மூன்று முறை எடுத்துள்ளேன். ஆனால் நான்காவது அத்தியாயத்தை தாண்டமுடியவில்லை? இது எதனால் நேர்கிறது?

மாஸ்டர்களின் புத்தகங்களின் உள்ளே போகமுடியவில்லை என்றால் நீங்கள் சரியான சாவியைப் போட்டுத் திறக்கவில்லை என்று பொருள். தவறு அங்கே இல்லை. உங்களிடம் உள்ளது. ஏனெனில் காலம் கடந்து நிற்கும் எந்த ஓர் எழுத்தாளரும் புரியாமல் எழுதுவதில்லை.

தீபன் திருமாறன்: அபுனைவு எழுதும் போது கேள்விப்பட்டவற்றுக்கு இடம் உண்டா? சொல்லப்படுகிறது என்று எழுதலாமா?

ஆதாரமில்லாத எதுவும் அபுனைவுக்கு ஆகாது. சந்தேகத்திற்கிடமானதை எழுத்திற்குள் கொண்டுவரவே கூடாது.

சத்யமூர்த்தி: அற்புதப் படைப்புகள் வெளியே தெரியாத பர்சனல் டைரிகளில் உள்ளது. இதை அவர்களே கொண்டு வராதவரை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இதை எப்படி சீர்படுத்த..?

ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் வேண்டுமானால் பொதுவெளியில் எழுதுங்கள். சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. யாரும் யாரையும் தேடித்துருவி வெளியே கொண்டுவர மாட்டார்கள். நாமே தான் செய்து கொள்ள வேண்டும்.

ஷேக் மொகைதீன்: இளைய தலைமுறையினருக்கு நீங்கள் வகுப்பு நடத்தலாமே? அதாவது மாணவர்களுக்கு.

மாணவர்கள் எழுத வந்தால் சந்தோஷமாக வரவேற்கிறேன். ஆனால் தமிழில் படிக்கவே வராதவனை எழுத எப்படி அழைப்பது..? பொன்னியின் செல்வனைக் கூட ஆங்கில மொழிபெயர்ப்பில் வாங்கிப் படிக்கிறார்கள். ஆசிரியர்களும் அம்மாக்களும் பிள்ளைகள் தாய் மொழியைக் கற்க (குறைந்தபட்சம் எழுதப் படிக்க) முதலில் உதவட்டும். அவர்கள் எழுதும் ஆசையுடன் அதன்பின் வந்தால் நான் இலவசமாகவே சொல்லித்தரத் தயார்.

சத்யமூர்த்தி: புதிதாக எழுத ஆரம்பிக்கும்போது எதைப்பற்றி எழுத?

எதைப்பற்றியும் எழுதலாம். நன்றாகத் தெரிந்ததை எழுத வேண்டும். அபுனைவு என்றால், உண்மையை மட்டும் எழுத வேண்டும். ஆதாரத்தோடு எழுத வேண்டும். அவ்வளவு தான். எழுதிக் கொண்டே இருந்தால் தான் தெளிவு கிடைக்கும். பயிற்சி மூலம் மட்டுமே நல்ல எழுத்து சாத்தியம்.

ஸாபர் அகமது: ஆதாரங்கள் என்கிறீர்களே, சில விஷயங்கள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் அப்படியே நடப்பது. நான் அந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கிறேன் என்பது தான் ஆதாரம். இதற்கு நான் ஆதாரம் வைத்துக் கொள்ள வேண்டுமா?

சாட்சி இருக்கிறதே. நீங்கள் வாழும் காலத்தின் சாட்சி நீங்கள். இதற்கு இன்னொருவரின் ஆதாரம் தேவையில்லை. சமகாலத்தை எழுதுவதற்கும் சரித்திரத்தைத் தொட்டு எழுதுவதற்குமான வித்தியாசம் வேறு. இன்று நடப்பதை பத்து வருடம் கழித்து எழுதினால் ஆதாரம் தேவை.

ராஜேஷ்: விமரிசனங்களை எதிர்கொள்வது எப்படி?

கண்டுகொள்ளக் கூடாது. எழுத்துப் பயிற்சிதான் வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டும். நன்றாக இல்லை என்று ஒருகோடி விமர்சனங்கள் வரும். அதை நினைத்துக்கொண்டு அங்கேயே இருந்திருந்தால் எழுத்தாளராக முடியாது. நம் வேலை எழுதுவது. பதில் சொல்வதல்ல. நியாயமான விமர்சனங்களை கவனத்தில் கொண்டு திருத்தம் செய்யப் பாருங்கள். மற்றவற்றைப் புறந்தள்ளலாம்.

கே.பிரபாகரன்: எழுத்தை முழு நேரத் தொழிலாக வைக்கும் அளவிற்கு இன்றையச் சூழலில் வாய்ப்புகள் உள்ளதா?

முழுநேரம், பகுதிநேரம் என்பது நாம் முடிவு செய்வதல்ல. நம் எழுத்துக்குத் தகுதி இருக்குமானால் அதன் நேரத்தை அது வரையறை செய்துகொள்ளும்.

வெங்கட்ரங்கன்: தங்லீஷ் பயன்படுத்தாமல் யாரும் எழுதுவதில்லை. ஏன் எல்லோருமே இப்படி எழுதுகிறார்கள்..?

முக்கியமான பத்திரிகைகள் இங்கே மொழி சார்ந்த உணர்வை இழந்துவிட்டன. அதன் வாசகர்களும் அப்படியே பழகிவிட்டார்கள். உ.வே.சா, சாமிநாத சர்மா, அ.முத்துலிங்கம், ஏ.கே.செட்டியார், சுந்தரராமசாமி, அசோகமித்ரன் எவரையும் படித்துப்பாருங்கள். இவர்களெல்லாம் தமிழால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்கள். புனைவானாலும் அபுனைவானாலும் நேர்த்தியாக எழுதியவர்கள். கலப்புத் தமிழ் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே சமயம் எளிமைக்கும் குறைவிருக்காது. நாம் இவர்களைப் பின்பற்றுவதே நம் மொழிக்கு நல்லது. தங்கிலீஷ் தலைமுறை நிற்காது; நிலைக்காது.

மகாலிங்கம்: ஒரு பயணக்கட்டுரை நூல் எழுதிக்கொண்டுள்ளேன். தகவலை உறுதிப்படுத்தச் சில நாட்கள் ஆகிவிடுகிறது. திரும்ப எழுதும்போது நடை ஓட்டம் பாதிக்கப்படுகிறது. எப்படித் தவிர்க்கலாம் இதை..?

எழுத்து தினசரி வழக்கமாக வேண்டும். தொடர்ச்சியான பழக்கத்தில் இப்பிரச்னை தீர்ந்துவிடும். இது ஆரம்பத்தில் எல்லோருக்கும் உள்ள பிரச்சினைதான்.

சையது சாகர்: மெட்ராஸ் பேப்பருக்கு ஏன் ஒரு ஆப் வரக்கூடாது?

மெட்ராஸ் பேப்பரை ஒரு ஆப் மேகசினாகக் கொண்டு வர வேண்டும் என்பது தான் இலட்சியம். இது கனவு சார்ந்தது மட்டுமல்ல. பணம் சார்ந்தது. நிறைய சந்தாதாரர்கள் வந்தால் கூடிய விரைவில் நடந்துவிடும்.

மங்கை: உக்ரைன் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

நான் உக்ரைன் செல்லவில்லை. ஆனால் விரிச்சுவலாகப் பல மாதங்களாக அங்கேயேதான் உள்ளேன். ஒவ்வொரு நாளும் போர்க்காட்சிகளைப் பார்க்கிறேன். ஒரு ஊரை முற்றுகையிடுவது முதல் எப்படி முன்னேறுகிறார்கள் அல்லது எப்படி தடுத்து நிறுத்துகிறார்கள் என்பது வரை நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது நுட்ப சாத்தியங்களால் கிடைக்கிறது. நவீன யுத்தம் என்பது எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை மிக நெருக்கமாக கவனித்துக்கொண்டிருக்கிறேன். தவிர ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து சர்வதேசச் செய்தித் தாள்களைப் படிக்கிறேன்.

நேசகனம் சானல்: சமூக வலைத்தளங்கள் தவிர்த்து வேறு எங்கு எழுதலாம்..? வாய்ப்புகள் எங்குள்ளன..?

எல்லா இடத்திலும் இருக்கிறது. யூட்யூப், ஃபேஸ்புக், பத்திரிகை, புத்தகங்கள், தமிழ் சினிமா, ரேடியோ, தொலைக்காட்சி என கண்டன்ட் ரைட்டிங்கிற்கான தேவை இல்லாத இடமே இல்லை என்ற நிலை உள்ளது. எழுத ஆளில்லை என்பதே உண்மை.

ரவிச்சந்திரன்: குற்ற உணர்வு காரணமாகக் கேள்வி கேட்காமல் இருக்கிறேன். எத்தனை முயன்றாலும் எது எனக்கு மனத்தடை என்று தெரியவில்லை..? உங்கள் ஆலோசனை என்ன..?

அது மனத்தடை அல்ல. சோம்பேறித்தனம். உடல் வளைந்து எழுதவோ படிக்கவோ உட்கார வேண்டும். நடைப்பயிற்சி போலத்தான். இரண்டாயிரம் அடி நடக்க முடியாதவர்கள் பயிற்சி செய்யச்செய்யப் பதினைந்தாயிரம் அடி நடக்க முடிகிறது. இன்னமும் கூட்டமுடியும். பழக்கத்தின் அடிப்படையில்தான் எதுவும் சாத்தியம். எழுத்தும் அப்படித்தான்.

சிவகிஷோர்: எழுத்தின் வெற்றி தொடர்ந்து எழுதுவது. நாங்கள் பிளாக் ஆரம்பித்து தொடர்ந்து எழுதுகிறோம். அபுனைவைத் தொடரும் அளவு புனைவை தொடரமுடியவில்லை. இதற்கு ஏதேனும் பயிற்சி இருந்தால் சொல்லுங்கள்.

ஐடியா தெளிவாக இருந்தால் எழுத்து தெளிவாக வந்துவிடும். எழுத முடியவில்லை எனில் ஐடியா தெளிவில்லை என்று அர்த்தம். பாதைத் தெளிவும் தினசரி பயிற்சியும் மிகவும் முக்கியம். மாஸ்டர்ஸைப் படியுங்கள். ஆரம்ப காலத்தில் வாசிப்பிலிருந்து விலகிப்போனால் எழுத்து வராது.

தியாகராஜன்: எழுதினால் பிரச்னை வரும் என்ற விஷயங்களை எவ்வாறு அணுகுவது? பிரச்னை வந்தால் என்ன செய்து தப்பிப்பது?

அதற்குப் பயந்தால் எழுத முடியாது. விளைவுகளைப் பற்றி யோசித்தால் எந்தச் செயலும் செய்ய முடியாது. துணிந்து எழுதுங்கள். எழுத்து மூலம் அடிபட நேர்ந்தால் சீக்கிரம் பிரபலமாகிவிடுவீர்கள்.

மங்கை: மெட்ராஸ் பேப்பர் ஐடியா எப்படி வந்தது? இது எந்தளவு மக்களைச் சென்றடைகிறது?

மெட்ராஸ் பேப்பர் ஐடியாவிற்கு காரணம் புக்பெட் வகுப்பிற்குப் படிக்க வந்த மாணவர்கள். பல திறமைசாலிகள் சரியான பிளாட்ஃபார்ம் இல்லாமல் இருக்கிறார்கள் என அவர்களுக்காக ஆரம்பித்தது தான். வெளி ஆள்களும் இங்கே எழுதுவார்கள் என்றாலும் முதலிடம் புக்பெட் மாணவர்களுக்குத்தான். வாசக வரவேற்பு நன்றாக இருக்கிறது. இன்னும் இது பெருகினால் மகிழ்ச்சி.

(இந்நிகழ்ச்சியின் முழுத் தொகுப்பை இங்கே காணலாம்.)

தொகுப்பு: ஶ்ரீதேவி கண்ணன்

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!