“கடந்த எட்டு வருடங்களில் என் வாழ்வில் நடந்த அனைத்து நல்ல விஷயங்களும், நான் 2016-இல் எடுத்த ஒற்றை முடிவின் பலன்களாக விளைந்தவைதான். ஆம்…. அப்போதுதான் என்னுடைய வலைத்தளப் பக்கத்தைத் தொடங்கினேன்.”
ஐந்தரை மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் யு டியூப் பிரபலம் அலி அப்டால் கூறியவை இவை.
29 வயதாகும் அலி படித்தது மருத்துவம். அதுவும் லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில். அதோடு, இரண்டு வருடங்கள் லண்டன் தேசிய மருத்துவச் சேவை மையத்தில் இளம் மருத்துவராகப் பணியும் புரிந்தார். அவரது தாயும் மருத்துவர். இவர் பிறந்தது பாகிஸ்தானில், இப்போது வசிப்பது லண்டன்.
அதெல்லாம் சரி…. மருத்துவர் எப்படி யு டியூபர் ஆனார்? மேலும் விவரத்திற்கு அவரது பக்கத்தை எட்டிப் பார்த்ததில், இணைய / வலைத் தளப் பக்கங்களின் மூலம் மட்டுமே ‘பத்து வருடங்களில் பத்து மில்லியன்களுக்கும் மேல் எப்படிச் சம்பாதித்தார்’ என்ற காணொளி ஒன்று சில தினங்களுக்கு முன்பு பதிவேற்றப்பட்டிருந்தது. நேர மேலாண்மை, திட்டமிடுதல் சார்ந்து அண்மையில் புத்தகம்கூட எழுதியிருக்கிறார். அது இப்போது ‘நியூயார்க் டைம்ஸ்’ பெஸ்ட்செல்லர் அலமாரியில் இடம்பிடித்துள்ளது. இவர் சில இணைய வகுப்புகளையும் நடத்தி வருகிறார், அதோடு pod cast எனப்படும் உரையாடல் நிகழ்ச்சிகள், பொருள்களைப் பற்றிய ரெவியூ காணொளிகள் என இணையத்தின் மூலம் இவரது வருமானம் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் இருபத்திரண்டரை லட்சங்கள், கவனிக்க இது ஒரு வாரத்திற்கான வருமானம் மட்டுமே.
பன்னிரண்டு வயது அலி, பள்ளியில் இருக்கும் கணினி அறையில், அவருடைய சீனியர் மாணவர் கூகிள் பக்கத்தில் ‘ரைட் கிளிக்’ செய்து எதையோ செய்துகொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்திருக்கிறார். வரி வரியாக இருந்த அந்த கம்ப்யூட்டர் கோடுகளைப் பார்த்து தானும் கோடிங் செய்யும் முறையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வர, அதைக் கற்றுக்கொண்டு தெரிந்ததும், நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் வலைத்தளப் பக்கத்தை வடிவமைத்துக் கொடுப்பது, அதை மேம்படுவது எனச் செய்து வந்தார்.
Add Comment