Home » Home 30-11-2022

வணக்கம்

இந்த இதழின் மொழிப் புதையல் பக்கங்களை வழக்கமான பத்திரிகைக் கட்டுரைகளைப் போலல்லாமல், சற்று நிறுத்தி நிதானமாக, தினமொன்றாகப் படித்துப் பாருங்கள். இவை சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் எப்படித் துள்ளி எழுந்து பொலிந்து நின்றது என்பதைப் பறைசாற்றும்.

பாரதி, உவேசா, வஉசி, பிச்சமூர்த்தி, லாசரா என்ற பெயர்களைச் சொன்னால் கணப் பொழுது கும்பிட்டுவிட்டு நகர்ந்துவிட ஒரு சாராரும், யார் அவர்கள் என்று கேட்க ஒரு தலைமுறையும் இன்று உள்ளனர். ஆனால் மொழியின் மீது இம்முன்னோடிகள் கொண்டிருந்த ஆளுமை மிகப் பெரிது. இன்றைக்கு எழுதப்படுகிற சேதாரத் தமிழுக்கும் அவர்கள் வளர்த்த மொழிக்கும் சம்பந்தமே கிடையாது. தவம் இருந்து பெற்றதொரு பெண் குழந்தையைப் போல அவர்கள் மொழியை வளர்த்திருக்கிறார்கள். தனித்தமிழ் ஒரு பக்கம். மணிப்பிரவாளம் ஒரு பக்கம். அடுக்கு மொழி ஒரு பக்கம். அமைதியும் ஆழமும் பொதிந்த எழுத்து ஒரு பக்கம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக எழுதினாலும் யாரும் மொழிச் சிதைவுக்கு இடமளித்ததில்லை.

மொழி சார்ந்த கவனமும் அக்கறையும் ஏன் நமக்கு முக்கியமாகிறது? ஏனெனில், அதைத் துறந்த தலைமுறையின் காலத்தில்தான் பிற மொழித் திணிப்பு முயற்சிகள் மேலோங்குகின்றன. தகவல் தொடர்பு என்பதற்கு அப்பால் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை என்று கருதப் பயிற்றுவிக்கப்படும்போதே, ஒரு தொல்மொழியின் அடையாள வேர்கள் சிதைக்கப்பட்டுவிடுகின்றன. நாம் பாப்கார்ன் சாப்பிட்டுப் பசியாறப் பழகத் தொடங்குகிறோம்.

உலகில் இதுவரை அழிந்த மொழிகளின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். அதில் வாழ்ந்தோரின் அக்கறையின்மை தவிர வேறொரு காரணம் இராது. ஆக்கிரமிப்பு அரசியல், ஏகாதிபத்திய அரசியல், திணிப்பு அரசியல் எல்லாம் இருக்கத்தான் செய்யும். காலம் தோறும் உலகெங்கும் இதெல்லாம் இருந்து வந்தவைதாம். ஆனால் நம் கவனம் என்ன? நம் அக்கறை எதில் உள்ளது? நமக்கு எது முக்கியம் என்று பார்க்க வேண்டுமல்லவா? நம் மொழியைக் காக்கவும் செழிக்கச் செய்யவும் நம் பங்கான சிறு துரும்பு என்னவென்று கணப் பொழுது சிந்திக்க வேண்டுமல்லவா?

இந்த மொழிப் புதையல் சிறப்பிதழிலேயே முருகு தமிழ் அறிவனின் ‘உயிருக்கு நேர்’ தொடர் ஆரம்பமாவது ஓர் எதிர்பாராத பொருத்தம். தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களை இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிற தொடர் இது.

இது தவிர ராஜிக் இப்ராஹிம் எழுதும் ‘கடவுளுக்குப் பிடித்த தொழில்’, உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology) சார்ந்து தமிழில் எழுதப்படுகிற முதல் தொடர். மனித குலத்தை அச்சுறுத்தும் நவீன கால நோய்த் தொற்று, மரபணுக் குளறுபடிகள், உணவுப் பஞ்சம், காலநிலை மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு சாத்தியமா? எனில், எப்போது? எப்படி? இந்தத் தொடரில் உங்களுக்கு வெளிச்சம் கிடைக்கும்.

இன்னொரு புதிய தொடர், ந. ஜெயரூபலிங்கம் எழுதும் ‘தல’ புராணம். இது வெற்றிகரமான தலைமைச் செயல் அதிகாரிகளின் (CEOs) உலகை, மன அமைப்பை, அவர்கள் சிந்திக்கும் விதத்தை, முடிவெடுக்கும் லாகவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. உலகின் அதி உயர் பதவிகளில் நம் நாட்டவர்கள் அமரும்போதெல்லாம் நாம் பெருமை கொள்கிறோம். பாராட்டி மகிழ்கிறோம். ஆனால் அந்த உயரத்தைத் தொட அவர்கள் பயணம் செய்த பாதையைக் குறித்துச் சிந்தித்திருப்போமா? இந்தத் தொடர் அதனைச் செய்கிறது.

இவை தவிர உலகக் கோப்பை கால்பந்தாண்டப் போட்டிகளை முன்வைத்து கத்தாரின் அளப்பரிய வளர்ச்சியின் சரிதத்தை விவரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, இராக்கில் கண்டறியப்பட்டுள்ள நீருக்கடியில் புதையுண்ட புராதன நகரம் குறித்த சிவசங்கரியின் கட்டுரை, ராகுல் காந்தியின் நடைப் பயணம் குறித்த பாண்டியராஜனின் கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் கூர்ந்து வாசிக்க ஏராளமான கட்டுரைகள் உள்ளன.

படித்து ரசித்த பிறகு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம்.

  • இங்கும் அங்கும்

    நம் குரல்

    வாழைப்பழ சோம்பேறிகள்

    தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...

    உலகம்

    கால விரயத் தேர்தல்

    ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்...

    உலகம்

    இந்தா வைத்துக்கொள், பிரதமர் பதவி!

    உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு...

    சிறப்புப் பகுதி: மொழிப் புதையல்

    புதிய தொடர்கள்

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 97

    97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 101

    101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...

    Read More
    error: Content is protected !!