வணக்கம்
இந்த இதழ், சுற்றுலா சிறப்பிதழ். இப்போது முதல் திட்டமிட்டால்தான் விடுமுறைக் காலத்தில் சென்று வர வசதி. அதை விடுங்கள். இந்தச் சிறப்புப் பகுதியின் தலையாய சிறப்பு, இதில் எழுதியிருக்கும் பெரும்பாலானவர்கள், புதிய எழுத்தாளர்கள். தொடர்ச்சியாக மெட்ராஸ் பேப்பர் அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்கள் வரிசையில் இன்று இணைந்திருப்பவர்கள்.
நீலகிரி மாவட்டம் என்றாலே ஊட்டி, குன்னூர் என்றுதான் நாம் சிந்திப்போம். ஒரு மாறுதலுக்கு மஞ்சூர் என்னும் பூவுலக சொர்க்கத்தை அறிமுகப்படுத்துகிறார் சிவராமன் கணேசன். தரங்கம்பாடி கோட்டையை அதன் வரலாற்று வாசனையுடன் சுற்றிக் காட்டுகிறார் கே.எஸ். குப்புசாமி. கர்நாடக மாநிலம் கூர்கில் உள்ள யானைகள் சரணாலயம் குறித்து வினுலா எழுதியுள்ள கட்டுரையைப் படித்த மறுகணம் ஒரு யானைக் குட்டியைத் தழுவிக் கொஞ்ச வேண்டும் என்கிற வேட்கை உண்டாவதை உணர்வீர்கள். சிலிர்ப்பூட்டும் முர்தேஷ்வர் பயணம் குறித்து காயத்ரி. ஒய் எழுதியுள்ள கட்டுரை, தென் கர்நாடகத்தின் ஏழு திருத்தலங்களுக்கு உங்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று சுற்றிக் காட்டும் நா. மதுசூதனன் எழுதியுள்ள கட்டுரை, அமிர்தசரஸ் பொற்கோயில் யாத்திரை குறித்து நந்தினி கந்தசாமி எழுதியுள்ள கட்டுரை - ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவம், வேறு வேறு ருசி. எழுத்துலகை நாளை ஆளப்போகும் இப்புதியவர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
சென்ற வாரம் முழுதும் நாம் சிவராத்திரியை முன்னிட்டு சிவனை நினைத்தோமோ இல்லையோ, ஜக்கி வாசுதேவைக் குறித்து நிறையப் பேசினோம். சமூக ஊடகங்களில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வேறு எதுவுமே கிடையாது. ஜனாதிபதி வந்தது, தமன்னா வந்தது, உருவேற்றிய ருத்திராட்சம், ஆனந்தக் களி நடனம் என்று அது ஒன்றுதான் பேச்சு. எவ்வளவோ கார்ப்பரேட் சாமியார்களை இத்தேசம் கண்டிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்துக்கு ஒருவர் இருப்பார். ஆள்பவராக இல்லாவிட்டாலும் ஆட்டி வைப்பவராக. இக்காலம் கையிலேந்தியிருக்கும் நட்சத்திர கார்ப்பரேட் சாமியார், ஜக்கி வாசுதேவ். நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் அத்தனை பேரையும் தன் வயப்படுத்துவது எளிதல்ல. எப்படி அவர் இதனைச் சாதித்தார்? ஒரு கொலைக் குற்றச்சாட்டில் தொடங்கிய அவரது வாழ்க்கை இன்றடைந்திருக்கும் உயரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஆனால் கூர்ந்து கவனிக்க வேண்டியது. ஜக்கியைக் குறித்து இந்த இதழில் கோகிலா பாபு எழுதியிருக்கும் கட்டுரை, இன்று வரையிலான அவரது வாழ்வின் முக்கியக் கண்ணிகளைக் கோத்து, அதன் மூலம் அவரது இருப்பும் செயல்பாடும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்று ஆராய்கிறது. தவற விடக்கூடாத மிக முக்கியமான கட்டுரை இது.
அதைப் போலவே அ. பாண்டியராஜன் எழுதியிருக்கும் ‘இனி என்ன ஆகும் அதிமுக?’ வழக்கு என்றால் ஒருவர் வெல்ல வேண்டும். ஒருவர் தோற்க வேண்டும். அதுவல்ல விஷயம். எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி அக்கட்சியின் விசுவாசிகளாக இருக்கும் பல லட்சக் கணக்கானவர்களின் மனநிலை இன்று எப்படி இருக்கும்? அடுத்தத் தேர்தல் என்ற ஒன்று வரும்போது பழைய உற்சாகம் மிச்சம் இருக்குமா அவர்களுக்கு? அதிமுகவின் வீழ்ச்சி என்பது இரண்டு விதங்களில் கவலைக்குரியது. முதலாவது, தமிழ்நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் போவது. இரண்டாவது, மதவாத சக்திகள் ஊடுருவ வழி செய்வது. இரண்டுமே பெரும் பிரச்னைகள். இந்தக் கட்டுரை அப்பிரச்னையின் ஆழத்தைச் சரியாகப் புரிய வைக்கும்.
இவை தவிர ஆ. பாலமுருகன் எழுதியுள்ள கட்டுரை, அமெரிக்காவில் பரவும் புதிய போதைப் பொருள் குறித்த ஆழமான அலசலைத் தருகிறது. இது நம்மை நெருங்காதிருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நிறைந்துவிட்டது. போர் இன்னும் ஓயவில்லை. அவலங்கள் தீரவில்லை. இது பற்றியதொரு விரிவான கட்டுரையை பத்மா அர்விந்த் எழுதியிருக்கிறார்.
இதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். அடுத்த வாரம் மகளிர்தின சிறப்புப் பக்கங்களுடன் சந்திப்போம்.