Home » டி.ஆர். மகாலிங்கம்: நூற்றாண்டு நாயகன்
வெள்ளித்திரை

டி.ஆர். மகாலிங்கம்: நூற்றாண்டு நாயகன்

தமிழ் சினிமாவின் ஆதிகால சூப்பர் ஸ்டாருக்கு இது நூற்றாண்டு நேரம்.

‘ஆதித்தன் கனவு’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்தக் கதாநாயகரின் மேல் மக்கள் கல்லெறியும் காட்சி ஒன்று இருந்தது. அந்தப் படத்தில் துணை நடிகராக நடிக்க வந்த ஒரு நடிகர் தனது ஆதர்ச நடிகர் மற்றும் பாடகர்மீது கல்லெறிய முடியாது என மறுத்து விட்டார். அதற்காக இயக்குநரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். காலத்தின் கோலம் அந்தத் துணை நடிகர் கதாநாயகனாக நடித்த படத்தில் பிற்காலத்தில் அந்தக் கதாநாயகர் ஒரு துணைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சூழ்நிலை வந்தது.

சோழவந்தானில் உள்ள அக்கிரகாரத்தில்தான் அவர்கள் குடும்பம் வசித்து வந்தது. அந்த வீட்டிற்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை மற்றும் கண்ணாடி அணிந்திருந்த மனிதர் கதவைத் தட்டினார். வெளியே வந்த ராமகிருஷ்ண கனபாடிகளிடம், “இந்த வீட்ல ஒரு பையன் ரொம்ப பிரமாதமாப் பாடுவானாமே. அவனைப் பாக்கணும். அவனைச் சினிமாவில் நடிக்க வைக்கலாம்னு இருக்கேன். அனுமதிக்கணும்” என்று கேட்டிருக்கிறார். வேதத்தில் ஊறிக்கிடக்கும், வேதம் படித்துக் கொண்டிருக்கும் சிறுவனாவது சினிமாவில் பாடுவதாவது.? “மன்னிக்கணும் ஐயா, போய் வாருங்கள்” என்று உள்ளேகூட அழைக்காமல் திருப்பியனுப்பி விட்டார் அவர்.

அந்தத் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார். அந்தச் சிறுவன்தான் தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் (டி.ஆர். மகாலிங்கம்). கல்லெறிய மறுத்த அந்தத் துணை நடிகர் சீர்காழி கோவிந்தராஜன். இவருடன் சேர்ந்து ‘அகத்தியர்’ படத்தில் நடித்தவர் மகாலிங்கம்.

‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘திராவிட நாடே’, என்று காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைப் பாடியவர் மகாலிங்கம். உச்சஸ்தாயியில் வார்த்தைகளை ஸ்பஷ்டமாக உச்சரித்து பாடல்களைப் பாடி நடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அவர். அந்தக் காலங்களில் பாடகர்கள் மட்டுமே நடிகர்களாகப் புகழ் பெற முடியும். பெரிய அளவு ஒலிபெருக்கிகளோ ஒலிப்பதிவுக் கருவிகளோ இல்லாத நாட்கள் அவை. சத்தமாகப் பாடினால் மட்டுமே கடைசி வரிசை மக்களையும் நாடகங்களில் நெருங்க முடியும். அதனால் அதுவொரு திறமையாக மட்டுமல்ல.. பெருமையாகவும் இருந்த காலகட்டம்.

வேதம் படிக்க ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்ட மகாலிங்கத்திற்கு அதன்மேல் ஈடுபாடு சற்றும் வரவில்லை. அவரது கவனம், ஆசை எல்லாம் பாடுவது மட்டுமே என்றாகிப் போனது. அவரைக் கண்டித்து பாடசாலைக்கு அனுப்பியதால் வீட்டை விட்டு ஓடிப்போக முயற்சி செய்தார். அவரது தந்தையும் வேறு வழியின்றி அவரை வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள அனுமதித்தார். சீனிவாச அய்யங்காரிடம் முறைப்படி பயின்ற மகாலிங்கம் பத்து வயதிலிருந்து செல்லூர் சேஷ அய்யங்கார் குழுவில் சேர்ந்து பஜனைகள், கோவில் விசேஷங்களில் பாடவாரம்பித்தார். எஸ்.ஜி.கிட்டப்பாதான் அவரது ஆதர்சம். அவரை அடியொற்றி அவர் பாணியில் பாண்டித்யம் பெறவேண்டும் என்பதே இவர் லட்சியம். இவரே பின்னால் அவரது வாரிசாகவும் அறியப்பட்டார். இப்படி மகாலிங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடலைக் கேட்டு ஏவி.எம் அவரைத் திரைப்படத்தில் நடிக்க அழைத்தார்.

மகாலிங்கத்தின் சகோதரர் சுந்தர சாஸ்திரிகள்தான் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து அனுமதியும் பெற்றுத் தந்தார். சிறுவனான மகாலிங்கத்திற்கு அவர்தான் மேலாளர், பாதுகாவலர் எல்லாம். 1937-இல் ‘நந்தகுமார்’ என்ற படத்தில் சிறு வயது கிருஷ்ணனாக அறிமுகமானார் மகாலிங்கம். மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் பாடல்கள் ரசிக்கப்பட்டன.

நாடகங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். தொடர்ந்து இசை நாடகங்களில் நடித்து வந்தார் மகாலிங்கம். பாட்டுக்குப் பாட்டு. நடிப்புக்கு நடிப்பு. திரும்ப வந்தது ஒரு பொன்னான வாய்ப்பு அதே ஏவி.எம். நிறுவனத்தில் இருந்தே. அதன் தயாரிப்பில் இவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘ஸ்ரீ வள்ளி’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பாடல்களும் மகாலிங்கத்தின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டு ஐம்பத்தி இரண்டு வாரங்களைக் கடந்து ஓடியது அந்தப் படம். அதைத் தொடர்ந்து ‘நாம் இருவர்’. சுதந்திர போராட்ட காலத்தில் வெளிவந்த இந்தப் படம் மகாலிங்கத்தை உச்ச நட்சத்திரமாக்கி விட்டது. அதில் சுகுமாரன் என்ற பெயரில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தக்கால சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் ஒரு கொலை வழக்கில் சிக்கிச் சிறைக்கு சென்று விட்டதால் அவர் நடிக்கவிருந்த வேடங்கள் இவரிடம் வந்துசேரத் தொடங்கின. ‘பூலோக ரம்பை’, ‘வேதாள உலகம்’, ‘பவளக்கொடி’, ‘ஞான சௌந்தரி’யென வரிசையாக வெற்றிப்படங்கள். கஜானா நிறைய ஆரம்பித்தது. படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேலே சம்பளம். சென்னை மயிலாப்பூரில் மிகப் பெரிய பங்களா, பதினேழு கார்கள் என ராஜ பவனி வந்தார் மகாலிங்கம்.

வெற்றியும் தோல்வியும் ஒரு வெள்ளிக்கிழமையில் மாறிவிடக்கூடிய திரையுலகின் நிலையாமை இவருக்கும் வந்தது. அனைத்து நடிகர்களுக்கும் வரக்கூடிய கூடா ஆசையான படத் தயாரிப்புதான் அது. தனது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ‘நாம் இருவர்’ கதாபாத்திரத்தின் பெயரான சுகுமார் என்பதை வைத்து ‘ஸ்ரீ சுகுமார் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் துவக்கினார். முதல் படம் ‘மச்ச ரேகை’. அவருக்கு மச்சம் சரியில்லை என்று நிரூபித்துப் படு தோல்வி அடைந்தது. விட்டதைப் பிடிப்போம் என்று அடுத்தடுத்து ‘லைலா மஜ்னு’, ‘மோகனசுந்தரம்’, ‘சின்னத்துரை’ (இவரே இயக்கிய படம் இது), ‘விளையாட்டுப் பொம்மை’ என்று வரிசையாகப் படங்கள். பெரும்பான்மையான படங்களில் கதாநாயகி எஸ்.வரலட்சுமி தான். அனைத்தும் தோல்வி. ‘தெருப்பாடகன்’ என்றொரு படத்தை ஆரம்பித்தார். அந்தப் படம் அவரைத் தெருவுக்கே கொண்டு வந்து விட்டது என்று சொல்வார்கள் அந்தக் காலத்தில்.

படங்கள் ஓடாதது போக இவர் நடித்துத் தொடங்கப்பட்டு முடியாமல் கைவிட்ட படங்களும் ஏராளம். அதனால் அவர் அடைந்த நஷ்டங்களுக்கு அளவே இல்லை. ஐந்தே படங்களில் சம்பாதித்த அனைத்தையும் இழந்து மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிட்டார். துரோகமும், பொறாமையும் நிறைந்த இந்தத் திரையுலகம் தன்னைக் கைவிடலாம். தனது இசை தன்னைக் கைவிடவே விடாது என்று சென்னைக்கு ஒரு மிகப்பெரிய கும்பிடைப் போட்டுவிட்டு தனது சொந்த ஊரான சோழவந்தானுக்கே திரும்பச் சென்று விட்டார். நாடகமே தனது வாழ்வு என்று முடிவெடுத்து தொடர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். மாதத்திற்கு இருபத்தி ஐந்து நாடகங்கள்கூட நடித்திருக்கிறார்.

ஏறியவர் இறங்குவதும், இறங்கியவர் ஏறுவதும் விதியின் விளையாட்டுத் தானே. மகாலிங்கத்தின் திரையுலக மறுபிரவேசம் 1958-இல் கவியரசர் கண்ணதாசனால் நிகழ்ந்தது. அவரது தயாரிப்பில் விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் வெளியான ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் மகாலிங்கம்தான் நடிக்க வேண்டும் அடம் பிடித்தார் கண்ணதாசன். பலரும் ஆட்சேபிக்க நான் கேட்கமாட்டேன் என்று சோழவந்தான் சென்றார். அவரை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தார். பதினேழு பாடல்கள் அனைத்தும் முத்துக்கள். படம் மாபெரும் வெற்றி. அதன் பிறகு குணச்சித்திர வேடங்களுக்கு மாறிய மகாலிங்கம், ‘திருவிளையாடல்’, ‘ராஜராஜ சோழன்’, ‘அகத்தியர்’, ‘திருநீலகண்டர்’, ‘கவலை இல்லாத மனிதன்’ என நடிக்க ஆரம்பித்தார். தான் நடிக்கும் படங்களில் பாடி நடிக்கும் வேடங்களாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வார். நடிகராக மட்டும் நடித்துப் பின்னணி இன்னொருவர் பாட ஒப்புக் கொள்ளவே மாட்டார். இதற்கு மட்டும் ஒப்புக் கொண்டிருந்தால் மேலும் பல படங்கள் நடித்திருக்கலாம்.

உச்சஸ்தாயியில் மட்டுமே பாடப் பழகியிருந்த பி.யு.சின்னப்பா, எஸ்.ஜி.கிட்டப்பா, மகாலிங்கம், போன்ற அந்தக் காலப் பாடகர்கள் மீதிருந்த ஈர்ப்பு, பி.பி.சீனிவாஸ், ஏ.எம்.ராஜா, ஜேசுதாஸ், டி.எம்.எஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எனப் புதுப்பாடகர்களின் வித்தியாசமான குரல் மற்றும் இயல்பான தமிழ்ப் பாடல்களால் குறைய ஆரம்பித்தது. பாடல்களால் நிரம்பியிருந்த படங்கள் வசனங்களால் புகழ்பெறத் தொடங்கின. பாடல்களின் எண்ணிக்கைகளும் குறையவாரம்பித்தன- இவரது வாய்ப்புகளைப் போல.

பணம் இருந்தாலும் போனாலும் தனது இசையும் கலையும் மட்டுமே போதும் என்று கடைசி வரை வைராக்கியமாக வாழ்ந்து வந்தவர் மகாலிங்கம். சென்னையை விட்டுச் சோழவந்தானிற்கு குடிபெயர்ந்த பிறகு அங்கு அவர் கட்டிய பண்ணை வீட்டில் படப்பிடிப்புகளும் நடந்தன. எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர் என மூவரிடமும் சிநேகம் பாராட்டி வந்தவர் இவர். இவர் பாடிய ‘திராவிட நாட்டினிலே’ பாடல் திமுகவின் பிரச்சார பாடல் போல அனைத்துக் கூட்டங்களிலும் முதலில் ஒலிபரப்பப்பட்டது.

திரையிசைப் பாடகர்களில் ஜேசுதாஸ்-ஜெயச்சந்திரன், எஸ் பி பி- மனோ எனப் பாடகர்களில் ஒருவரைப் போல இன்னொருவர் பாடுவதுண்டு. அப்படி முயற்சி செய்யமுடியாத குரலை உடைய ஒரே பாடகர் டி ஆர் மகாலிங்கம் மட்டுமே.

பட வாய்ப்புகளைத் தவிர்த்தாலும், சுத்தமாக இல்லாமல் போனாலும் தொடர்ந்து மேடைக் கச்சேரிகளும் நாடகங்களும் நடித்து வந்தார். 1978-ஆம் ஆண்டு ஏப்ரல் இருபத்தொன்றாம் தேதி கோவையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு அவர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்திதான் வந்தது.

இது நடந்தது சித்ரா பௌர்ணமிக்கு முதல் நாள். இதை முடித்துவிட்டு மறுநாள் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதை பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். பொதுவாக இறப்பது போல நடிக்காமல் இருந்த அவர் ஒரு படத்தில் சித்ரா பௌர்ணமிக்கு முந்தைய நாள் நாகம் தீண்டி இறப்பது போல ஒரு காட்சியில் நடித்திருந்தாராம். அவரது மரணமும் அதே போலப் பின்னொரு நாளில் நடந்ததும் வியப்புத்தான்.

அவர் மரணம் அடைந்த பிறகு அவரது டயரியை எடுத்துக் பார்க்கும்போது கிட்டத்தட்ட எழுபதிற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்குத் தேதி கொடுத்திருந்தாராம். அந்த அளவு தன்னை ஆளாக்கிய இசைக்கும் நாடகத்திற்கும் தன்னை அர்ப்பணித்திருந்தார் இந்த அற்புதக் கலைஞன்.

அவரது நூற்றாண்டு விழாவை அவர் வாழ்ந்த சோழவந்தான் பண்ணை வீட்டில் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் அவர் மகன் வயிற்றுப் பேரனான ராஜேஷ் மகாலிங்கம்.

நா மதுசூதனன்
mathusuthanan.n@gmail.com

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!