தமிழ்த் திரைப்பட சண்டைக்காட்சிகள் – பாகம் 1/3
எம்ஜியார், மற்போர், சிலம்பம், வாட்போர், குத்துச்சண்டை, சுருள் கத்தி வீச்சு எனப் பல சண்டைக்கலைகளைத் திரையில் அனாயாசமாகச் செய்துகாட்டினார். அந்தக் கலைகளின் ஆசானாக அவரை ரசிகர்கள் ஏற்றனர், அதனால் அவருக்கு ‘வாத்தியார்’ என்னும் பட்டத்தை அளித்தனர். எம்ஜியாருக்கு முன்னும் தமித் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் இருந்தன, எம்ஜியாருக்கு பின் வந்த கதாநாயக நடிகர்களும் தமிழ்த் திரைப்பட சண்டைக்காட்சிகளை அடுத்தடுத்த தளங்களுக்கு உயர்த்திச் சென்றனர். இருப்பினும், சண்டைக்காட்சி என்றால் ‘வாத்தியார்’ என்பது எழுதப்படாத சட்டமாகத் தமிழ்த் திரையில் நிலைத்துவிட்டது. அவருடைய பெயருக்குத் தமிழ்த் திரையில் இருந்த பிரம்மாண்டத்தை இன்றைய தலைமுறையினருக்கு விளக்குவது கடினம்.
மலைக்கள்ளனிலிருந்து மீனவ நண்பன் வரை அவரது திரைப்படங்களில் வாட்போர்க் காட்சிகள் இடம்பெற்றன. அவர் பல வகை வாள்களைத் தன் சண்டைகளில் பயன்படுத்தியிருப்பார். குறுவாள், கேவல்ரி வகை நீளமான வாள், அரேபியப் பாணியில் வளைந்த சிறிய வாள், நீளமான வாளும் குறுவாளும், வாளும் கேடயமும், ஈட்டியும் கேடயமும் என அனைத்து வகை ஆயுதங்களும் அவருடைய சண்டைக்காட்சிகளில் இடம்பெற்றன. அதைப்போலவே, சிலம்பச் சண்டையும் வெவ்வேறு வகைகளில் அவருடைய படங்களில் இடம் பெற்றன. அவருக்கு எதிராகத் திரையில் சிலம்பக் காட்சிகளில் நடித்த எம்.என்.நம்பியார், சின்னப்பா தேவர், ஜஸ்டின் என அனைவரும் சிலம்பக்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள்.
எம்ஜியாரின் சிலம்பச்சண்டைகள் எல்லா திரைப்படங்களிலும் ஒன்றுபோல இருக்காது. ஒவ்வொரு சண்டையிலும் வேறுபாட்டைக் காட்டியிருப்பார். படகோட்டி திரைப்படத்தில் இரவில் நடக்கும் சண்டைக்காட்சியில் பருமனான சிலம்பத்தை வீசுவார். அந்த வீச்சு ஒப்பீட்டளவில் அவருடைய மற்ற வீச்சுகளைவிடக் குறைவான வேகத்தில் இருக்கும். அதே போல இரவில் நடக்கும் சண்டைக்காட்சியில் உரிமைக்குரல் திரைப்படத்தில் மெல்லிய சிலம்பத்தை வீசுவார். இதில் வீச்சுகள் மிகவும் வேகமாக இருக்கும். இரண்டும் சிலம்பம், இரண்டும் இருளில் நடக்கும் சண்டையென்றாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு திரையில் தெளிவாகத் தெரியும்.
Add Comment